நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சாலை, போக்குவரத்து, தண்ணீர் மற்றும் தடையில்லா மின்சாரம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகும். மத்திய அரசும் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் முதலீட்டு செலவினங்களை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், அது தேவையை காட்டிலும் குறைவாகவே இருக்கிறது.
மத்திய அரசு தனக்கு வரும் வருவாயை கருத்தில் கொண்டே முதலீட்டு செலவினங்களுக்கான தொகையை ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஒதுக்கி அந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. வரிகள், அரசு நிறுவனங்கள் வழங்கும் டிவிடெண்ட், அரசு நிறுவன பங்குகள் விற்பனை, கடன் போன்ற வழிமுறைகளில்தான் மத்திய அரசுக்கு பணம் வருகிறது. இதனால் உள்கட்டமைப்பு பணிகளுக்காக பெரிய அளவில் பணத்தை ஒதுக்க முடியவில்லை.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிப்ரவரி 1ம் தேதி எதிர்வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இந்த சூழ்நிலையில், எதிர்கால முதலீடுகளுக்கு தேவையான செல்வத்தை திரட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒரு அட்டகாசமான ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார் கோடக் மியூச்சுவல் பண்ட் நிர்வாக இயக்குனர் நிலேஷ் ஷா.
நம் நாட்டவர்கள் பெரிய அளவில் தங்கத்தை சேமித்து வைத்திருக்கிறார்கள். இந்த தங்கம் வீடுகளில் எந்தவித பயனும் இல்லாமல் சும்மா இருக்கிறது. இந்த தங்கத்தை எப்படி வெளியே கொண்டு வரவைத்து எதிர்கால முதலீடுகளுக்கான வளங்களை திரட்டுவது என்பது குறித்து நிதியமைச்சர் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். அப்படி செய்தால், உண்மையிலேயே பெரிய அளவிலான செல்வம் கிடைக்கும் என்று நிலேஷ் ஷா தெரிவித்துள்ளார்.
மேலும் நிலேஷ் ஷா கூறுகையில், உலகப் பொருளாதாரம் உலகமயமாக்கலில் இருந்த பாதுகாப்புவாதத்திற்கு மாறும்போது, கொள்கை உருவாக்கத்தில் வரிகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. எதிர்வரும் பட்ஜெட் வரி குறைப்புகளின் மூலம் நகர்ப்புற நுகர்வை ஆதரிப்பதன் மூலம் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இஎம்ஐ சுமைக்கு மானியம் வழங்க பரிந்துரைக்கும் அதே வேளையில், தனியார் முதலீட்டிற்கான ஊக்கத்தொகையையும் பரிந்துரைக்க வேண்டும்.
பொருளாதாரத்தின் பழமைவாத மேலாண்மை நம்மை வேறுபடுத்தியுள்ளதால், பட்ஜெட் அது வகுத்துள்ள நிதி விவேகத்தின் பாதையிலிருந்து விலக முடியாது. முக்கியமற்ற பொதுத்துறை நிறுவனங்களின் மூலோபாய விற்பனை உள்ளிட்ட விற்பனை நிதி பற்றாக்குறையை குறைக்க உதவும் என தெரிவித்தார்.
சர்வதேச அளவில் தங்கம் பயன்பாட்டில் சீனாவுக்கு அடுத்து இந்தியா உள்ளது. நம் நாட்டில் தங்கம் உற்பத்தி பெயர் அளவுக்கே உள்ளது. உள்நாட்டு தங்க தேவை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. தங்கம் இறக்குமதியால் மத்திய அரசுக்கு வரவை காட்டிலும் இழப்பே அதிகம். அதேசமயம் சாமானிய மக்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர்.
முதலீடு மற்றும் அவசர காலத்தில் உதவும் என்ற நோக்கத்தில் தங்கத்தை வாங்கி வருகின்றனர். தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் மக்கள் வாங்க தயங்குவதில்லை. நம் குடும்பங்களில் கைவசம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு பல லட்சம் கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications