கோடிக்கணக்கான இந்திய மக்கள் தங்களின் அவசர நிதி தேவைகளுக்கு தங்க நகை கடன்களை தான் நாடுகின்றனர். அந்த வகையில் தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கியவர்களுக்கு புதிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியும் நிதி நிறுவனங்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தங்கத்தின் விலை வரலாற்று உச்சத்தில் இருந்து சவரனுக்கு சுமார் 40,000 ரூபாய் சரிந்துவிட்டது. தங்கம் விலை கடுமையாகச் சரிந்திருப்பதால், நகை கடன்களின் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு (NBFC) ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. தங்கம் விலை சரிவு காரணமாக நகை கடன் வழங்கும் நிறுவனங்களின் கடன்-மதிப்பு விகிதத்திற்கு (Loan-to-Value Ratio - LTV) அபாயம் ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணமாகும்.

இந்தியாவில் கடந்த ஒரு மாத காலத்தில் தங்கத்தின் விலை அதன் உச்சத்திலிருந்து சுமார் 30% வரை சரிந்துள்ளது. இதன் விளைவாக, அடகு வைக்கப்பட்ட தங்கத்தின் தற்போதைய மதிப்பு குறைந்து, மத்திய வங்கி நிர்ணயித்துள்ள 85% என்ற கடன்-மதிப்பு விகித வரம்பிற்கு கீழே சென்றுள்ளது. அதாவது தங்கம் ஒரு சவரன் விலை 1.30 லட்சமாக இருந்த போது ஒரு சவரனை அடகு வைத்தவர்களுக்கு வங்கிகள் 1 லட்சத்தை கடனாக கொடுத்திருக்கும், ஆனால் இன்று ஒரு சவரன் தங்கம் விலையே 92,000 ரூபாய் என அதற்கு கீழே சரிந்துள்ளது.
தங்கம் மதிப்பு குறைந்துவிட்டது ஆனால் அதற்காக கொடுத்த கடன் தொகை அதிகமாக இருக்கிறது. அதாவது கடனை மீட்க அடகு வைத்த நகையை ஏலம் விட்டால் கூட முழு தொகையும் கிடைக்காத சூழல் உண்டாகியுள்ளது.இந்நிலையில் தான் NBFC நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மும்பையில் சுமார் ஒன்றரை மணி நேர ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அப்போது தங்கம் விலை சரிந்துள்ளதால் தங்க நகை கடன்கள் பிரிவில் நிறுவனங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாம். நிறுவனங்களின் வளர்ச்சி இதுவரை நன்றாக இருந்தாலும், மிக வேகமாக வளர்ச்சியடைவதை தவிர்த்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கூறியுள்ளதாம்.
எனவே தங்க நகை கடன்கள் வழங்குவதிலும் பழைய கடன்களை வசூல் செய்வதிலும் கடன் மதிப்பு விகிதத்தை நிலை நிறுத்தவும் இனி நிதி நிறுவனங்கள் கெடுபிடி காட்ட வாய்ப்புள்ளது.நிதி நிறுவனங்கள் தங்க நகை கடன் வாங்கியவர்களை தொடர்பு கொண்டு கடனின் ஒரு பகுதியை கட்ட சொல்லலாம் அல்லது கூடுதலாக தங்க நகைகளை அடகு வைக்க சொல்லலாம் என கூறப்படுகிறது. எனவே நகை கடன் வாங்கியவர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
இந்தியாவில் நிதியாண்டின் முதல் பாதியில் நகை கடன் சந்தையில் வாராக்கடன் விகிதம் இரட்டிப்பாகியுள்ளது. கடன் வழங்கும் விதிமுறைகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் இதற்கு காரணம் என துறைசார் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். டிரான்ஸ்யூனியன் சிபில் அறிக்கையின்படி, மார்ச் நிலவரப்படி 0.16% ஆக இருந்த நகை கடன் வாராக்கடன் விகிதம், ஆகஸ்ட் மாத இறுதியில் 0.3% ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஒன்றுக்கும் மேற்பட்ட நகை கடன் கணக்குகளை வைத்திருப்பவர்கள் கடனை திருப்பி செலுத்துவதில் தாமதம் செய்வது அதிகமாக உள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, ஓராண்டுக்கும் மேலான கால அளவு கொண்ட நகை கடன்களுக்கு, கடன் காலம் முடிந்ததும் அசலையும் வட்டியையும் மொத்தமாகச் செலுத்தும் (Bullet Repayment) நீண்டகால நடைமுறைக்கு பதிலாக, மாதாந்திர வட்டி தவணைகளை வசூலிக்குமாறு கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது என எக்கனாமிக்ஸ் டைம்ஸ் செய்தி கூறுகிறது.


Click it and Unblock the Notifications

