அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் அறிவிக்கும் வட்டி விகிதத்திற்கும் சர்வதேச அளவில் தங்கத்தின் விலைக்கும் இடையே நெருங்கிய தொடர்புள்ளது. அந்த வகையில் வட்டி விகிதம் தொடர்பான முக்கிய அறிவிப்பை அமெரிக்க மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
பொதுவாக அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும் போது முதலீட்டாளர்கள் வட்டி தரும் பத்திரங்கள் மற்றும் வைப்பு தொகைகளை நோக்கி நகர்வார்கள். இதனால் தங்கம் மீதான முதலீடு குறைந்து, தங்கத்தின் விலை குறையும். அதுவே வட்டி விகிதம் குறையும் போது டாலரின் மதிப்பு பலவீனமடையும். இதனால் தங்கம் பாதுகாப்பான முதலீடாக மாறி, தங்கத்தின் விலை அதிகரிக்கும். வட்டி விகிதத்தில் மாற்றமில்லாத போது தங்கம் விலை பெரிதாக ஏறவும் இல்லாமல் இறங்கவும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் வர்த்தகமாகும்.

இந்நிலையில் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி இரண்டு நாட்கள் கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தின் முடிவில் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என அறிவித்துள்ளது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தனது பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை 3.75% முதல் 4.00% என்ற அளவிலேயே தொடர்வதாக முடிவு செய்துள்ளது.
பணவீக்கம் இன்னும் எதிர்பார்த்த இலக்கை விட அதிகமாக இருப்பதால், இப்போதைக்கு வட்டி விகிதத்தை குறைக்கும் எண்ணம் இல்லை என ஃபெடரல் தலைவர் கெவின் வார்ஷ் சுட்டிக்காட்டியுள்ளார். சந்தை நிலைமைகள் மற்றும் நுகர்வோர் விலை தரவுகளை பொறுத்தே அடுத்தடுத்த கூட்டங்களில் முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
வட்டி விகிதம் மாறவில்லை என்பதால் உலக சந்தையில் தங்கம் விலை மிக லேசான உயர்வை கண்டது. அதாவடு ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,074 டாலர்கள் வரை உயர்ந்து பின்னர் 4,036 டாலர்கள் வரை சரிவை கண்டது. எனவே இந்திய சந்தையிலும் தங்கம் விலை லேசாக உயர வாய்ப்புள்ளது. இனி வரும் நாட்களீல் தங்கள் விலை பெரிய அளவில் உயராது அதே வேளையில் பெரிய அளவில் சரிவும் இருக்காது என கூறும் நிபுணர்கள், குறிப்பிட்ட விலை வரம்பிலேயே ஏறி இறங்கும் என கணிக்கின்றனர்.
ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்காமல், நீண்ட காலத்திற்கு வட்டி விகிதம் அதிகமாகவே இருக்கும் என்ற சிக்னலை கொடுத்ததால், அமெரிக்க டாலர் மற்றும் பத்திர முதலீடுகள் பலம் பெற்றுள்ளன. இதனால் தங்கம் விலையில் சில காலத்திற்கு பெரிய ஏற்றம் இருக்காது என்றே தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க மத்திய வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து வருவதால், குறுகிய காலத்தில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். இருப்பினும், நீண்ட கால முதலீடாக தங்கம் தொடர்ந்து வலுவாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது. எனவே தங்கத்தை முதலீடாக பார்ப்பவர்கள் நீண்ட கால இலக்கை கொண்டு முதலீடை மேற்கொள்ளலாம். குறுகிய கால லாபம் பார்ப்பவர்கள் டெக்னிக்கல் அனலிசஸ் செய்து முடிவினை எடுக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

