மும்பை : பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பி.எம்.சி வங்கி) பல முரண்பாடான தில்லுமுல்லுக்கள் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், இந்த வங்கி 21,000 போலி வங்கி கணக்குகளை ஒபன் செய்துள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது இது அதற்கும் மேலே ஒரு படி போய் இறந்தவர்களின் பெயரில் பல வங்கிக் கணக்குகளை ஒபன் செய்துள்ளது மும்பை போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கி முதலில் திவாலான நிறுவனமான ஹெச்.டி.ஐ.எல் நிறுவனத்துக்கு கடன் கொடுப்பதற்காக பல்வேறு தில்லுமுல்லுகளை செய்திருப்பது, ஏற்கனவே வெட்ட வெளிச்சமான நிலையில், தற்போது தோண்ட தோண்ட இன்னும் பல உண்மைகள் வெளியே வந்து கொண்டிருக்கின்றன.
இறந்தவர்கள் பெயரில் வங்கிக் கணக்கு
முன்னதாக பி.எம்.சி. வங்கியில் நடந்துள்ள 4,355 கோடி ஊழல் தொடர்பாக அந்த வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங் சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டுள்ளார். பி.எம்.சி. வங்கியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த வங்கியின் செயல்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கி 6 மாத காலத்துக்கு ஏற்கனவே முடக்கியுள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக மும்பை போலீசின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியும் வருகின்றனர். இந்த நிலையில் இந்த மோசடி கடன் வழங்குவதற்காக அவர்கள் இறந்தவர்களின் பெயரில் வங்கி கணக்கை துவங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கற்பனையான வங்கி கணக்குகள்
திவாலான வீட்டு வசதி மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனமான ஹெச்.டி.ஐ.எல் நிறுவனத்துக்கு வழங்கிய கடன்களை மறைக்க உருவாக்கப்பட்ட பெரும்பாலான வங்கிக் கணக்குகள் போலியானவை என்றும், இதில் பல கணக்குகள் இறந்தவர்களின் பெயரில் உருவாக்கப்பட்டது என்றும், சில கணக்குகள் வங்கியில் மூடப்பட்ட கணக்குகள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜாய் தாமசை கைது செய்தனர். இந்த நிலையில் ஜாய் தாமசை அக்டோபர் 17ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மோசடி கணக்குகள்
இந்தியா டுடேவில் வெளியான ஒரு அறிக்கையின் படி, ரிசர்வ் வங்கியில் சமர்பிக்கப்படுவதற்கு முன்பு 45 நாட்களுக்குள் கணக்குகள் உருவாக்கப்பட்டன. இதில் ஹெச்.டி.ஐ.எல் நிறுவனத்திற்கு சொந்தமான 44 கணக்குகளை மறைக்க வங்கியால் இது செய்யப்பட்டது. இந்த கணக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைகள் ஹெச்.டி.ஐ.எல் மற்றும் அதன் குழு நிறுவனங்களால் கடன் வாங்கப்பட்டதை விட குறைவாக இருந்தன.
வங்கிகளுக்கு நஷ்டம்
இந்த வங்கி மோசடியால் வங்கியின் இருப்புகளில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடியால் 3000 கோடி ரூபாய் அளவில் நிதிப்பற்றாக்குறை ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்த வங்கி செய்த மோசடியால் பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில், தோண்ட தோண்ட உண்மைகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இன்னும் எத்தனை ஆயிரம் கோடிகளை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிய வரும்.


Click it and Unblock the Notifications