தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து வேகமாக வளர்ந்து வரும் நகரமாக கோவை இருக்கிறது. தற்போது குறிப்பிட்ட ஒரு பிரிவில் கோவையின் வளர்ச்சி பெங்களூரு, ஐதராபாத் போன்ற பெரிய நகரங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி இருக்கிறது.
Foundit Insights Tracker என்ற நிறுவனம் இந்தியாவில் 2027-இல் 1.38 கோடி ஒயிட்-காலர் வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. இதில் கோயம்புத்தூர் நகரம் வேலைவாய்ப்பு வளர்ச்சியில் பெங்களூரு, ஐதராபாத் ஆகியவற்றை முந்தி முதலிடம் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் அக்டோபர் 2026 வரையிலான காலகட்டத்தில் வேலைவாய்ப்பு வளர்ச்சி 3.30% என்ற மிதமான அளவிலேயே இருப்பதாக தெரிவித்துள்ள இந்த நிறுவனம், தற்போது நிறுவனங்கள் ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதிலும் ஆட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் மிகவும் கவனமாக உள்ளன என கூறியுள்ளது. 2026 இல் 3.30% என இருக்கும் வேலைவாய்ப்பு வளர்ச்சி 2027இல் 8.16% ஆக இரட்டிப்பு வளர்ச்சியை அடையும் என சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தருண் சின்ஹா இந்த ஆண்டில் வேலைவாய்ப்பு சந்தை பெரியதாக வளரவும் இல்லை பெரிதாக சரியவும் இல்லை என கூறியுள்ளார். நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன என்றும் 2027இல் ஊழியர்கள் சேர்ப்பு வேகம் எடுக்கும் என கூறியுள்ளார்.
2027இல் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ், சில்லறை வர்த்தகம் மற்றும் உற்பத்தித் துறைகள் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும் என சுட்டிக்காட்டியுள்ளது. 2027இல் அதிக ஒயிட் காலர் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கோவை முதலிடத்தில் இருக்கும் என்றும் பெங்களூரு இரண்டாம் இடம், ஐதராபாத் மூன்றாம் இடத்தை பிடிக்கும் என்றும் இந்நிறுவனம் கூறுகிறது.
கோவை நகரம் தொழில்துறை நகரம் என்பதை தாண்டி ஐடி மற்றும் ஜிசிசி மையமாக படிப்படியாக உயர்ந்து வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் ஜிசிசி மையங்களை நிறுவ முதலில் தேர்வு செய்யும் நகரமாக கோவை மாறியுள்ளது.சிறந்த கல்வி நிறுவனங்கள், திறன் மிகு ஊழியர்கள் ஆகியவை தான் கோவையின் இந்த வளர்ச்சிக்கு காரணம்.
வேலைவாய்ப்புகளில் 7 முதல் 10 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்கள் ஒட்டுமொத்த ஆட்சேர்ப்பு தேவையில் 21% பங்கை கொண்டு முக்கிய திறன் பிரிவாக தொடர்கின்றனர் என இந்த அறிக்கை கூறுகிறது. அடுத்த ஆண்டிலும் இது தொடரும். அதாவது நிறுவனங்கள் 7 முதல் 10 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்களை பணியில் அமர்த்த முன்னுரிமை தருகின்றன என கூறுகிறது.
வேலைவாய்ப்புகளில் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆதிக்கம் தொடர்ந்தாலும், 2027-ல் தொடக்க நிலை அல்லது ஃப்ரெஷர் ஆட்சேர்ப்பு 4.64% வளர்ச்சி கண்டு மேம்படும் என இந்த நிறுவனம் கணித்துள்ளது. ஆனால் புதிதாக வேலைவாய்ப்பு சந்தைக்குள் வருபவர்கள் அதற்கேற்ப திறன்களை வளர்த்து கொள்வது தான் வேலை கிடைக்கவும் வேலையை தக்க வைத்து கொள்ளவும் உதவும் என தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications

