மும்பை: மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி இந்திய பங்குச்சந்தையையும் பதம் பார்த்துள்ளது. இந்த மோசடியில் ஹரி சங்கர் திபெர்வாலாவுடன் தொடர்புகொண்ட நிறுவனங்களும் சிக்கி இருப்பதால் இந்திய பங்குச்சந்தையில் ஸ்மால்கேப் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்தன. மகாதேவ் சூதாட்ட மோசடியில் சிக்கிய பல்வேறு ஸ்மால்கேப் நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.
சத்தீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகர், அவரது நண்பர் ரவி உப்பால் ஆகியோர் மகாதேவ் எனும் பெயரில் சூதாட்ட செயலியை நடத்தினர். ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த செயலி செயல்பட்டது. சவுரப் சந்திரகர் இந்தியாவில் இருந்தபோது ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துவிட்டு தனது நண்பர் ரவி உப்பாலுடன் துபாய் சென்று, அங்கு கடை நடத்திக்கொண்டே சூதாட்ட செயலியை உருவாக்கி இந்தியாவில் அதனை அறிமுகம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த செயலியின் மூலம் பல கோடி ரூபாய் பணத்தை இந்தியாவுக்கு அனுப்ப சிறு நிறுவனங்களை தேர்வு செய்து இவர்கள் முதலீடு செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அமலாக்கத்துறை இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.417 கோடி முடக்கப்பட்டது. மேலும் இதில் ரூ.5,000 கோடி அளவுக்கு பணமோசடி நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
திபெர்வாலா , மோசடி செய்து ஈட்டிய பணத்தை ஸெனித் மல்டி டிரேடிங் டிஎம்சிசி, எபிலிட்டி கேம்ஸ், தனோ இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்டு, டிஸ்கவரி பில்டுகான், பிரில்லியண்ட் இண்வெஸ்ட்மெண்ட், யூதிஷ் சொலுயூசன்ஸ் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இந்த மோசடியுடன் தொடர்புடையதாக பேசப்படும் சிறு நிறுவனங்கள் கடந்த சில வாரங்களாக பெரும் இழப்பை சந்தித்துள்ளன.
இதில் சம்பந்தப்பட்ட பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஸ்மால்கேப் மற்றும் பென்னி பங்குகள் இந்த மாதத்தில் மட்டும் 37% சரிந்துள்ளன. குற்றம்சாட்டப்பட்ட ஹரி சங்கர் திபெர்வாலா மற்றும் அவருடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சுமார் 30க்கும் அதிகமான பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பங்குகளை வைத்துள்ளன. இவை அனைத்தும் சரிவில் உள்ளன.
உதாரணமாக ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 800% லாபம் தந்தது, ஆனால் மார்ச் 1 முதல் அதன் மதிப்பு மூன்றில் ஒன்று என சரிந்துள்ளது. கிட்டத்தட்ட 33% மதிப்பு குறைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே போல தோய்னாம் ஸ்போர்ட்ஸ் நிறுவன பங்கு 31 % மற்றும் டைகர் லாஜிஸ்டிக்ஸ் பங்கு 28% என இந்த மோசடியில் தொடர்புடையதாக கூறப்படும் நிறுவனங்கள் அனைத்துமே மைனஸில் செல்கின்றன.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications