முதலீடு என்றாலே பாரம்பரியமான முதலீட்டு கருவியான தங்கம் சிறந்ததா அல்லது பங்குச்சந்தை முதலீடுகள் சிறந்ததா என்ற விவாதம் எழுந்துவிடுகிறது. 1947, ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் தற்போது வரை பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.
இத்தனை ஆண்டுகளில் இந்தியாவில் தங்கம் அதிக லாபம் தந்துள்ளதா அல்லது ஈக்விட்டி சந்தைகளில் செய்த முதலீடு அதிக லாபம் தந்துள்ளதா என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

1947ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் தங்கத்தின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது . இந்தியா சுதந்திரம் அடைந்த 1947இல் 24 கேரட் கொண்ட 10 கிராம் தங்கத்தின் விலை வெறும் 88 ரூபாயாகத்தான் இருந்தது. அதுவே தற்போது 24 கேரட் கொண்ட 10 கிராம் தங்கத்தின் விலை மதிப்பு 75 ஆயிரம் ரூபாயை எட்டியிருக்கிறது.
அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் தற்போது வரை இந்த 78 ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஆண்டுதோறும் சராசரியாக 9 சதவிகித காம்பவுண்டிங் வளர்ச்சியை(CAGR) பெற்றுள்ளது.
இதுவே நமது பங்குச்சந்தையை பார்க்கும் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டான சென்சஸ் 1979ஆம் ஆண்டு 100 புள்ளிகளோடு வர்த்தகமாகி வந்த நிலையில் தற்போது அது 82 ஆயிரம் புள்ளிகள் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது சென்செக்ஸின் வளர்ச்சி என்பது ஆண்டுதோறும் சராசரியாக 16 சதவிகித காம்பவுண்டிங் வளர்ச்சியை(CAGR) அடைந்துள்ளது.
மாஸ்டர் கேபிடல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் பால்கா அரோரா சோப்ரா இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், "இந்தியாவைப் பொறுத்தவரை நீண்ட காலமாகவே பாதுகாப்பான அதே வேளையில் அந்தஸ்து தரும் ஒரு முதலீடாகத் தான் தங்கம் இருந்து வருகிறது.
10 கிராம் தங்கத்தின் விலை கணிசமான வளர்ச்சியை கண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது. 1975 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை 10 கிராம் 540 ஆக இருந்து தற்போது சுமார் 75 ஆயிரம் வரை எட்டி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உலக அளவில் கலாச்சார ரீதியாக தங்கம் முக்கிய அங்கம் வகிக்கிறது அது மட்டும் இன்றி பாதுகாப்பான முதலீடாக தனி நபர்களும் சரி அரசாங்கங்களும் சரி தங்கத்தையே கருதுகின்றன. இது ஒரு முக்கிய காரணம்" என்கிறார்.
"இருந்தாலும் ஈக்விட்டியை பொருத்தவரை தனிநபருக்கும் இது வளர்ச்சியை தருவதோடு நீண்ட கால அடிப்படையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கிறது.
இந்திய ஈக்விட்டி சந்தைகள் 1950 முதல் 70களில் பார்க்கும்போது மிக மோசமான நிலையில் தான் இருந்தன. ஏனெனில் பெரும்பாலானவர்களுக்கு ஈக்விட்டி சந்தைகள் மீது நம்பிக்கை ஏற்படவில்லை.
1980 களுக்குப் பிறகு தான் ஈக்குவிட்டி சந்தைகள் கணிசமான வளர்ச்சியை பெற்றன. எனவே தங்கம் மற்றும் ஈக்விட்டி ஆகிய இரண்டுமே தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளன. எனவே இரண்டிலும் சமமாக முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும்" என்கிறார்.
ஆர்எஸ்பிஎல் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் பிரித்விராஜ் கோத்தாரி தெரிவிக்கையில் " தங்கம் மற்றும் ஈக்விட்டி ஆகிய இரண்டையும் பார்க்கும்போது அதிக லாபம் தரக்கூடிய வாய்ப்பு ஈக்விட்டி சந்தையில் தான் இருக்கிறது. சர்வதேச அளவில் ஒரு பதற்றம் ஏற்படும் போது பாதுகாப்பான முதலீடாக தங்கம் தான் பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாகவே தங்கத்தின் விலை எப்போதும் ஏறுமுகத்திலேயே இருக்கிறது. ஈக்விட்டியும் வளர்ச்சி அடையும் முதலீடு தான் ஆனால் ஏற்ற இறக்கங்கள் கொண்டது. எனவே எந்த ஒரு ஏற்ற இறக்கங்களுக்கும் தயாராக இல்லை என நினைப்பவர்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம் , அதற்கு தயாராக இருப்பவர்கள் ஈக்விட்டி சந்தைகளில் முதலீடு செய்யலாம்" என்றும் தெரிவிக்கிறார்.


Click it and Unblock the Notifications