பொதுவாக மக்கள் தான் தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் சமீபகாலமாக உலக நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். தங்கம் மிகவும் மதிப்புமிக்க சொத்தாக மாறி விட்டதே இதற்கு காரணம். ஒவ்வொரு நாட்டு மைய வங்கியும் டன் கணக்கில் தங்கத்தை வாங்கி தொடர்ந்து தங்களது தங்க கையிருப்பை அதிகரித்து வருகின்றனர். உலக தங்க கவுன்சிலின் மூத்த ஆய்வாளர் கிருஷ்ணன் கோபால் கூறியதாவது: சீனாவின் பீப்பிள்ஸ் பேங்க் கடந்த பிப்ரவரி மாதத்தில் தனது தங்க கையிருப்பை 5 டன் அதிகரித்துள்ளது. இதனையடுத்து 2025ம் ஆண்டில் முதல் இரண்டு மாதங்களில் அந்த வங்கி தனது தங்க கையிருப்பை 10 டன் அதிகரித்துள்ளது.
போலந்தின் நேஷனல் பேங்க் கடந்த மாதம் 29 டன் தங்கத்தை வாங்கியது. 2019 ஜூன் மாதத்துக்கு பிறகு அந்த வங்கி வாங்கிய மிகப்பெரிய மாதந்திர கொள்முதல் இதுவாகும். இதனையடுத்து தங்கம் வாங்குவதில் சீனாவை பின்னுக்கு தள்ளி போலந்து முதலிடத்தை பிடித்தது. தற்போதைய நிலவரப்படி போலந்தின் நேஷனல் வங்கி வசம் 480 டன் தங்கம் கையிருப்பு உள்ளது.

கோவிட்-19 தொற்றுநோய்க்கு பிறகு உலகளவில் தங்க கையிருப்புகளில் இரண்டாவது அதிகபட்ச அதிகரிப்பை செய்த வங்கி இந்திய ரிசர்வ் வங்கி. 2020 முதல் 2024ம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்திய ரிசர்வ் வங்கி 244 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. மேலும் 2024ம் ஆண்டின் கடைசி காலாண்டில், சில நாடுகள் தங்களது தங்க கையிருப்பை குறைத்தன ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து தங்கத்தை வாங்கியது. கடந்த காலாண்டில் இந்தியா 22.54 டன் தங்கத்தை வாங்கியது. இதனையடுத்து சர்வதேச அளவில் இரண்டாவது பெரிய தங்கம் வாங்குபவராக மாறியது.
2020 முதல் 2024 வரையிலான 5 ஆண்டுகளில் சீனா தனது தங்க கையிருப்பை 336 டன் அதிகரித்தது. இந்தியா,சீனா,போலந்து போன்ற நாடுகள் தங்கத்தை வாங்கி குவித்து வரும் வேளையில், ஒரே ஒரு நாடு மட்டும் தங்க கையிருப்பை குறைத்துள்ளது. அந்த நாடு வெனிசுலா. வெனிசுலாவின் மத்திய வங்கி 2024ம் ஆண்டில் தனது கையிருப்பை 13 சதவீதம் குறைத்துள்ளது. 2023ம் ஆண்டில் வெனிசுலா வசம் 61 டன் தங்கம் இருந்தது. ஆனால் 2024 டிசம்பருக்குள் வெனிசுலாவின் தங்க கையிருப்பு 53 டன்னாக குறைந்து விட்டது. வெனிசுலா வசம் உள்ள மொத்த தங்கத்தின் மதிப்பு வெறும் 424 கோடி டாலர்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Story Written: Subramanian


Click it and Unblock the Notifications