நாலு காசு சம்பாதிக்க நாய் படாதபாடு படுகிறோம் என்று நமது பெரியவர்கள் சொல்வதை கேட்டு இருப்போம். தொழில்முனைவோர், என்ஜினீயர்கள், வர்த்தகர்கள் மற்றும் பிறர் தங்கள் செல்வத்தை பெருக்க நாள்தோறும் நீண்ட நேரம் கடுமையாக உழைத்து வருகின்றனர்.
ஆனால் இத்தாலியை சேர்ந்த ஒரு இளைஞர் தனது தொழில் வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே உலகின் மெகா கோடீஸ்வரராகி விட்டார். அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.33,000 கோடியாகும்.

உலகின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான மூக்குகண்ணாடி நிறுவனம் எஸ்சிலர் லக்சோட்டிகா. இந்நிறுவனத்தின் முன்னாள் தலைவராக இருந்த இத்தாலிய தொழிலதிபரும், பெரிய கோடீஸ்வரருமான லியானார்டோ டெல் வெச்சியோ கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது 87 வயதில் காலமானார்.
இதனையடுத்து இவரின் சுமார் ரூ.2.11 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை அவரது மனைவி மற்றும் 6 குழந்தைகளும் பெற்றனர். ஆறு குழந்தைகளில் ஒருவர் கிளெமெண்ட் டெல் வெச்சியோ. தனது தந்தையின் டெல்ஃபின் நிறுவனத்தில் 12.5 சதவீத பங்குகளை பெற்றார்.
2022ல் போர்ப்ஸ் வெளியிட்ட மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் 19 வயதான கிளெமெண்ட் டெல் வெச்சியோ பெயர் இடம் பெற்று இருந்தது, இது அனைத்து ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. போர்ப்ஸ் மதிப்பின்படி இவருடைய சொத்து மதிப்பு சுமார் ரூ.33,000 கோடியாகும். இதனையடுத்து உலகின இளம் மெகா கோடீஸ்வரரானார்.
மிலனில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் லேக் கோமோவிற்கு அருகில் ஒரு வில்லா போன்ற ஆடம்பரமான சொத்துக்களை அவர் வைத்துள்ளார். என்னதான் பெரிய குடும்ப செல்வம் இருந்தாலும் கூட, கிளெமெண்ட் டெல் வெச்சியோ தனது தந்தையின் தொழில்களில் நேரடியாக ஈடுபடவில்லை.
கணிசமான பரம்பரை சொத்தை பெற்றிருந்தாலும், அவர் படிப்பு மற்றும் பொழுதுபோக்குகளில் ஆர்வமாக இருந்தார். கல்லூரியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் படித்து இந்த துறைகளில் ஒரு தொழிலை தொடங்க விரும்பினார். அந்த பாடங்களில் தீவிரமான ஆர்வத்தை வெளிப்படுத்தினார். 1982ல் அவரது தந்தை தனது 25 வயது சகோதரர் கிளாடியோவை அமெரிக்காவுக்கு அனுப்பினார்.
லக்சோட்டிகா நிறுவனத்தை 15 ஆண்டுகள் மேற்பார்வையிட்டார். 1995ல் 140 கோடி டாலருக்கு லென்ஸ்கிராப்டர்ஸ் நிறுவனத்தை அவர் வாங்கினார். 2001ல் புரூக்ஸ் பிரதர்ஸ் நிறுவனத்தை 22.5 கோடி டாலர் கொடுத்து வாங்கினார். இது கிளாடியோ நிறுவனத்தை நிதி நெருக்கடியில் தள்ளியது. 2020 ஜூலையில் திவாலாகி விட்டதாக அறிவித்தது.
கிளெமெண்ட் டெல் வெச்சியோவின் இரண்டாவது மூத்த சகோதரர் லியோனார் மரியா, லக்சோட்டிகாவின் இத்தாலிய சில்லரை வணிக பிரிவின் தலைவராகவும் குடும்ப வணிகத்தில் பணிபுரிகிறார். கிளெமெண்ட் டெல் வெச்சியோவின் தாத்தா ஒரு காய்கறி விற்பனையாளராக இருந்தார். இவர் பிறப்பதற்கு முன்பே அவர் இறந்து விட்டார்.


Click it and Unblock the Notifications