ஒரு காலத்தில் இந்திய விமான போக்குவரத்து துறையில் ஜெட் ஏர்வேஸ் முன்னணியில் இருந்தது. ஆனால் 2017 முதல் அந்நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தது. ஒரு கட்டத்தில் இதற்கு மேலும் விமான சேவை நடத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து 2020ல் ஜெட் ஏர்வேஸ் தனது விமான சேவையை முழுமையாக நிறுத்தியது. அதன் நிறுவனர் நரேஷ் கோயல் நிறுவனத்தை நடத்த போதிய நிதி திரட்ட முடியாத காரணத்தால், நிறுவனம் வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டது.

இந்த சூழ்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு வங்கிகளில் வாங்கிய கடன் நிதியை கையாடல் செய்ததாக கடந்த செப்டம்பரில் நரேஷ் கோயலை அமலாக்கத்துறை கைது செய்தது. கடந்த சில தினங்களுக்கு முன் நரேஷ் கோயல் குடும்பத்துக்கு சொந்தமான ரூ.538 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
ஜெட் ஏர்வேஸ் வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், நரேஷ் கோயலுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஏஜென்ட் கமிஷனாக ரூ.1,000 கோடிக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் இந்தியா நிறுவனத்தின் ரூ.4,057 கோடிக்கும் மேலான மானியக் கடன்களை ஜெட் லைட் லிமிடெட் நிறுவனத்துக்கு மாற்றி நிதியை கையாடல் செய்துள்ளார். ஆனால் டிக்கெட் விற்பனையில் எதிராக அதன் பெரும் பகுதி சரிசெய்யப்பட்டது. நரேஷ் கோயலின் கீழ் ஜெட் ஏர்வேஸ் சில தொழில் வல்லுனர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு பரிவர்த்தனை செய்தது. ஆனால் அவர்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
2016 முதல் 2018 வரை அவ்வப்போது ஜி.எஸ்.டி. ஆலோசனைக்கான ஆலோசனைக் கட்டணம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் 2017 ஜூலை 1ம் தேதி முதல் தான் ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்தது என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பளத்தை நிர்வகிப்பதற்காக கொசுவர்த்தி சுருள் உற்பத்தி நிறுவனம், விமான உதிரி பாகங்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ரயில்வே இன்ஃப்ரா நிறுவனம், நிதி ஆலோசனைக்காக வைர ஏற்றுமதியாளர் நியமனம் போன்ற பல வழிகளில் விமான நிறுவன நிதிகளை நரேஷ் கோயல் மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications