2024ஆம் ஆண்டு வரலாற்று உச்சத்தை தொட்டது கிரிப்டோ கரன்சியான பிட்காயின். அப்போது இனி பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் தான் எதிர்காலம் என பலரும் கூறினர். இதனால் போட்டி போட்டு கொண்டு இதில் ஏராளமானவர்கள் முதலீடு செய்தனர். ஆனால் அவர்கள் அனைவருமே தற்போது நஷ்டத்தில் உள்ளனர்.
உலகின் மிகப்பெரிய கிரிப்டோ கரன்சியான பிட்காயின் 57,000 டாலர் என்ற மைல்கல்லுக்கு கீழே சென்றுள்ளது. இது 2024ஆம் ஆண்டு செப்டம்பருக்கு பிறகான மிகப் பெரிய வீழ்ச்சி. மேலும் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வென்றதை தொடர்ந்து உருவான வரலாற்று சிறப்புமிக்க ஏற்றத்தின் ஒட்டுமொத்த லாபத்தையும் பிட்காயின் இழந்துவிட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிட்காயின் 8%-க்கும் அதிகமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பிட்காயின் தற்போது சுமார் 56,940 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இதுவே 2024இல் 126,198 டாலர் என்ற உச்சத்தில் இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, 55% குறைந்துள்ளது. கடந்த 30 நாட்களில் மட்டும் இதன் மதிப்பு கிட்டத்தட்ட 29% சரிந்துள்ளது.
பிட்காயின் வரலாற்றிலேயே நீண்ட காலம் அது கரடி சந்தையின் பிடியில் இருப்பது இதுவே முதல்முறை. அதாவது தொடர்ச்சியாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இது சரிந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு முன்பு 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 63,503 டாலரிலிருந்து 29,807 டாலராக அதாவது 53.1% சரிந்த பிட்காயின் அதன் பின் அதே ஆண்டு நவம்பரில் புதிய உச்சத்தை தொட்டது.
டிரம்ப் கிரிப்டோ கரன்சிகளுக்கு சாதகமானவர் என்பதால் அவர் தேர்தலில் வென்ற உடன் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் வேகமாக உயர்ந்தன. ஆனால் டிரம்ப் , கிரிப்டோவுக்கு சாதகமான எந்த ஒரு கொள்கையும் வகுக்கவில்லை. மேலும் போர், வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நிச்சயமற்ற தன்மை என பல சிக்கல்கள் எழுந்ததால் பிட்காயின் மதிப்பு சரிந்து போனது.
அண்மையில் நடந்த அமெரிக்க இடைக்கால தேர்தலில் டிரம்புக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. எனவே நாடாளுமன்ற கட்டுப்பாடு ஜனநாயக கட்சியிடம் இருக்கிறது என்பதால் கிரிப்டோ தொடர்பான முன்மொழிவுகள் நிறைவேறும் வாய்ப்புகள் குறைந்து விட்டதாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். இதனால் கிரிப்டோ முதலீடுகளை விற்று காசாக்கி வருகின்றனர்.
மேலும் எதிர்பார்த்ததை விட அதிகமாக வந்த நுகர்வோர் விலைக் குறியீடு தரவுகள், உயர்ந்து வரும் அமெரிக்க டாலர் மதிப்பு, மற்றும் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றால் ஊக வணிக சொத்துகளிலிருந்து பணத்தை எடுத்து பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர் நிறுவன முதலீட்டாளர்கள் இதுவும் பிட்காயின் மதிப்பு குறைய காரணம்.
புதிதாக பிட்காயின் முதலீடுகளை தற்போதைக்கு தவிர்க்கலாம் என கூறும் நிபுணர்கள், ஏற்கனவே செய்த முதலீடுகள் லாபத்தில் இருந்தால் விற்கலாம் என்றும் நஷ்டத்தில் இருந்தால் சிறிது காலம் காத்திருக்கலாம் என்றும் அறிவுரை வழங்குகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

