சென்னை: 2025 ஆம் ஆண்டு தங்கத்திற்கான ஆண்டு எனக் கூறலாம் அந்த அளவிற்கு தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்வு கண்டிருக்கிறது.
தங்கம் விலை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளால் உலக அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலையற்ற தன்மை, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா அரசாங்கம் விதித்திருக்கும் அதிகபட்ச இறக்குமதி வரி , சர்வதேச பங்குச்சந்தைகள் வீழ்ச்சி டாலரின் மதிப்பு குறைந்து வருவது என பல்வேறு காரணிகளும் உலக அளவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றன.

ஏன் விலை உயர்கிறது: இந்தியாவிலும் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றத்தை கடந்த எட்டு மாத காலத்திலேயே காண முடிந்திருக்கிறது . பங்குச்சந்தைகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி 2025 ஆம் ஆண்டில் அதிக லாபம் தந்த ஒரு முதலீடாக தங்கம் மாறி இருக்கிறது . தங்கத்தின் டிமாண்ட் அதிகரிக்க அதிகரிக்க அதன் விலையும் அதிகரிக்கிறது. சர்வதேச பொருளாதார நிலையற்ற தன்மை பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கி அனைவரையும் பயணம் செய்ய வைக்கிறது. பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை அதிக அளவில் வாங்கி வைப்பதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது.
ஜனவரி 1ஆம் தேதி விலை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த எட்டு மாதங்களில் பெரிய மாற்றத்தை கண்டிருக்கிற,து ஒரு சவரனுக்கு தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை கேட்டால் நாமெல்லாம் பேரதிர்ச்சி அடைந்து விடுவோம் . சென்னையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமின் விலை 7,150 ரூபாய் அதாவது 2025 ஆம் ஆண்டின் முதல் நாளில் சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 57,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
வரலாறு காணாத உச்சம்: அப்படியே படிப்படியாக விலை ஏற்றம் கண்டு வந்த தங்கம் பிப்ரவரி மாதம் ஒரு சவரன் 60,000 ரூபாயை எட்டியது. ஏப்ரலில் 74,000 ரூபாய் என எட்டிய தங்கத்தின் விலை மே மாதம் குறைந்தது. மீண்டும் ஆகஸ்ட் மாதம் ஏறு முகத்தை அடைந்த தங்கம் செப்டம்பர் தொடங்கி 2 நாட்களில் வரலாறு காணாத உச்சத்தை எட்டிவிட்டது.
சவரனுக்கு எவ்வளவு உயர்வு?: செப்டம்பர் 2ஆம் தேதியான இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 9, 725 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது அதாவது சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 77 , 800 ரூபாய். இந்த எட்டு மாத காலத்தில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 2575 ரூபாய் உயர்வு கண்டிருக்கிறது . இதுவே ஒரு சவரன் என பார்க்கும்போது 20,600 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.
பொதுமக்கள் ஷாக்: ஜனவரி 1ஆம் தேதி அன்று நீங்கள் ஒரு சவரன் தங்கம் வாங்கியிருந்தால் இன்றைய விலையில் 20,000 ரூபாய்க குறைந்த விலையில் வாங்கி இருக்கலாம். தங்கத்தின் விலை குறையட்டும் வாங்கிக் கொள்ளலாம் என தள்ளிப் போட்டவர்கள் எல்லாம் தற்போது ஒரு சவரனுக்கு 20,000 ரூபாயை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். இது தங்கத்தின் மீதான விலை மட்டும் தான் தங்கத்தை நாம் ஆபரணமாக வாங்கும்போது அத்துடன் செய்கூலி சேதாரம், ஜிஎஸ்டி உள்ளிட்டவையும் விதிக்கப்படுகிறது.
விலை குறையும் என காத்திருக்கலாமா: இன்றைய தேதியில் சராசரியாக ஒரு பவுன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் குறைந்தது 85 ஆயிரம் ரூபாய் வரையிலாவது நாம் செலவிட வேண்டி இருக்கிறது. இந்த எட்டு மாத காலத்தில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 36 சதவீதம் உயர்வு கண்டிருக்கிறது. எனவே தங்கத்தின் விலை குறையும் குறையும் என காத்திருக்காமல் நம் கைவசம் ஒரு கணிசமான தொகை வரும் போதெல்லாம் தங்கத்தில் முதலீடு செய்து வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த எட்டு மாத விலை ஏற்றமே நமக்கு உணர்த்தும்.


Click it and Unblock the Notifications