அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , ஈரான் போர் தொடங்கியது முதலே முன்னுக்கு பின் முரணாகவே பேசி வருகிறார். திடீர் திடீரென அவர் வெளியிடும் அறிவிப்புகள் உலக நாடுகளை திக்குமுக்காட செய்கிறது. அந்த வகையில் உலக நாடுகள் அமெரிக்காவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார் டிரம்ப்.
ஈரான் போர் தொடங்கிய முதலே ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்த பகுதி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளதா ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்பது தான் போட்டியே. ஈரான் ஒரு புறம் ஹார்முஸில் டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறி வருகிறது. ஆனால் டிரம்போ அதற்கு ஒரு படி மேலே சென்றுவிட்டார்.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் தடையின்றி செல்வதை உறுதி செய்ய அமெரிக்கா பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது, இதற்கு உலக நாடுகள் அமெரிக்காவுக்கு உரிய தொகையை செலுத்த வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார். அவரது இந்த பதிவு தான் பேசு பொருளாக மாறியுள்ளது.
ட்ரூத் சோஷியல் தளத்தில் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவுகளில், ஈரான் உடனான மோதல் சூழலுக்கு மத்தியிலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் தொடர்ந்து செல்கிறது என கூறியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் பெருமளவில் சென்று கொண்டிருக்கிறது. இந்த மோதல் மற்றும் குழப்பங்கள் அனைத்தும் முடிந்தவுடன், இதுவரை அமெரிக்காவுக்கு எந்தவித உதவியும் செய்யாத உலக நாடுகள், அமெரிக்காவிற்கு தேவையான தொகையை திருப்பி செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
அமெரிக்காவின் சொந்த நலனுக்காக மட்டும் இதை நாங்கள் செய்யவில்லை; பல தலைமுறைகளாக எங்களுடைய சொந்த நலன்களை விட மற்ற நாடுகளுக்காகவே நாங்கள் இதை அதிகம் செய்து வருகிறோம் என கூறியுள்ளார். தற்போது போர் சூழலிலும் ஹார்முஸ் வழியே கச்சா எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல அமெரிக்கா தரும் பாதுகாப்பு தான் காரணம் என்றும், அதற்கே உலக நாடுகள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
உலக அளவில் வர்த்தகம் செய்யப்படும் கச்சா எண்ணெய்யில் ஐந்தில் ஒரு பகுதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் செல்கிறது. இதனால் தான் உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு இந்த பாதை மிகவும் முக்கியமானது. ஈரான் அமெரிக்கா மோதல் இந்தியா உள்பட உலக நாடுகளின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்த இது தான் காரணம்.
இத பாதை மீது தாங்கள்தான் கட்டுப்பாடு வைத்துள்ளதாக ஈரான் தரப்பு கூறுகிறது, ஆனால் அமெரிக்க கடற்படை இந்த பாதையில் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பளிப்பதாக கூறுகிறது. அமெரிக்க கடற்படையின் பாதுகாப்புடன் ஹார்முஸை கடந்து செல்லும் எண்ணெய் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமெரிக்க அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
எப்போது தான் இருதரப்பு ஒரு உடன்பாட்டை எட்டி ஹார்முஸில் பழையபடி கப்பல் போக்குவரத்து சீராகும் என்ற கேள்வி எழுகிறது. இதற்கிடையே பலவீனமடைந்து வரும் ஈரான் நாடு எங்களுடன் விரைவில் ஒரு ஒப்பந்தத்திற்கு வர விரும்புகிறது. அமெரிக்கா இந்த விவகாரத்தில் ஈடுபடலாமா வேண்டாமா என்பதை நானே தீர்மானிப்பேன், இருப்பினும் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே இருக்கிறோம் என டிரம்ப் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இருந்தாலும் ஈரான் தரப்புஜ் தங்களின் நிபந்தனைகளை ஏற்கும் வரை பேச்சுவார்த்தையே கிடையாது என கூறுகிறது.


Click it and Unblock the Notifications


