டாடா குழுமம் 19 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக புதிய பங்கு வெளியீட்டில் (ஐ.பி.ஓ.) களம் இறங்குகிறது. அந்த குழும நிறுவனங்களில் ஒன்றான டாடா டெக்னாலஜிஸின் ஐ.பி.ஓ. இம்மாதம் 22ம் தேதி தொடங்குகிறது. இந்நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
டாடா டெக்னாலஜிஸ் பொறியியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வடிவமைப்பு வர்த்தகத்தில் ஈடுபடுகிறது. குறிப்பாக வாகனம், விண்வெளி மற்றும் போக்குவரத்து மற்றும் கனரக இயந்திர தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறது.

டாடா டெக்னாலஜிஸ் கடந்த 2021-22ம் நிதியாண்டில் மொத்த வருவாயாக ரூ.3,578 கோடியும், லாபமாக ரூ.436 கோடியும் ஈட்டியிருந்தது. 2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் இந்நிறுவனம் லாபமாக ரூ.407 கோடி ஈட்டியுள்ளது.
டாடா டெக்னாலஜிஸின் ஐ.பி.ஓ. நவம்பர் 22ம் தேதி தொடங்கி 24ம் தேதியன்று முடிவடையும். இந்நிறுவன ஐ.பி.ஓ.வில் மொத்தம் 6,08,50,278 ஈக்விட்டி பங்குகள் வரை விற்பனை செய்யப்பட உள்ளது. பங்கு வெளியீட்டு விலை குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என தகவல்.
ஜே.எம். பைனான்சியல், சிட்டி குரூப் குளோபல் மார்க்கெட்ஸ் இந்தியா மற்றும் போஃபோ செக்யூரிட்டீஸ் ஆகியவை டாடா டெக்னாலஜிஸின் ஐ.பி.ஓ. பணிகளை நிர்வகிக்கும் என தகவல். இந்த ஐ.பி.ஓ.வில், தனிப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் பொது பங்கு பங்குதாரர்களான இந்து பிரிக்கப்படாத குடும்பங்களுக்கு (டாடா மோட்டார்ஸில் உள்ள சாதாரண பங்குகள் மற்றும் ஏ சாதாரண பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் உள்பட) 6,08,027 பங்குகள் (மொத்த பங்கில் 10 சதவீதம்) வரை ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்த ஆஃபர் பார் சேல் மூலம் புரோமோட்டர்ஸ் மற்றும் ஏற்கனவே உள்ள பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை வெளிப்படையான முறையில் குறைக்கின்றனர். இந்த ஐ.பி.ஓ.வாயிலாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டெக்னாலஜிஸின் 11.41 சதவீத பங்குகளை விற்பனை செய்யும்.
ஆல்பா டி.சி. ஹோல்டிங் மற்றும் டாடா கேப்பிட்டல் குரோத் பண்ட் முறையே 2.4 சதவீதம் மற்றும் 1.20 சதவீத பங்குகளை விற்பனை செய்யும். இந்த பங்கு விற்பனையில் கிடைக்கும் முழு வருவாயும் அந்த நிறுவனங்களே பெறும். ஐ.பி.ஐ. வாயிலாக டாடா டெக்னாலஜிஸ் எந்த வருமானத்தையும் பெறாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் டாடா குழுமம் கடைசியாக 2004ல் டி.சி.எஸ். நிறுவனத்தின் ஐ.பி.ஓ.வை மேற்கொண்டது.


Click it and Unblock the Notifications