ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் நம்மை பிரமிக்க வைக்கும் அதே வேளையில் எதிர்காலம் குறித்த அச்சுறுத்தல்களையும் தருகிறது. ஏஐ தந்தை என அழைக்கப்படுபவரும் நோபல் பரிசு பெற்றவருமான ஜெஃப்ரி ஹிண்டன் புதிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு மனிதர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு மாடல்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத சொந்த மொழியை உருவாக்க தொடங்கியுள்ளதாக, ஏஐ தந்தை ஜெஃப்ரி ஹிண்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏஐ அமைப்புகள் மேலும் மேம்படும்போது, அவை எதை பேசுகின்றன மற்றும் என்ன செய்கின்றன என்பதை கண்காணிப்பது கடினமாக மாறும் என அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் உள்ள மனிடோபா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஹிண்டன், ஏஐ ஏஜெண்டுகள் இறுதியில் மனிதர்களை விட மிகவும் புத்திசாலிகளாக மாறக்கூடும் என்றும், நாம் ஈடுகொடுக்க முடியாத வேகத்தில் அறிவை பகிர்ந்து கொள்ளக்கூடும் என்றும் கூறினார். நம்மால் புரிந்துகொள்ள கடினமான சிந்தனை முறைகளை உருவாக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாத ஒரு இயந்திர மொழியை ஏஐ மாடல்கள் உருவாக்க தொடங்கிவிட்டன. இது மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் என அவர் கூறியுள்ளார். மனிதர்களை விட ஏஐ-க்கு உள்ள மற்றொரு பெரிய சாதகமான அம்சம், அறிவை பகிர்ந்து கொள்ளும் திறன் என ஹிண்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனிதர்கள் தங்கள் சொந்த அனுபவங்களிலிருந்து கற்று கொள்கிறார்கள், ஆனால் ஏஐ ஏஜெண்டுகள் ஆயிரக்கணக்கான நகல்களாக செயல்பட்டு ஒவ்வொன்றும் கற்றுக்கொண்டதை மற்றவற்றுடன் வேகமாக பகிர்ந்து கொள்கின்றன என கூறியுள்ளார். ஒவ்வொரு ஏஐ ஏஜெண்டும் சுதந்திரமாக ஏதாவது ஒன்றை கற்றுக்கொண்டு, அந்த அறிவை மற்ற ஆயிரக்கணக்கான ஏஜெண்டுகளுக்கு அனுப்பும் திறன், அதிகமாகி உள்ளது என கூறியுள்ளார்.
ஏஐ அமைப்புகள் மனிதர்களை விட புத்திசாலிகளாக மாறும்போது, அவை எவ்வாறு சிந்திக்கின்றன அல்லது தொடர்பு கொள்கின்றன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் போக கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார். இவர் தொடர்ச்சியாக ஏஐ-ஆல் ஏற்பட போகும் ஆபத்துகள் குறித்து எச்சரித்து வருகிறார்.
ஏஐ தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதால், இது மிக விரைவில் மனிதர்களின் கட்டுப்பாட்டை மிஞ்சி செயல்படும் அபாயம் இருக்கிறது இது மனித குலத்திற்கே ஆபத்து என ஏற்கனவே அவர் எச்சரித்துள்ளார். முன்னதாக ஓபன் ஏஐ நிறுவனத்தின் ஏஐ ஏஜெண்டுகள் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி தாங்களாகவே டீமாக செயல்பட்டு Hugging Face தளத்தை ஹேக் செய்தன. அப்போது மனித கட்டளைகளை மீறியதோடு மட்டுமில்லாமல், ரகசிய தகவல் பரிமாற்றங்களையும் நடத்தின. இந்த தகவல்கள் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஜெஃப்ரி ஹிண்டன் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications

