தமிழ்நாட்டில் தொழில், கல்வி , ஐடி, ஜிசிசி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் ஒரு நகரம் தான் கோயம்புத்தூர். இங்கே சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2024ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், கோவை ஒண்டிப்புதூரில் உள்ள திறந்தவெளி சிறை மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனவே கோவை மக்கள் இனி சொந்த ஊரிலேயே கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிக்கலாம் என மகிழ்ச்சி அடைந்தனர். ஒண்டிப்புதூர் திறந்தவெளி மைதானத்தில் சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பு அடையாளம் காணப்பட்டு, விளையாட்டு துறைக்கு வகை மாற்றம் செய்யப்பட்டது.

மண் பரிசோதனை, அளவீடு பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு, வரைபடம் தயாரிக்கப்பட்டு ஸ்டேடியம் மாடல் இறுதி செய்யப்பட்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு இணையாக 25,000 முதல் 30,000 பார்வையாளர்கள் அமரும் வகையில் மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
அரசு-தனியார் கூட்டு முயற்சியில் சுமார் ₹500 கோடி மதிப்பீட்டில் தனியார் முதலீட்டில் மைதானத்தை கட்டமைக்க கடந்த நவம்பரில் டிட்கோ மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. ஆனால் ஒரே ஒரு தனியார் நிறுவனம் கூட விண்ணப்பிக்க முன்வராததால் இந்த திட்டம் முடங்கயுள்ளது.
கிரிக்கெட் மைதான திட்டம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், ஒண்டிப்புதூரில் உள்ள அந்த நிலத்தை வீணாக்காமல், சர்வதேச தரத்தில் பல்வேறு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஒலிம்பிக் அகாடமி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறை மைதானம் போதுமானதாக இருக்கும் என்றும், இங்கு 20 ஏக்கரில் ஒலிம்பிக் அகாடமி வரவுள்ளது எனவும் SDAT அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இங்கே தடகளம், நீச்சல், பேட்மிண்டன், குத்துச்சண்டை, பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல் மற்றும் பிற விளையாட்டுகள் என பல்வேறு ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான சர்வதேச தரத்திலான பயிற்சி கூடங்கள் ஒரே இடத்தில் அமைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
இது கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற விளையாட்டு வீரர்கள், சர்வதேச போட்டிகளுக்கு தயாராக உதவியாக இருக்கும். கிரிக்கெட் மைதான திட்டம் கைவிடப்பட்டதாக வெளியான தகவல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தாலும், ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்பட உள்ள முடிவுக்கு விளையாட்டு ஆர்வலர்கள் இடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
கிரிக்கெட் மைதானத்தில் ஆண்டுக்கு ஒரு சில நாட்கள் மட்டுமே போட்டிகள் நடைபெறும் சூழலில், ஒலிம்பிக் அகாடமி மூலம் ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான இளம் வீரர்கள் பயிற்சி பெற்று போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

