சில மாதங்களுக்கு முன்பு தான், பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே பணத்தை எடுக்க முடியும் எனச் செய்திகள் வெளியானது.
அந்த பிரச்சனையே இன்னும் முழுமையாகத் தீர்ந்த பாடில்லை. அதற்குள் இந்தியாவில் மீண்டும் யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு மேலே சொன்ன சிக்கல் எழுந்து இருக்கிறது.
யெஸ் பேங்க்-ஐ அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் யெஸ் பேங்க்-ல் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்கள் மொத்த பணத்தில் இருந்து, 50,000 ரூபாய் மட்டுமே பணம் எடுக்க முடியும்.
பணம் எடுப்பது
யெஸ் பேங்க்-ல் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர், எத்தனை கணக்கை வைத்திருந்தாலும், 50,000 ரூபாய் மட்டுமே பணம் எடுக்க முடியும். அதற்கு மேல் பணம் எடுக்க வேண்டும் என்றால், மத்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து எழுத்துப் பூர்வமாக கடிதம் வாங்கி வர வேண்டுமாம்.
எத்தனை நாட்களுக்கு
இந்த விதிமுறை வரும் ஏப்ரல் 03, 2020, வெள்ளிக் கிழமை வரை நீடிக்கும் என மத்திய அரசின் நிதி அமைச்சகம் சொல்லி இருப்பதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. ஒருவேளை யெஸ் பேங்க் வாடிக்கையாளர், வங்கிக்குச் செலுத்த வேண்டிய பாக்கி தொகை ஏதாவது இருந்தால், அவைகளை கழித்துக் கொண்டு தான் பாக்கி பணம் தருவார்களாம்.
5 லட்சம் வரம்பு
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிப் பிரச்சனையை நினைவில் வைத்துக் கொண்டு, இந்த முறை மத்திய ரிசர்வ் வங்கி ஆறுதலாக ஒரு விஷயத்தைச் செய்து இருக்கிறது. அது தான் 5 லட்சம் ரூபாய் வரைக்குமான வரம்பு. யெஸ் பேங்க் வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சம் ரூபாயை எல்லோரும் எடுக்க முடியாது.
யார் எடுக்கலாம்
1. மருத்துவ செலவுகள் இருப்பவர்கள்
2. உயர் கல்விக்கு பணத்தைச் செலவழிக்க இருப்பவர்கள்
3. திருமணம் போன்ற அத்தியாவசியச் செலவுகள்
4. தவிர்க்க முடியாத செலவுகள் போன்றவைகளுக்கு மட்டுமே, யெஸ் பேங்க் வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சம் ரூபாயை எடுக்க ஆர்பிஐ அனுமதி வழங்க வாய்ப்பு இருக்கிறதாம்.
சார்ந்தவர்களுக்கு
மேலே சொன்ன காரணங்கள், வங்கியில் பணம் போட்டு இருப்பவர்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கும் பொருந்தும். உதாரணமாக: ஷியாம் யெஸ் பேங்க் வங்கிக் கணக்கில் 6 லட்சம் ரூபாய் வைத்திருக்கிறார். அவர் மகன், மகள், மனைவி, பெற்றோர்கள் போன்றவர்களுக்கு மேலே சொன்ன தேவைகளில் ஏதாவது இருந்தால், அதைக் குறிப்பிட்டு 5 லட்சம் ரூபாயைக் கொடுக்கச் சொல்லி ஆர்பிஐ இடம் அனுமதி கேட்கலாம்.


Click it and Unblock the Notifications