டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் மதிப்பீடுகளை காட்டிலும் குறைவாக இருந்தது. இது முதலீட்டாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதன் எதிரொலியாக இன்றைய பங்கு வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கின் விலை மளமளவென சரிந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகத்தின் இடையே, டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3 சதவீதத்துக்கு மேல் குறைந்து ரூ.686க்கு சென்றது.
இதனால் தற்போதைய சூழ்நிலையைில் பங்குகளை வாங்குவது நல்லதா அல்லது விற்று விடலாமா என்று குழப்பத்தில் முதலீட்டாளர்கள் உள்ளனர். ஏனென்றால் 2024 ஆகஸ்ட் முதல் டாடா மோட்டார்ஸ் பங்கு விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 7ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்ச அளவான ரூ.542.55க்கு சென்றது.

லாபம்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2025 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.8,470 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது. இது 2024 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 51 சதவீதம் குறைவாகும். கடந்த மார்ச் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.1.19 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் வருவாயில் பெரிய வளர்ச்சி தென்படவில்லை.
ஜாகுவார் லேண்ட் ரோவர்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) கடந்த மார்ச் காலாண்டில் வருவாயாக 770 கோடி யூரோ ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 1.7 சதவீதம் குறைவாகும்.டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.6 இறுதி டிவிடெண்டு வழங்க பரிந்துரை செய்துள்ளது. இது பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடன் இல்லை
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குழு தலைமை நிதி அதிகாரி பிபி பாலாஜி கூறுகையில், ஒட்டு மொத்த அடிப்படையில், வாகன வணிகம் இப்போது கடனற்றதாக இருக்கிறது, வட்டி செலவினங்கள் குறைந்துள்ளது. இது மகிழ்ச்சிகரமானது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது ஏனெனில் இது ஒரு நெகிழ்ச்சியான குழுவால் வழங்கப்படும் ஆரோக்கியமான வணிக அடிப்படைகளை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார்.
கடந்த மார்ச் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்நாட்டில் 99,600 வர்த்தக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 5 சதவீதம் குறைவாகும். அதேசமயம், கடந்த மார்ச் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 5,900 வர்த்தக வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 29.4 சதவீதம் அதிகமாகும்.
வாகன விற்பனை
2025 மார்ச் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1.47 லட்சம் பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 5 சதவீதம் வீழ்ச்சியாகும். மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியபோது, டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1 சதவீதத்துக்கு மேல் குறைந்து ரூ.699.75ல் தொடங்கியது.
4 ஆண்டுகளாக எல்ஐசி செய்த காரியம்.. வெளிச்சத்துக்கு வந்த பேங்க் ஆஃப் இந்தியா பங்கு விவகாரம்..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.


Click it and Unblock the Notifications