கொரோனா புண்ணியத்தால் கடந்த சில ஆண்டுகள் ஐ.டி., நிதி உள்ளிட்ட துறைகளை சார்ந்த நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்தனர். கடந்த ஆண்டு மத்தியில் இருந்து நிறுவனங்கள் பணியாளர்களை அலுவலகத்துக்கு வந்து வேலை பாருங்க என்று வலியுறுத்தி வருகின்றன.
நம் நாட்டில் மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் இதுதான் நிலவரம். ஆஸ்திரேலியாவில் உள்ள நிறுவனங்களும் தங்களது பணியாளர்களை அலுவலகத்துக்கு வாங்க என்று அழைப்பு விடுத்தன. ஆனால் பல பணியாளர்கள் அலுவலகத்துக்கு செல்வதை விரும்பாமல் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். இது அந்நாட்டு நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.

இந்நிலையில், ஒழுங்கா ஆபிசுக்கு போய் வேலை பாருங்க இல்லையென்றால் உங்கள் பணிகள் இந்தியர்களுக்கு அவுட்சோர்சிங் வழங்கப்படலாம் என்று ஆஸ்திரேலிய பணியாளர்களை ஒரு இந்திய முதலீட்டாளர் எச்சரிக்கை செய்துள்ளார்.
இன்னோவேட்டிவ் கன்சல்டன்ட்ஸ் நிறுவனர் இக்பால் சிங் பேட்டி ஒன்றில் கூறுகையில், சப்போர்ட் பணியாளர்கள், ஐ.டி. நிதி மற்றும் அடமானம் உள்ளிட்ட பணிகள் அவுட்சோர்ஸ் செய்யப்படலாம். குறைந்த செலவு மற்றும் ஆங்கிலம் பேசும் பணியாளர்கள் கிடைப்பார்கள்.
இந்த பணிகளுக்கு இந்திய ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டால், ஆஸ்திரேலிய நிறுவனங்கள் தற்போது அந்நாட்டு பணியாளர்களுக்கு வழங்கும் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் மட்டுமே இந்திய ஊழியர்களுக்கு வழங்க வேண்டியது இருக்கும். நிறுவனங்களுக்கு இந்திய பணியாளர்கள் பெரிய வாய்ப்புகளில் ஒன்று.
இந்தியர்கள் களத்துக்கு அதிக செயல்திறனை கொண்டு வருகிறார்கள். உலகம் முழுவதிலும் உள்ள மிகப்பெரிய பிரச்சினை பணவீக்கம். இது போன்ற சந்தர்ப்பங்களில் மிகவும் திறமையாக மாறுவதற்கும், விநியோக சங்கிலையை மிகவும் திறமையானதாக்குதவற்கும், அதே நேரத்தில் மிகவும் குறைந்த செலவில் முற்றிலும் அவுட்சோர்ஸ் செய்யக்கூடிய அந்த வேலைகளை நம்பியிருப்பதும் மிக முக்கியமானது என்று தெரிவித்தார்.
உலகளவில் மிகவும் வளர்ந்த நாடுகளில் உள்ள பணியாளர்களிடம், இந்தியர்கள் உங்கள் வேலைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக எச்சரிக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் பால்ட், உங்கள் வேலையை வீட்டிலிருந்து செய்ய முடிந்தால் பயப்படுங்கள், மிகவும் பயமாக இருங்கள், ஏனென்றால் இந்தியாவிலோ அல்லது எங்கிருந்தோ யாராவது உங்கள் பணியை மிக குறைந்த செலவில் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்று எச்சரித்து இருந்தார்.
இந்தியா அல்லது வேறு நாட்டுக்கு அவுட்சோர்சிங் வேலைகள் வழங்கப்படலாம் என்ற ஆபத்து இருந்தாலும், அப்படி வழங்குவதில் சில சவால்கள் உள்ளன. தவறான தகவல்தொடர்புகள், கால நேர வேறுபாடுகளால் எழும் பிரச்சினைகள், மோசடி, டேட்டா மீறல்கள் மற்றும் அறிவுசார் சொத்து திருட்டு போன்ற இடர்பாடுகள் அவுட்சோர்சிங் வழங்குவதில் உள்ளன.


Click it and Unblock the Notifications