கலிஃபோர்னியா: ஃபேஸ்புக் (Facebook)-ன் ஒற்றை முகமாக உலகுக்கு தெரிந்து கொண்டிருக்கிறார் மார்க் ஸுக்கர்பெர்க். ஆனால் அவருக்கு முன்னும் பின்னும் சில நண்பர்கள், இணைந்து தான் ஃபேஸ்புக் உருவானது.
அதில் க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes)-ம் ஒருவர். ஃபேஸ்புக் (Facebook)-ன் நிறுவனர்களில் இவரும் ஒருவர். ஃபேஸ்புக் (Facebook)-க்கு மார்க் உயிர் கொடுத்தார் என்றால் அதை எப்படிக் காசாக்க வேண்டும், எப்படிப் பரவச் செய்ய வேண்டும், எங்கு பயன்படுத்த வேண்டும், யாரிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்கிற தெளிவு க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes)-க்கு தான் அதிகம் இருந்தது.
மார்க் பள்ளிகளையும், கல்லூரிகளையும் குறி வைத்து வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, நம் க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes) தான் மார்க்குக்கு ஒரு அடிப்படை வியாபார தந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தார்.
என்னாது பொம்மை கடைய வாங்குறாறா.. யாரு முகேஷ் அம்பானியா.. ரூ621 கோடிக்கா

பொது மக்கள் தான்
"அவர்களுக்கு (பள்ளி, கல்லூரிகளுக்கு) ஒரு தனிப்பட்ட பிரைவசி தேவைப்படும். ஆகையால் அவர்களே தங்களுக்கான வலைதளத்தை உருவாக்கிக் கொள்வார்கள். அவர்கள் நம் ஃபேஸ்புக்கை வாங்குவது கடினம் தான். ஆகையால் பொது மக்களுக்கு கொடுப்போம். மக்கள் இணைவார்கள் பிசினஸ் வளரும்" என்றார். ஃபேஸ்புக்கை, பொது மக்களுக்கு கொண்டு வர மார்க்கிடம் நிறையப் பேசி புரிய வைத்து, கடைசியில் , "அட ஐடியா நல்லா இருக்கே" என மார்க் வாயாலேயே ஓகே சொல்ல வைத்ததில் முக்கியமானவர் நம் க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes).

பிரிவு
2004-ம் ஆண்டு வாக்கில் ஃபேஸ்புக்கின் ஆரம்ப கட்டத்தில் மார்க்குடனேயே வேலை பார்த்துக் கொண்டிருந்தார் நம் க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes). நாளுக்கு நாள் ஃபேஸ்புக் மேம்பட்டுக் கொண்டிருந்தது. மார்க் தன் பட்டப் படிப்பைத் தொடரப் போவதில்லை என முடிவு செய்தார். ஆனால் க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes) ஹார்வர்டில் தன் படிப்பை முடிக்கச் சென்றார். அதன் பின் மீண்டும் 2006-ல் மார்க்குடன் ஃபேஸ்புக்கில் இணைந்தார். தன்னால் முடிந்த வரை ஃபேஸ்புக்குக்கு உதவினார். மீண்டும் 2007-ல் வெளியேறிவிட்டார். சரி அப்படியே நம் க்ரிஸ் ஹியூக்ஸைப் பற்றி முழுமையாகப் பார்த்துவிடுவோம்

பிரிவுக்குப் பின்
2008-ல் ஒபாமாவுக்காக தேர்தல் பணியாற்றினார். அதன் பின் 2010-ல் UNAIDS (Joint United Nations Programme on HIV/AIDS) குழுவுக்கு தலைவராக பதவி ஏற்று சமூகப் பணியாற்றினார். 2012-ல் The New Republic என்கிற பத்திரிகையில் பெரும்பான்மையான பங்குகளை வாங்கி பத்திரிகை ஆசிரியராக இருந்தார். இவர் காலத்தில் தான் The New Republic பத்திரிகைக்கு ஒரு டிஜிட்டல் முகம் கொடுக்க முயன்று தோற்றார். 2016-ல் பத்திரிகையை விற்றேவிட்டார். அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சியான் எல்ட்ரிட்ஜ் (Sean Eldridge) என்கிற ஆண் அரசியல்வாதியை, (படித்தது சரி தான் க்ரிஸ் ஹியூக்ஸ் ஒரு கே) திருமணம் செய்து கொண்டார். சரி மீண்டும் ஃபேஸ்புக்குக்கு வருவோம்.

இன்று ஃபேஸ்புக்
ஃபேஸ்புக் என்கிற ஒற்றை பெயரின் கீழ் தான் இன்று வாட்ஸப், இன்ஸ்டாகிராம் என இரு பெரிய நிறுவனங்களும் இருக்கின்றன. பேஸ்புக்கின் அனைத்து சமூக வலைதளங்களையும் சுமார் 230 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்களாம். ஆண்டு வருவாய் மட்டும் சுமார் 55 பில்லியன் அமெரிக்க டாலர். மொத்த சொத்து மதிப்பு சுமார் 97 பில்லியன் அமெரிக்க டாலர். தற்போது அமெரிக்க பங்குச் சந்தைகளில் அனைத்து ஃபேஸ்புக் நிறுவனப் பங்குகளை விற்றால் 84 பில்லியன் அமெரிக்க டாலர் கிடைக்கும். அந்த அளவுக்கு ஃபேஸ்புக் பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது.

ஃபேஸ்புக்கை காலி செய்யுங்கள்
அப்படிப்பட்ட ஃபேஸ்புக் நிறுவனத்தை நிறுவ, ஆரம்ப காலங்களில் சிரமப்பட்ட குட்டி ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரே இன்று ஃபேஸ்புக் நிறுவனத்தை அழிக்க வேண்டும் எனப் பேசிக் கொண்டிருக்கிறார். வேறு யார் நம் க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes) தான் இப்போது ஃபேஸ்புக் நிறுவனத்தை அழிக்கும் நேரம் வந்துவிட்டதாகச் சொல்கிறார். என்ன கோபம், ஏன் இப்படிச் சொல்கிறார்..? எனப் பார்த்தால் விஷயம் ஒவ்வொன்றாக வெளியில் வருகிறது.

அதிகாரம், செல்வாக்கு
சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவில் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் நம் க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes)ஒரு கட்டுரை எழுதி இருந்தார், அதில் "ஃபேஸ்புக்கின் முகமாகத் திகழும் மார்க் ஸுக்கர்பெர்க்குக்கு, ஃபேஸ்புக் நிறுவனத்தில் அளவற்ற அதிகாரம் உள்ளது. அமெரிக்க அரசாங்கத்திலும் சரி, அமெரிக்க தனியார் நிறுவனங்களிலும் சரி, இதுவரை யாருக்குமே இல்லாத அளவுக்கு மார்க் ஸுக்கர்பெர்க்குக்கு செல்வாக்கு இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது" என ஹைலைட்டர் பேனாவில் எழுதி இருக்கிறார்.

அரசுக்கு நல்ல வாய்ப்பு
அதே கட்டுரையில் "அமெரிக்க அரசு ஃபேஸ்புக் நிறுவனத்தை உடைக்க இது தான் சரியான நேரம்" எனவும் எழுதி அதிர வைத்திருக்கிறார். "மார்க் ஒரு நல்ல மனிதர் தான். ஆனால் அவர் தன்னுடைய வளர்ச்சிக்காக மக்களின் பாதுகாப்பையே ஒரு க்ளிக்குக்கு விலை கொடுத்துவிட்டார் என்பதில் எனக்கு மிகப் பெரிய கோபம் இருக்கிறது" எனவும் கொந்தளிக்கிறார் க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes).

வருந்துகிறேன்
"ஆரம்ப காலத்திலேயே ஃபேஸ்புக்கின் பதிவுகள் என்ன மாதிரியான கலாச்சார மாற்றங்களை ஏற்படுத்தும், ஒரு நாட்டின் தேர்தலில் எத்தகைய விளைவுகளை உண்டாக்கும், ஒரு அரசியல் தலைவரை எவ்வளவு வலு பெறச் செய்யும்... என்பதை எல்லாம் சிந்திக்காமல் விட்டு விட்டோம் என்பதை நினைத்து வருந்துகிறேன்." என்கிறார் க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes).

எதிர் வாதம் இல்லை
"தற்போது என் நண்பர் மார்க்கை சுற்றி அவர் கருத்தை வலுப்படுத்தும் ஆட்களே அதிகம் இருக்கிறார்கள். அவர் கருத்துக்கு எதிர் கருத்து பேசும் நபர்களோ, மார்க்கின் கருத்தில் இருக்கும் தவறான சிந்தனைகளையோ சுட்டிக் காட்ட யாரும் இல்லை என்பதை நினைத்து கவலைப் படுகிறேன்" என கண்களைத் துடைக்கிறார் க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes).

80% வருவாய்
இப்படிச் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிக் கொடுத்து விட்டு "மிஸ்டர் மார்க் ஸுக்கர்பெர்க், நீங்கள் உடனடியாக உங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸப் நிறுவனங்களை தனி நிறுவனங்களாக சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். உலகின் சமூக வலைதள நிறுவனங்கள் ஈட்டும் வருவாயில் 80% உங்களுடையதாக (மார்க் ஸுக்கர்பெர்க்குடையதாக) இருக்கிறது. ஆக நீங்கள் இணைய வெளியில் ஒரு தனி சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்" எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes). சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களே ஃபேஸ்புக்கின் மார்க் ஸுக்கர்பெர்க்கை பதவி விலகச் சொன்னார்கள். அந்தக் கட்டுரையை விரிவாகப் படிக்க க்ளிக்குங்கள்: https://tamil.goodreturns.in/world/mark-zuckerberg-want-step-down-as-chairman-facebook-investors-013043.html

ஃபேஸ்புக் தரப்பு
சமீபத்தில் தான் ஃபேஸ்புக் நிறுவனத்தின், உலக விவகாரத் துறையின் துணைத் தலைவர் நிக் க்ளெக் (Nick Clegg) "நம்பகத் தன்மையையும், சமூக பொறுப்புகளையும் வலி நிறைந்த சில கடுமையான புது விதிகள் மூலமாகத் தான் சாதிக்க முடியும். அதை ஃபேஸ்புக் ஏற்றுக் கொள்கிறது. அதற்காக, ஃபேஸ்புக் போன்ற அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனத்தை உடைத்து, சமூகப் பொறுப்புக்களை நிலை நிறுத்த முடியாது" என க்ரிஸ் ஹியூக்ஸ் (Chris Hughes)-ன் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். தன் முன்னாள் நண்பரின் கருத்துக்கு இதுவரை வாய் திறக்கவில்லை மார்க் ஸுக்கர்பெர்க்.
ஆனால் ஃபேஸ்புக் நிறுவனத்தில் இருக்கும் பிரைவசி பிரச்னைகளுக்கு மகுடம் வைத்தாற் போல, க்ரிஸ் ஹியூக்ஸ் பிரச்னை எரியத் தொடங்கி இருக்கிறது. மொத்த ஃபேஸ்புக்கும் எரிந்து சாம்பல் ஆகிவிடுமோ என்கிற பயம் மட்டும் மனதில் பரவத் தொடங்கி இருக்கிறது. நண்பரின் கருத்துக்கு என்ன சொல்வார் மார்க்...? காத்திருப்போம்.