பிரெக்ஸிட் எதிரொலியால் சர்வதேச வர்த்தகச் சந்தையே தடுமாறி யோயுள்ளது. ஆசிய சந்தை முதல் அமெரிக்கப் பங்குச்சந்தை வரை இன்று அதிகளவிலான வர்த்தகச் சரிவை அடையும்.
இந்நிலையில் இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை துவங்கி 1 மணிநேரத்திற்குள் 1000 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்தியது. இதே தருணத்தில் தங்கம் விலை இன்று ஓரே நாளில் 6 சதவீதம் வரை உயர்ந்து, கடந்த 3 வருடத்தில் காணாத மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 31,708 ரூபாய் என்ற 3 வருட உச்சத்தை அடைந்துள்ளது. 2013ஆம் ஆண்டுச் செப்டம்பர் 9ஆம் தேதி 10 கிராம் தங்கத்தின் விலை 31,700 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை உயர்விற்கும் இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியும் மிகப்பெரிய காரணியாகும். வெள்ளிக்கிழமை நாணயச்சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.08 ரூபாயாகச் சரிந்துள்ளது.
பிரெக்ஸிட் எதிரொலியின் காரணமாகப் பங்குச்சந்தைகள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாத்துக்கொள்ள அதிகளவில் தங்கம் மற்றும் வெள்ளியின் மீது முதலீடு செய்தனர்.
இதன் காரணமாகவே வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலை 6 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இன்று 1 கிலோ பார் வெள்ளியின் விலை 42,240 ரூபாயாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications