தமிழ்நாட்டில் தொழில் உற்பத்தி ரீதியாக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு நகரமாக ஓசூர் இருக்கிறது. மின்சார வாகனங்களின் உற்பத்தி மையமாக திகழும் ஓசூரை தேடி பல்வேறு முதலீடுகள் குவிகின்றன. இதனை அடுத்து ஓசூர் வளர்ச்சிக்கு உதவும் வகையில் விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
ஓசூர் விமான நிலைய திட்டத்துக்கு அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு விண்ணப்பம் செய்துள்ள நிலையில் தற்போது அந்த திட்டத்துக்கு புது சிக்கல் எழுந்துள்ளது. ஆந்திர பிரதேசத்தின் குப்பம் பகுதியில் முன்மொழியப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு மத்திய அரசு சைட் கிளியரன்ஸ் எனப்படும் முதல் கட்ட தள அனுமதி வழங்கி இருக்கிறது. இது ஓசூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள புதிய விமான நிலைய திட்டத்திற்கு பின்னடைவாகவும் சிக்கலாகவும் மாறி இருக்கிறது.

ஆந்திர பிரதேசத்தின் குப்பம் மற்றும் ஸ்ரீகாகுளம் பகுதிகளில் முன்மொழியப்பட்ட விமான நிலைய திட்டங்களுக்கு மத்திய அரசின் தள அனுமதி கிடைத்துள்ளதாக டெக்கன் ஹெரால்டு செய்தி கூறுகிறது. குப்பம் விமான நிலையம் ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் எல்லைகளுக்கு அருகில் அமைந்திருப்பதால், அண்டை மாநிலங்களின் சில பகுதிகளுக்கும் போக்குவரத்து மற்றும் வர்த்தக இணைப்பை வழங்கும் என சொல்லப்படுகிறது.
ஓசூர் தொழில் வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் அவசியமானதாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அருகிலுள்ள குப்பம் திட்டத்திற்கு அனுமதி கிடைத்திருப்பது ஓசூர் விமான நிலைய திட்டத்தின் எதிர்காலம் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏனெனில் இந்த இடம் ஓசூருக்கு அருகிலேயே இருக்கிறது. சுமார் 80 கிலோமீட்டர் இடைவெளியே இருப்பதால் இதனால் ஓசூர் ஏர்போர்ட் திட்டத்துக்கு இனி அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே ஓசூர் விமான நிலைய திட்டம் பல்வேறு தடைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இருப்பதால் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த காரணங்களால் மத்திய அரசு ஓசூர் விமான நிலைய திட்டத்துக்கு அனுமதி வழங்காமல் இருக்கிறது. மேலும் பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்துடனான 150 கிலோமீட்டர் தொலைவு கட்டுப்பாடு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான நடைமுறைகள் ஆகியவை ஓசூர் திட்டத்துக்கு சிக்கலாக இருக்கும் நிலையில் குப்பம் விமான நிலைய திட்டமும் அதில் இணைந்துள்ளது.
குப்பம் தொகுதி ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதி என்பதால் இங்கே விமான நிலையம் அமைக்க ஆந்திரா அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால் தமிழக அரசு ஓசூர் ப்விமான நிலைய திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓசூர் தொழில் துறையினர் கோரிக்கை வைக்கின்றனர்.


Click it and Unblock the Notifications

