டெக் மற்றும் டிஜிட்டல் சேவைகளில் செலவு செய்யும் அளவு பெரிய அளவில் குறைந்துள்ள வேளையில், இத்துறையில் இருக்கும் அனைத்து முன்னணி நிறுவனங்களும் அதிகப்படியான நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் பொழுதுபோக்கு மற்றும் ஸ்ட்ரீமிங் துறையில் இருக்கும் உலகின் முன்னணி நிறுவனமான டிஸ்னி இன்று, தனது உலகளாவிய வர்த்தகச் சந்தையில் இருந்து சுமார் 7000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தரவுகள் சிறப்பாக இருந்த வேளையில் அந்நாட்டு மத்திய வங்கி கடந்த வாரம் வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்திய காரணத்தால் கூடுதலான நெருக்கடி நிதிச் சந்தையில் உருவானது. இதன் எதிரொலியாகப் பணிநீக்கமும் அதிகரித்துள்ளது.
வால்ட் டிஸ்னி
உலகின் முன்னணி மற்றும் பிரபலமான வால்ட் டிஸ்னி நிறுவனம் புதன்கிழமை மாலை வெளியிட்ட அறிவிப்பில் சுமார் 7000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் முடிவை அறிவித்தது. இந்த அறிவிப்பு மூலம் எந்தப் பிராந்தியத்தில் அதிகப்படியான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற கேள்வி அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கும் எழுந்தது.
7000 ஊழியர்கள் பணிநீக்கம்
வால்ட் டிஸ்னி நிர்வாகம் இந்த 7000 ஊழியர்கள் பணிநீக்கத்தின் மூலம் சுமார் 5.5 பில்லியன் டாலர் அளவிலான செலவுகளைக் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் வர்த்தகப் போட்டிக்கு மத்தியில் ஸ்ட்ரீமிங் வர்த்தகத்தையும் லாபகரமானதாக மாற்ற முடியும் என வால்ட் டிஸ்னி நிர்வாகம் நம்புகிறது.
பங்குகள் உயர்வு
7000 ஊழியர்கள் பணிநீக்கத்தின் வாயிலாக வால்ட் டிஸ்னி தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 3.6 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. இந்த அறிவிப்பு வெளியான உடன் அமெரிக்கப் பங்குச்சந்தையில் வர்த்தக நேரம் முடிந்த பிறகு 4.7 சதவீதம் வரையில் உயர்ந்து 117.22 டாலராக உயர்ந்தது.
நெல்சன் பெல்ட்ஸ்
சமீபத்தில் பிரபல முதலீட்டாளர் நெல்சன் பெல்ட்ஸ் டிஸ்னி தனது ஸ்ட்ரீமிங் தளத்தில் அதிகப்படியான முதலீட்டை செய்வதாக விமர்சனம் செய்த நிலையில், பணிநீக்கம் மூலம் செலவுகளைக் குறைத்து ஸ்ட்ரீமிங் தளத்தை லாபகரமாக மாற்ற முயற்சி செய்கிறது.
3 முறை மறுசீரமைப்பு
வால்ட் டிஸ்னி கடந்த 5 வருடத்தில் சுமார் 3 முறை மறுசீரமைப்பு பணிகளைச் செய்துள்ளது. இதற்கு முன்பு பொழுதுப்போக்குத் துறையில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் டிஸ்கவரி இன்க், நெட்பிளிக்ஸ் ஆகியவை பணிநீக்கத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
சிஇஓ பாப் இகர்
2022 ஆம் ஆண்டு இறுதியில் வால்ட் டிஸ்னி செயல்பாடுகள் வளர்ச்சி பாதையில் இல்லை என்பதால் முன்னாள் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பாப் இகர் மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
மீண்டும் வந்தார் பாப் இகர்
வால்ட் டிஸ்னி நிறுவனத்தில் சுமார் 15 ஆண்டுகள் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து 2020 ஆண்டு இறுதியில் ஓய்வு பெற்றார் பாப் இகர். பிப்ரவரி 2020 இல் பாப் இகர் ஓய்வு பெற்ற நிலையில் டிஸ்னியின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்ற பாப் சாபெக் நியமிக்கப்பட்டர்.
பாப் சாபெக் வெளியேற்றம்
பாப் சாபெக் நிர்வாகத்தின் கீழ் வால்ட் டிஸ்னி ஸ்ட்ரீமிங் துறையில் அதிகப்படியான முதலீடு செய்தும் பெரிய அளவிலான வர்த்தகத்தை ஒவ்வொரு பிராந்தியத்திலும் சக போட்டி நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டதால் டிஸ்னி நிர்வாகம் தோல்வியைச் சந்தித்தது. இதன் வாயிலாகத் தான் பாப் சாபெக் வெளியேற்றப்பட்டார்.


Click it and Unblock the Notifications