உலகிலேயே அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்து பயன்படுத்தக்கூடிய நாடுகளாக சீனாவும் , இந்தியாவும் இருக்கின்றன . தங்கம் இறக்குமதியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
பாரம்பரியமாகவே இரு நாடுகளை சேர்ந்த மக்களும் தங்கத்தை வாங்கி சேமிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர் . சீனா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளிலும் பண்டிகை காலம் வந்தாலே தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரிக்கும். எனவே இந்த நாடுகளிலும் தங்கம் சம்பந்தமாக அரசுகள் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் உலக தங்க வர்த்தகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சீனா ஏற்கனவே தன்னுடைய மத்திய வங்கி மூலம் அதிக தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. மறுபுறம் மக்களையும் தங்கம் வாங்கி வைக்க ஊக்குவித்து வந்தது. இந்த சூழலில் சீன அரசாங்கம் எடுத்து இருக்கக்கூடிய ஒரு நடவடிக்கை உலக சந்தையை அதிர்வடைய செய்திருக்கிறது . இது தங்கத்தின் விலை உயர்த்த வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுகின்றனர்.
சீனாவில் நவம்பர் 1ஆம் தேதி முதல் தங்க வியாபாரிகளுக்கு வழங்கி வந்த மிக முக்கியமான ஒரு வரி சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுவாக சீனாவை சேர்ந்த தங்க நகை வியாபாரிகள் ஷாங்காய் கோல்டு எக்ஸ்சேஞ்ச் மூலம் தங்கம் வாங்கி அதனை தங்க நகை, தங்க கட்டி, தங்க நாணயம் என எந்த வடிவத்தில் விற்பனை செய்தாலும், அதன் மதிப்பு கூட்டு வரியை சமம் செய்வதற்கான சலுகையை சீன அரசு தந்திருந்தது.
விற்பனையாளர்களுக்கு வரி சலுகை கிடைத்ததன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் தங்கம் கிடைத்தது. ஆனால் தற்போது அந்த சலுகையை சீன அரசாங்கம் நிறுத்தி இருக்கிறது. எனவே தங்க நகை விற்பனையாளர்கள் இனி அதிக விலை கொடுத்து தங்கத்தை வாங்க வேண்டியது இருக்கும் . தங்க நகை விற்பனையாளர்கள் இந்த சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவார்கள். இதனால் சீன சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது .
ஆனால் இந்த நடவடிக்கை சீன அரசுக்கு வருவாயை உயர்த்தும் நோக்கில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. சீன அரசாங்கத்தை பொருத்தவரை வருவாய் பெருக்குவதற்காக இப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்கிறது. சீனாவில் ரியல் எஸ்டேட் மந்தமாக உள்ளது, பொருளாதார வளர்ச்சியும் தேக்கமடைந்திருக்கிறது. இதனால் அரசின் கஜானா வேகமாக காலியாகி வருகிறது. அதை சமன் செய்வதற்காக தான் அரசாங்கம் தங்கத்திற்கான மதிப்பு கூட்டு வரி சலுகையை நிறுத்தி இருக்கிறது .
சீன அரசின் இந்த நடவடிக்கையால் சீன வாடிக்கையாளர்களுக்கு தங்கத்தின் விலையை கண்டிப்பாக உயர்த்தும். இதனால் மக்கள் தங்கம் வாங்குவது குறையும், எனவே டிமாண்ட் குறைந்து உலக சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications