தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO தனது சந்தாதாரர்கள் பிஎஃப் பணத்தை நேரடியாக யூபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் எடுத்து பயன்பெறும் வசதியை அடுத்த மாதம் நடைமுறைக்கு கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் யூபிஐ மூலம் பிஎஃப் பணத்தை எடுப்பதில் வரம்புகள் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஈபிஎஃப்ஓ அமைப்பின் விரிவான டிஜிட்டல் திட்டமான EPFO 3.0 அப்கிரேட் மூலம் பிஎஃப் கணக்குகளை கையாளும் முறையே முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. நாம் எப்படி நம் வங்கி கணக்குகளை டிஜிட்டல் பேங்கிங் மூலம் போன் வாயிலாகவே செயல்படுத்துகிறோமோ அதே போல பிஎஃப் கணக்கையும் ஆன்லைனிலேயே நிர்வகிக்க முடியும். இதற்கேற்ப கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட வண்ணம் உள்ளன.

தற்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க விண்ணப்பம் செய்து வார கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால் அதனை மாற்றி நினைகும் நேரத்தில் விண்ணப்பம் செய்து சில நொடிகளிலேயே யூபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதியை கொண்டு வர ஈபிஎஃப்ஓ அமைப்பு பல மாற்றங்களை சோதனை செய்து வருகிறது.
ஈபிஎஃப்ஓ-வின் யூபிஐ அடிப்படையிலான கோரிக்கை தீர்வு திட்டம் குறித்து அண்மையில் நடந்த மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது யூபிஐ மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதிக்கான தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகள் முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அப்போது கூறியுள்ளனர். வெவ்வேறு பயனர் குழுக்களிடம் இரண்டு சுற்று சோதனைகளை ஈபிஎஃப்ஓ நடத்தியுள்ளதுடன், சோதனைகளின் போது கண்டறியப்பட்ட பிழைகளையும் சரிசெய்து வருகிறதாம்.
அந்த வகையில் முதல் கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட தொகையை, BHIM செயலி வழியாக யூபிஐ மூலம் பிஎஃப் உறுப்பினர்கள் நேரடியாக தங்கள் வங்கி கணக்குகளில் பெற இந்த வசதி அனுமதிக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூபிஐ மூலம் பிஎஃப் பணம் எடுக்க சில வரம்புகளும் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாம்.
குறிப்பாக பல சிறிய மதிப்புள்ள கோரிக்கைகளை தவிர்ப்பதற்கும், பரிவர்த்தனை செயலாக்க சுமையை குறைந்தபட்ச பரிவர்த்தனை தொகையாக 1000 ரூபாயை ஈபிஎஃப்ஓ பரிசீலித்து வருகிறது. அதாவது பிஎஃப் உறுப்பினர்கள் 1,000 ரூபாய்க்கு குறைவான தொகையை எடுக்க யூபிஐ வசதியை பயன்படுத்த முடியாது. 1000 ரூபாய் மற்றும் அதற்கு மேல் உள்ள தொகையை தான் யூபிஐ மூலம் எடுக்க முடியும் என சொல்லப்படுகிறது. அதிகபட்சம் எவ்வளவு எடுக்கலாம் என்பதை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
அடுத்த மாத இறுதிக்குள் யூபிஐ மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி நடைமுறைக்கு கொண்டு வர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே விரைவில் இது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை ஈபிஎஃப்ஓ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

