தங்கம் விலை குறைந்தாலும் உயர்ந்தாலும் இந்தியாவில் தங்கத்தைச் சுற்றி பெரிய வர்த்தகம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது. இதேபோல் தங்கம் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்திய மக்கள் தங்களுடைய நிதி தேவைக்காக பர்சனல் லோன் வாங்குவதை காட்டிலும் குறைவான வட்டி விகிதத்துடன் கிடைக்கும் தங்க நகை கடன்களைத் தான் அதிகம் வாங்கி வருகின்றனர்.
இதுமட்டுமா இந்திய மக்களிடம் தற்போது 30000 டன்னுக்கும் அதிகமான தங்கம் இருக்கும் வேளையில் ஒட்டொமொத்த நிதி நிறுவனங்களின் கண்களும் இதன் மீது தான் உள்ளது. அந்த வகையில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பைனான்சியல் சர்வீசஸ் தங்க நகை சந்தையில் நுழைவதற்காக ஏற்கனவே இத்துறையில் இருக்கும் நிறுவனங்களை வாங்குவதற்காக ஆய்வு செய்து வருகிறது.

தற்போது இந்திய சந்தையில் பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தின் பின்புலம் இல்லாமல் இருக்கும் நிறுவனங்கள் பட்டியலில் இன்டெல் மணி, கொசமட்டம் பைனான்ஸ், ஐசிஎல் பின்கார்ப், சுப்ரா பசிபிக் பைனான்சியல் சர்வீசஸ் ஆகியவை உள்ளது.
மஹிந்திரா பைனான்ஸ் நிறுவனம் ஏற்கனவே இதற்கான பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கும் வேளையில், இன்னும் முக்கியக்கட்டத்தை எட்டவில்லை என்பதையும் தெரிவித்துள்ளது.
மஹிந்திரா பைனான்ஸ் நிறுவனம் மஹிந்திரா வாகனங்களுக்கான நிதி சேவை நிறுவனமாக இருந்து வருகிறது, மேலும் இந்நிறுவனத்தில் சுமார் 52.4 சதவீத பங்குகளையும் மஹிந்திரா ஆட்டோமொபைல் பிரிவு வைத்துள்ளது.
வாகனங்களுக்கான நிதி சேவை அளித்து வரும் மஹிந்திரா பைனான்ஸ் தனது வர்த்தகத்தை பல்வகைப்படுத்துவும், புதிய வருவாய் ஈட்டும் பிரிவை உருவாக்கவும், வாகனங்கள் அல்லாத வர்த்தக பிரிவுக்குள் நுழைய வேண்டும் என திட்டமிட்டுத் தங்க நகைக் கடன் வர்த்தகத்திற்குள் வர முடிவு செய்துள்ளது.
இந்திய தங்க நகை சந்தையில் முத்தூட் ஃபைனான்ஸ், மணப்புரம் ஃபைனான்ஸ் ஆகியவை மட்டுமே நாடு முழுவதும் பெரும் ஆதிக்கம் செய்து வரும் வேளையில் சமீபத்தில் ஆதித்யா பிர்லா கேப்பிடல், டாடா கேப்பிடல், கோத்ரேஜ் பைனான்ஸ் ஆகியவை தங்க நகை சந்தைக்குள் புதிதாக இறங்கியுள்ளது. இந்த வரிசையில் தற்போது மஹிந்திரா பைனான்ஸ்-ம் வந்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் ஆதித்யா பிர்லா கேப்பிடல் தங்க நகை வர்த்தக பிரிவில் இறங்குவதற்காக அடுத்த 3 வருடத்தில் 1000 கிளைகளை திறக்க திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. முதல் கட்டமாக மார்ச் 2027க்குள் சுமார் 300 தங்க நகை கிளைகளை முக்கிய வர்த்தக பகுதியில் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு ஜூலை மாதம் டாடா கேப்பிடல் நிறுவனம், கேரள மாநிலத்தை சேர்ந்த Yogakshemam Loans நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை கைப்பற்றியுது மூலம் தங்க நகை கடன் பிரிவில் நுழைந்தது.
இதேபோல் இதே ஜூலை மாதம் Kanakadurga Finance நிறுவனத்தில் கோத்ரேஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் வாயிலாக பெரும் பகுதி பங்குகளை வாங்கி கோத்ரேஜ் கேப்பிடல் தங்க நகை கடன் பிரிவில் நுழைந்தது.


Click it and Unblock the Notifications
