செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி மற்றும் பாரம்பரிய வணிக மாடல்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் பெரிய அடி வாங்கியுள்ளன. டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட இந்திய ஐடி நிறுவனங்களூக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காந்தர் (Kantar) நிறுவனத்தின் பிராண்ட்ஸ் 2026 தரவரிசை அறிக்கையின்படி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் , இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பிராண்ட் மதிப்புகள் முந்தைய ஆண்டை விட முறையே வெகுவாக சரிந்துள்ளன. இதில் அதிகபட்சமாக டிசிஎஸ் நிறுவனத்தின் மதிப்பு 45% சரிவையும் இன்போசிஸ் 41% சரிவையும் விப்ரோ 40% சரிவடையும் சந்தித்துள்ளன.

ஐடி நிறுவனங்கள் தங்கள் சேவைகளை வழங்கும் விதத்தில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தி வரும் மாற்றங்களால், இந்தியாவின் பாரம்பரிய வணிகங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியை இந்த வீழ்ச்சி தெளிவாக காட்டுகிறது என அந்த அறிக்கை கூறுகிறது.
இந்தியாவின் முதல் மூன்று பெரிய ஐடி நிறுவனங்களோடு மட்டுமில்லாமல் ஹெச்சிஎல் டெக், எல்டிஐ மைண்ட் ட்ரீ போன்ற நிறுவனங்களின் பிராண்ட் மதிப்புகளிலும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்திய பிராண்ட் மதிப்பீடுகளில் காணப்படும் பரவலான பலவீனத்திற்கு பொருளாதார சூழல்களே காரணம் என காந்தர் சுட்டிக்காட்டியுள்ளது; குறிப்பாக வணிக சேவை துறையில் செயற்கை நுண்ணறிவால் ஏற்பட்டுள்ள தடுமாற்றமே இதற்கு முக்கிய காரணம் என்கிறது.
செயற்கை நுண்ணறிவு இந்தியாவின் B2B சூழலை மாற்றியமைத்து வருகிறது, இது புதிய வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில், பாரம்பரிய வணிக மாதிரிகளுக்கு சவாலாகவும் உள்ளது என தெரிவித்துள்ளது.2026-ஆம் ஆண்டில் இந்தியாவின் 100 மதிப்புமிக்க பிராண்டுகளின் மொத்த மதிப்பு, முந்தைய ஆண்டை விட 12% குறைந்து $460 பில்லியனாக சரிந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது. அதுவும் கன்சல்டன்சி நிறுவனங்களில் ஏஐ தாக்கமும் அதனால் பிராண்ட் மதிப்பு குறைவதும் அதிகமாக உள்ளது என தெரிவிக்கிறது.
கடந்த சில ஆண்டுகள் இந்திய ஐடி நிறுவனங்களை பொறுத்தவரை சவாலான ஆண்டாகவே அமைந்துவிட்டன. ஏனெனில் ஏஐ தொழில்நுட்பம் இந்த நிறுவனங்கள் ஐடி தயாரிப்புகளை உருவாக்குவது மற்றும் சேவையை வழங்குவது. அதற்கு பில்லிங் செய்வது என அனைத்திலுமே பெரிய மாற்றத்தை கொண்டு வந்துவிட்டது.
ஐடி நிறுவனங்கள் இதற்கு ஏற்ற வகையில் ஊழியர்களை தயார்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது அதேபோல பழைய பிசினஸ் மாடல்களுக்கு மாற்றாக ஏஐ பொருளாதாரத்திற்கு ஏற்ற புதிய பிசினஸ் மாடல்களை உருவாக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இதனால் தான் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு இது ஒரு சவால்மிக்க காலமாக இருக்கிறது என இந்த அறிக்கை கூறுகிறது.
ஐடி நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களை பொறுத்தவரை இது மிக முக்கியமான ஒரு அறிக்கையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பல்வேறு நிறுவனங்களும் ஏஐ காரணமாக கூறி ஊழியர்களை குறைத்து வரக்கூடிய சூழலில் ஐடி ஊழியர்கள் வேலைகளை தக்க வைக்க ஏஐ பிரிவில் நிபுணத்துவம் பெறுவது அவசியம் என்பதை உணர்த்துகிறது.


Click it and Unblock the Notifications

