மத்திய தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பான ஈபிஎஃப்ஓ (EPFO), மிக முக்கியமான மத்திய அறங்காவலர் வாரிய கூட்டத்தை இந்த மாதம் நடத்த உள்ளது. இக்கூட்டத்தில், தொழிலாளர் ஓய்வூதிய திட்டமான EPS-95 பென்ஷன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாத ஓய்வூதிய தொகையை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈபிஎஃப்ஓ-வின் மத்திய அறங்காவலர் வாரிய கூட்டம் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தற்போது ஈபிஎஸ் திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச மாத ஓய்வூதிய தொகையான 1,000 ரூபாயை உயர்த்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் அதனை 3,000 ரூபாயாக உயர்த்த இதில் முடிவெடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் உள்ள சுமார் 81.48 லட்சம் ஈபிஎஸ் ஓய்வூதியதாரர்களில், ஏறத்தாழ 73.55 லட்சம் பேர் தற்போது மாதத்திற்கு 3,000 ரூபாய்க்கும் குறைவான ஓய்வூதியத்தையே பெறுகின்றனர். இத்திட்டம் அமலுக்கு வந்தால், இவர்கள் அனைவரும் நேரடியாக பயனடைவார்கள்.
கடந்த 2014-ஆம் ஆண்டில்தான் குறைந்தபட்ச ஓய்வூதியம் 250 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதே காலகட்டத்தில் பிஎஃப் சம்பள வரம்பும் 6,500 ரூபாயில் இருந்து 15,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஈபிஎஃப்ஓ-வின் கட்டாய சம்பள உச்சவரம்பு 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இதனால் ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டும் என ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வாழ்க்கை செலவினங்கள் மற்றும் பணவீக்கம் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 3,000 அல்லது 7,500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தொழிற்சங்கங்களும் ஓய்வூதிய அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
இது தொடர்பாக தொழிலாளர் அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனை நடக்கிறது. இருந்தாலும் அரசோ அல்லது ஈபிஎஃப்ஓ அமைப்போ குறைந்தபட்ச ஓய்வூதிய உயர்வு குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. நவம்பர் 19 அன்று நடைபெறவுள்ள இக்கூட்டத்தின் முடிவிலேயே, குறைந்தபட்ச ஓய்வூதிய உயர்வு குறித்த தெளிவான நிலவரம் தெரியவரும். மத்திய அரசு தன்னுடைய பட்ஜெட் உள்ளிட்டவ்ற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தான் இந்த முடிவினை எடுக்கும் என சொல்லப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

