சென்னை விமான நிலையம் தற்போது இந்திய விமான ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. பல ஆண்டுகளாகவே சென்னை விமான நிலைய செயல்பாட்டில் பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. சில தினங்களுக்கு முன்பு கூட விமான நிலையத்தினுள் குரங்குகள் உலா வரும் வீடியோ ஒன்று வெளியானது. இந்நிலையில் சென்னை விமான நிலைய நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் நிர்வாக அமைப்பில் திருப்தி இல்லை என கூறி தமிழ்நாடு அரசு சார்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தில், இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு பதிலாக வேறு ஒரு தனியாரிடமோ அல்லது வேறு நிறுவனத்திடமோ விமான நிலைய நிர்வாகத்தை ஒப்படைக்குமாறு மத்திய அரசை முதலமைச்சர் விஜய் கேட்டு கொண்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.இதன் மூலம் சென்னை விமான நிலையம் தனியார் வசம் செல்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

முதலமைச்சர் விஜய் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாடு எப்போதும் தொழில்துறைக்கு உகந்த மாநிலமாகவும், வணிகம் மற்றும் முதலீடுகளை ஈர்க்க தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவரும் மாநிலமாகவும் திகழ்கிறது. இத்தகைய சூழலில் விமான நிலையத்தை மிக சிறப்பாக நிர்வகிப்பது மிகவும் இன்றியமையாதது என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயணிகளின் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம் மற்றும் சரக்கு கையாளுதல் ஆகிய எந்த கோணத்தில் பார்த்தாலும், சென்னை விமான நிலையத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் மேம்பாடும் தேவைப்படுகிறது. இதை கருத்தில்கொண்டுதான் விமான நிலையத்தின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பல்வேறு பணிகள் நடந்து வருவதால் பயணிகள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். டாக்சி பிக்கப் பாய்ண்ட் தொடங்கி பல இடங்களில் பயணிகள் சிக்கலை தான் எதிர்கொள்கின்றனர்.
டெர்மினல் 3 கட்டுமான பணிகள் இன்னும் முழுமையடையாமல் தொடர்ந்து நடைபெற்று வருவது. விமான நிலையம் தொடர்பான பல முக்கிய முடிவுகள் மற்றும் ஒப்புதல்களுக்கு டெல்லியிலுள்ள இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைமையகத்தை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் காலதாமதம் விமான நிலையத்தின் அன்றாட பணிகளையும் செயல்பாடுகளையும் பாதிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் விஜய் அரசு இப்படி ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளது.
அண்மையில் தான் விஜய் அரசு, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிதாக அமைக்கப்படவிருந்த விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருந்தது. அதோடு, தற்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தையே விரிவுபடுத்தப்படும் என கூறியது. தற்போது விமான நிலைய நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என கோரி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications


