அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே அவர்கள் வசம் இருக்கும் தங்கம் தான். அமெரிக்க டாலர் வலுவாக இருப்பதற்கே அவர்கள் வசம் இருக்கும் தங்கம் தான் காரணம். உலகிலேயே அதிகளவு தங்கம் இருப்பு வைத்திருக்கும் அரசாக அமெரிக்கா தான்.
உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடு அமெரிக்கா. இதனால் தான் பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு தங்கத்தை கூட அமெரிக்க சேமிப்பு கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கின்றன. ஆனால் தற்போது அந்த பாதுகாப்பே கேள்விக்குறியாகி இருக்கிறது. அமெரிக்காவின் தங்க சேமிப்பு கிடங்குகள் பல அடுக்கு பாதுகாப்பு கொண்டவை. இங்கு அத்தனை எளிதாக ஒருவரால் நுழைந்துவிட முடியாது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்பே இந்த பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் புகழ்பெற்ற தங்க சேமிப்பு கிடங்கான ஃபோர்ட் நாக்ஸ் (Fort Knox) என்ற இடத்தில் இருக்கும் தங்கம் அனைத்தையும் நேரடியாகவும் நேர்மையாகவும் தணிக்கை (Physical Audit) செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவு அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. உலகிலேயே மிகவும் பாதுகாப்பான தங்க சேமிப்பு கிடங்கில் திடீரென நேரடியாக கணக்கு பார்க்க வேண்டும் என டிரம்ப் கூறுவதை ஏன், அங்கிருந்த தங்கம் மாயமாகிவிட்டதா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன.
அண்மையில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர், அரசுக்கு சொந்தமான பல மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கக் கட்டிகளையும், பணத்தையும் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 40 மில்லியன் டாலர் மதிப்புள்ள 300 தங்கக் கட்டிகள், ஆடம்பர கடிகாரங்கள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு, டிரம்ப் தனது சமூக வலைத்தளமான 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில், ஃபோர்ட் நாக்ஸ் தங்கத்தை நேரடியாகத் தணிக்கை செய்ய வேண்டிய நேரம் இது" என கூறியுள்ளார். அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் உள்ள உலகிலேயே மிக உயர் பாதுகாப்பு கொண்ட ஒரு தங்க சேமிப்பு கிடங்கு தான் ஃபோர்ட் நாக்ஸ்.
அமெரிக்க அரசின் ஒட்டுமொத்த தங்க இருப்பில் பாதியளவு அதாவது 147.3 மில்லியன் அவுன்ஸ் தங்கம் இங்குதான் வைக்கப்பட்டுள்ளது. இன்றைய சந்தை மதிப்பின்படி, இங்குள்ள தங்கத்தின் மதிப்பு சுமார் 590 பில்லியன் டாலர். அமெரிக்க நிதித்துறை இங்குள்ள தங்கம் ஆண்டுதோறும் கணக்கெடுக்கப்படுவதாகக் கூறினாலும், கடந்த பல தசாப்தங்களாக ஒரு முழுமையான, சுதந்திரமான தணிக்கை அங்கு நடத்தப்படவில்லை என்று விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இறுதியாக 1974-ஆம் ஆண்டில் தான் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இங்குப் பொதுப்படையான ஆய்வு நடந்தது. கிட்டதட்ட 50 ஆண்டுகளாக இங்கே நேரடியாக தங்க தணிக்கையே நடக்கவில்லை எனவே தான் அங்கு உண்மையில் தங்கம் பாதுகாப்பாக இருக்கிறதா அல்லது ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு வேளை தணிக்கை நடந்து தங்கம் குறைந்திருந்தால் உலக வரலாற்றில் பெரிய தங்க திருட்டாக இது இருக்கும்.


Click it and Unblock the Notifications

