கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த இந்திய பங்கு சந்தைகள், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்றும் புதிய உச்சத்தில் தொடங்கியுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினையும் பெற்றுள்ளது.
முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, சர்வதேச சந்தைகளின் எதிரொலியாகவும், அன்னிய முதலீடு வரத்து காரணமாகவும், அதோடு சில்லறை பணவீக்கம் குறித்த குறியீடுகளும் சந்தைக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், அது இந்திய சந்தைகளுக்கு சாதகமாக வந்துள்ளது. இதனால் இன்றும் சந்தைகள் வரலாற்று உச்சத்தில் காணப்படுகிறது.
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சந்தைகள் ஏற்றத்தில் தான் காணப்பட்டன. மும்பை பங்கு சந்தையின் குறியீட்டென் சென்செக்ஸ் தொடக்கத்தில் 321.08 புள்ளிகள் அதிகரித்து, 51,865.38 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 121.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 15,285 ஆகவும் காணப்பட்டது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இதனையடுத்து தொடக்கத்திலும் ஏற்றத்தில் தான் தொடங்கின. குறிப்பாக சென்செக்ஸ் தொடக்கத்தில் 407.86 புள்ளிகள் அதிகரித்து, 51,952.16 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 121.10 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 15,284.40 ஆகவும் தொடங்கியது. இதற்கிடையில் 1086 பங்குகள் ஏற்றத்திலும், 367 பங்குகள் சரிவிலும், 75 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
ரூபாய் Vs டாலர்
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 பைசா அதிகரித்து, 72.61 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 72.75 ரூபாயாக முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. இது சர்வதேச சந்தைகள் ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், இந்திய சந்தைக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பும் ஏற்றத்தினை காணத் தொடங்கியுள்ளது.
என்ன காரணம்?
தொடர்ச்சியாக புதிய கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்தாலும், அமெரிக்க பொருளாதாரத்தினை மீட்டெடுக்க விரைவில் ஊக்கத்தொகையை அந்த நாட்டு அரசு ஒப்புதல் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
சந்தைக்கு சாதகமான செய்திகள்
இதற்கிடையில் இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகளும் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதை நேற்றே நாம் பார்த்தோம். மேலும் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், பல கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ளன. ஆக இதுவும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது.
அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்தில்
முதலீட்டாளர்களின் இந்த நம்பிக்கையினால், நிஃப்டி சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பிஎஸ்இ ஆயில் & கேஸ் தவிர, அனைத்து இன்டெக்ஸ்களும் பச்சை நிறத்திலேயே காணப்படுகிறது. குறிப்பாக பிஎஸ்இ மிட்கேப், பேங்க் நிஃப்டி 1% மேலாகவும் மற்றவை 1 சதவீதத்திற்கு கீழாகவும் வர்த்தகமாகி வருகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், இந்தஸிந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹீரோ மோட்டோகார்ப், கிரசிம், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், இந்தஸிந்த் வங்கி, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஓஎன்ஜிசி, டிசிஎஸ், ரிலையன்ஸ், என்டிபிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போது சந்தை நிலவரம் என்ன?
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் வரலாற்றில் முதல் முறையாக 52,000 கடந்து வர்த்தகமாகி வருகின்றது. தற்போது 501 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 52,045 ஆகவும், இதே நிஃப்டி 132.50 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 15,295 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது. சந்தை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வரும் நிலையில், இது முதலீட்டாளர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு தான்.


Click it and Unblock the Notifications