அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அமெரிக்க பொருட்களுக்கு அதிகம் வரி விதிக்கும் நாடுகளுக்கு அதேபோல் பரஸ்பரி விதிக்கப்போவதாக அதிரடியாக அறிவித்தார். இந்த பரஸ்பர வரி விதிப்பு நாளை (ஏப்ரல் 2ம் தேதி) நடைமுறைக்கு வர உள்ளது. இந்த வரி விதிப்பு அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் உபரியை கொண்டுள்ள நாடுகளை குறிவைப்பதாக இருக்கிறது. டிரம்பின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை சர்வதேச வர்ததக போரை உருவாக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பால் வரி ராஜா என்று முத்திரை குத்தப்பட்ட இந்தியா, பரஸ்பர வரி விவகாரத்தில் நேரடியாக பிரச்சினையில் சிக்கியுள்ளது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரி விதிக்கிறது. இதனால் அமெரிக்க ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட சாத்தியமற்றது. அமெரிக்க பால் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 50 சதவீதம் வரி விதிக்கிறது. அமெரிக்க அரிசிக்கு ஜப்பான் 700 சதவீதம் வரி போடுகிறது. அமெரிக்க சீஸ் மீது கனடா 300 சதவீதம் வரி விதிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த நாடுகள் மிக நீண்ட காலமாக நம் நாட்டை கொள்ளையடித்து வருகின்றனர். அவர்கள் அமெரிக்க தொழிலாளர்கள் மீதான தங்கள் வெறுப்பை மிக தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.

நாமும் அவர்களை போல் பரஸ்பரம் நடந்து கொள்ள வேண்டிய நேரம் இது. ஒரு அதிபர் இறுதியாக அமெரிக்க மக்களுக்கு சரியானதை செய்கிறார். புதன்கிழமை அதிபர் அறிவிப்பை வெளியிடுவார். ஆனால் பரஸ்பரம் இருப்பதையும் அமெரிக்க மக்கள் நியாயமாக நடத்தப்படுவதையும் நிச்சயமாக உறுதி செய்யப்படும். அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட். அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரேர், வெள்ளை மாளிகை உதவியாளர் பீட்டர் நவரோ, தேசிய பொருளாதார கவுன்சில் இயக்குனர் கெவின் ஹாசெட் மற்றும் கொள்கை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகருக்கான துணை தலைவர் உள்ளிட்ட புத்திசாலித்தனமான வர்த்தக ஆலோசகர்களை் குழுவை டிரம்ப் கொண்டுள்ளார்.
துணை அதிபர் ஜேடி வான்ஸ் இந்த உரையாடல்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளார். இதை எப்படி செய்வது என்பது குறித்து இந்த நபர்கள் அனைவரும் அதிபரிடம் திட்டங்களை முன்வைத்துள்ளனர். மேலும் இது அதிபரின் முடிவாகும். அறிவிப்பின் பிரத்தியேகங்களில் நாங்கள் அவரை முந்தி செல்ல மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். கரோலின் லீவிட்டின் பேட்டியை பார்க்கும்போது, அந்நாடு தனது வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது, அதற்காகத்தான் இந்த பரஸ்பர வரி விதிப்பு மிரட்டலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக மேற்கொண்டுள்ளார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோாவர்ட் லுட்னிக் அண்மையில், இந்தியா, அமெரிக்காவுக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ஆனால் நம்மிடம் இருந்து ஒரு புஷல் அமெரிக்க சோளத்தை கூட இந்தியா வாங்காது. அமெரிக்க வேளாண் பொருட்களை இந்தியா நியாயமற்ற முறையில் தடுக்கிறது என்று குற்றம் சாட்டி இருந்தார். அமெரிக்கா தனது வேளாண் வர்த்தகத்தை விரிவாக்கத்திற்கு இந்தியாவை முக்கிய சந்தையாக பார்க்கிறது. ஆனால் நம் நாட்டின் சூழல் வேறுவிதமானது. அமெரிக்காவில் பொதுவாக விவசாயம் பெரிய அளவிலான வணிக விவசாயமாக நடைபெறுகிறது. ஆனால் இந்தியாவில் விவசாயம், சிறிய நிலங்களில் வேலை செய்யும் சிறு விவசாயிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலத்திலே பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை மேற்கொள்கின்றனர். வேளாண் துறை இந்தியாவில் 70 கோடி பேருக்கு வாழ்வாதாரம் அளிக்கிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வேளாண் பொருட்களை இறக்குமதி செய்தால் உள்நாட்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். இதனால்தான் அமெரிக்காவிலிருந்து வேளாண் பொருட்கள் இறக்குமதியை தடுக்கும் வகையில் அதிக வரி விதிக்கிறது. ஆனால் இதனை புரிந்து கொள்ளாமல் அமெரிக்கா இந்தியா கூடுதல் வரி விதிக்கிறது என்று குதிக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பரஸ்பர வரி மிரட்டலுக்கு இந்தியா பணிந்து விடக்கூடாது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜிடிஆர்ஐ-ன் அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இந்தியா அடிபணியக் கூடாது. தேசிய நலனுக்கு முன்னுரிமை அளிப்பது மிக முக்கியம். நமது விவசாயிகள் உணவு, இறையாண்மை அல்லது கொள்கை சுயாட்சியை விலையாக கொடுத்து வர்த்தக ஒத்துழைப்பு வரக்கூடாது என்று தெரிவித்தார். சமூக மேம்பாட்டு கவுன்சிலின் வர்த்தக நிபுணர் பிஸ்வஜித் தார் கூறுகையில், நமது விவசாய சந்தை திறப்பை எதிர்க்கும் அதே வேளையில், மலிவான தொழில்துறை இறக்குமதிகளை ஒரு சமரசமாக வழங்கலாம். பரஸ்பர வரி விதிப்பால் வர்த்தக போர் எவ்வாறு வெளிப்படும் என்பது குறித்து நடுவர் மன்றம் இன்னும் முடிவெடுக்கவில்லை. ஒன்று தெளிவாக தெரிகிறது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விளையாடுகிறார். அவரை நேரடியாக சந்திப்பதா அல்லது இந்த மோதலை ஒரு வாய்ப்பாக மாற்றுவதற்கான வழியை கண்டுபிடிப்பதா என்பதை இந்தியா முடிவு செய்ய வேண்டும். விவசாயத்தை போலவே உலகளாவிய வர்த்தகத்திலும் நேரம் மற்றும் பொறுமை பெரும்பாலும சிறந்த அறுவடையை தருகின்றன என்று தெரிவித்தார்.
அபிஜித் தாஜ் பிபிசி அறிக்கையில், அமெரிக்கா வணிக விவசாயத்தை கொண்டுள்ளது. அதேநேரத்தில் இந்தியா தீவிர வாழ்வாதார விவசாயத்தை நம்பியுள்ளது. இது மில்லியன கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரம் மற்றும் அமெரிக்க விவசாய வணிகத்தின் நலன்களை பற்றிய கேள்வி என்று தெரிவித்து இருந்தார். அதேசமயம், அமெரிக்காவுடான பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் மீதான வரிகளின் தாக்கத்தை குறைக்கக்கூடும் என்று நொமுராவின் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், மற்ற நாடுகளை காட்டிலும் டிரம்ப் நிர்வாகத்திடம் அதிக இணக்கமான நிலைப்பாட்டை இந்தியா எடுத்துள்ளது. பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் பலனளிக்க சிறிது காலம் எடுக்கும் என்றாலும், அது ஒரு ஊக்கமளிக்கும் அறிகுறியாக நாங்கள் கருதுகிறோம். பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் மீதான அத்தகைய வரிகளின் தாக்கத்தை குறைக்கக்கூடும் என்பதை குறிக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
1960களில் உணவு பற்றாக்குறை உள்ள நாடாக இருந்த நிலையிலிருந்து தற்போது உலகின் எட்டாவது பெரிய விவசாய ஏற்றுமதியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்த முன்னேற்றம் இருந்தபோதிலும், வரையறுக்கப்பட்ட நிலம், காலாவதியான தொழில்நுட்பங்கள் மற்றும் கணிக்க முடியாத காலநிலை போன்ற காரணங்களால் நமது வேளாண் உற்பத்திதிறன் ஒரு சவாலாகவே உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு டிரம்ப் அரசு முக்கிய உத்தரவு!!

படுகொலை செய்யப்பட்ட ஈரான் தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம் ஒத்தி வைப்பு: காரணம் என்ன?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications