மஞ்சள் உலோகமான தங்கத்தின் விலை நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. தற்போது 1 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.8.075 என்ற அளவில் உள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, டிரம்பின் வரி கொள்கைகள் காரணமாக வர்த்தக போர் எழும் என்ற அச்சம், பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருவதால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கம், வெள்ளி ஆகியவற்றில் முதலீடு செய்ய தொடங்கியிருப்பது, தங்கத்துக்கான தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
நம் நாட்டில் தங்கத்தின் உற்பத்தி பெயரளவுக்கு மட்டுமே நடைபெறுகிறது. எனவே தங்க தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி வாயிலாகத்தான் பூர்த்தி செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது சாமானிய மக்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், என்னதான் விலை உயர்ந்தாலும் நம் மக்கள் தங்கம் வாங்குவதை ஒரு போதும் நிறுத்த மாட்டார்கள். தங்கம் வாங்கும் அளவை வேண்டுமானால் குறைத்து கொள்வார்கள். அப்போது தங்கத்துக்கான தேவை குறையும், அதன் எதிரொலியாக தங்கத்தின் இறக்குமதியும் குறையும். தற்போது அதுதான் நடந்து வருகிறது.

தற்போது, தங்கத்தின் விலை உச்சத்தில் இருப்பதால் தங்கத்துக்கான தேவை மந்தமாக உள்ளது. இதனால் நடப்பு பிப்ரவரி மாதத்தில் நாட்டின் தங்கம் இறக்குமதி சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 85 சதவீதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2025 பிப்ரவரி மாதத்தில் 15 டன் அளவுக்கே தங்கம் இறக்குமதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிகவும் குறைந்தபட்ச ஒரு மாத தங்க இறக்குமதி அளவாகும். 2024 பிப்ரவரி மாதத்தில் நம் நாட்டுக்குள் 103 டன் தங்கம் இறக்குமதியாகி இருந்தது.
தங்கத்தின் விலை குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. எனவே இன்னும் சில காலம் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. தங்கம் இறக்குமதி குறைவால் ஒரு வகையில் நன்மையும் உள்ளது. தங்கம் இறக்குமதி குறைந்தால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும். தங்கம் இறக்குமதி குறைந்தால் அதற்கான செலவினமும் குறையும் என்பதால் அன்னிய செலாவணி வெளியேறுவது குறையும், இதனால் ரூபாய் மதிப்பு நிலையாக இருக்கும். சர்வதேச அளவில் தங்கம் பயன்பாட்டில் நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தில் உள்ளது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications