மல்டிபேக்கர் பங்கை தேடும் முதலீட்டாளரா நீங்கள்?. அப்படின்னா இன்டக்ரா எசென்ஷியா பங்கை கொஞ்சம் பார்த்து வைச்சுக்கோங்க. இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயம் கொடுத்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் பகுப்பாய்வின்படி, இன்டெக்ரா எசென்ஷியா (Integra Essentia) நிறுவன பங்கு விலை கடந்த 3 ஆண்டுகளில் 1,826.32 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், இந்நிறுவன எதிர்காலத்தில் சிறப்பான வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்டெக்ரா எசென்ஷியா நிறுவனம் வேளாண் பொருட்கள், ஆடை, உள்கட்டமைப்பு, எனர்ஜி உள்பட பல தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக உள்ளது. 2023 செப்டம்பர் காலாண்டில் இன்டெக்ரா எசென்ஷியா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 17 சதவீதம் அதிகரித்து ரூ.66.90 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.7.52 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 250 சதவீதம் அதிகமாகும்.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சர்வேஷ்வர் குழுமத்தின் சர்வேஷ்வர் ஃபுட்ஸ் லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனமான ஹிமாலயன் பயோ ஆர்கானிக் ஃபுட்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து தனது வேளாண் வணிக பிரிவு ரூ.15 கோடிக்கு மேல் முன்கூட்டியே ஆர்டர் பெற்றுள்ளதாக இன்டெக்ரா எசென்ஷியா பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்து இருந்தது. இதனையடுத்து நேற்று மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது இன்டெக்ரா எசென்ஷியா பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.83 சதவீதம் உயர்ந்து ரூ.7.60ல் முடிவடைந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்பங்கின் விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த 90 நாட்களில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 25.99 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 28ம் தேதியன்று இப்பங்கின் விலை 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு ரூ.5.10ஆக குறைந்தது. இருப்பினும் அதன் பிறகு பங்கு விலை நல்ல ஏற்றம் கண்டுள்ளது.


Click it and Unblock the Notifications