சென்னை: தங்கம் மற்றும் தங்க நகைகள் நமது வாழ்வின் அங்கமாக இருக்கின்றன. எனவே தான் தங்கத்தின் விலை ஏற்றம் மற்றும் சரிவு தொடர்பான செய்திகளை சாமானிய மக்கள் மிக தீவிரமாக கவனிக்கின்றனர். இன்றைய தங்கம் விலை ஏறி இருக்கிறதா இல்லை குறைந்திருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதிலும் கவனம் செலுத்துகின்றனர். அந்த வகையில் தங்கம் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது? அதில் தாக்கம் ஏற்படுத்தும் காரணிகள் என்னென்ன என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.
நாம் வாங்கும் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்வதில் பல்வேறு காரணிகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக,
தங்கத்தின் கேரட் அளவு: தங்கத்தின் மதிப்பு கேரட்டில் அளவிடப்படுகிறது. அதிகபட்சம் 24 கேரட் ஆகவும், குறைந்தபட்சம் 22 கேரட் ஆகவும் உள்ளது. பொதுவாக நகைகள் செய்வதற்கு 18 மற்றும் 22 கேரட் பயன்படுத்தப்படுகிறது.இந்த கேரட்டை பொறுத்து விலை மாறும்.

நகையில் உள்ள கற்கள்: நகைகளில் பொருத்தப்பட்டுள்ள முத்து உள்ளிட்ட கற்களின் அடிப்படையிலும் தங்க நகையின் விலை மாற்றம் காணும்.
மேக்கிங் கட்டணம்: நகைக்கடைக்காரர்கள் நகைகளை வடிவமைப்பதற்காக இதனை வசூலிக்கின்றனர். இது நகை வடிவமைப்பின் நுணுக்கம் மற்றும் அதற்காக போடப்பட்ட உழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும்.
ஜிஎஸ்டி: தங்க நகைகள் மீதான ஜிஎஸ்டி வரி என்பதும் அதன் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய காரணியாகும்.
தங்கம் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது?: இந்தியாவில் தங்கத்தின் விலை தினம்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது தினமும் காலையில் தங்க நகை வியாபாரிகள் சங்கம் கூடி தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்கிறது. அந்த விலை நிர்ணயத்திற்கு ஏற்ப வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் தங்க நகைகள் மற்றும் தங்கம் சார்ந்த பொருட்களை விற்பனை செய்கின்றனர்.
ஒவ்வொரு நகரத்திற்கும் தினம்தோறும் தங்கத்தின் விலையை அறிவிப்பதற்கென்றே ஒரு உள்ளூர் சங்கம் இருக்கிறது. எனவே இந்தியாவில் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு தங்கத்தின் விலையில் வேறுபாடுகளை காண முடிகிறது.
தங்க நகையின் விலையை கணக்கிடுவதற்கு நகை கடைக்காரர்கள் ஒரு சூத்திரத்தை பயன்படுத்துகின்றனர்.
தங்க நகையின் விலை = ஒரு கிராம் தங்கத்தின் விலை (22 அல்லது 18 கேரட்) x கிராம்(அதாவது எடை ) + கிராமிற்கான மேக்கிங் கட்டணம் + (நகையின் விலை+மேக்கிங் கட்டணம்) மீதான ஜிஎஸ்டி வரி
உதாரணமாக :
10 கிராம் விலை (22 காரட் தங்கம்) = ரூ.30,000
1 கிராம் விலை (22 காரட் தங்கம்) = ரூ 3,000
வாங்கும் தங்க நகையின் எடை: 20 கிராம்
மேக்கிங் கட்டணம்= ரூ 300/கிராம்
ஜிஎஸ்டி= 3%
எனவே, நகையின் மொத்த விலை: ரூ. 3,000 x 20 கிராம் + (20 கிராம் x ரூ. 300) = ரூ. 66,000
இந்த மொத்த விலையில் ஜிஎஸ்டி 3% எனும் போது,
66,000 + 3% = ரூ. 67,980.
எனவே, இந்த நகை வாங்குவதற்கு ரூ.67,980 செலுத்த வேண்டும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications