அமெரிக்க பணவீக்க தரவுகளும், பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித உயர்வு குறித்த கணிப்பும், டிரம்ப் அரசு அறிவித்துள்ள 14 நாடுகள் மீதான புதிய வரி விதிப்பும் அமெரிக்க சந்தையின் புதன்கிழமை வர்த்தகத்தில் சுமார் 3 சதவீதம் வரையில் சரிவு பாதைக்கு கொண்டு சென்றது.
ஆனால் இந்த சரிவில் இருந்து சில மணிநேரங்களில் மீண்டு இன்று இந்திய சந்தையில் வர்த்தகம் துவங்கும் போது உயர்வுடன் துவங்கிய காரணத்தால் சென்னை ரீடைல் சந்தையில் தங்கம் விலை உயர்வுடன் காணப்படுகிறது.

வியாழக்கிழமை ரீடைல் சந்தை வர்த்தகத்தில் 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 131 ரூபாய் உயர்ந்து 12,589 ரூபாய் அதிகரித்துள்ளது. இதேபோல் 22 கேரட் ஒரு கிராம் 120 ரூபாயும், ஒரு சவரன் 960 ரூபாயும் உயர்ந்து 92,320 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.
வெள்ளி விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 1,65,000 ரூபாயாகவும், பிளாட்டினம் விலை 99 ரூபாய் உயர்ந்து 3,861 ரூபாயாக உள்ளது.
மேலும் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 0.30 சதவீதம் உயர்ந்து 3,599.87 டாலராக உள்ளது, காமெக்ஸ் சந்தையில் டிசம்பர் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டர் விலை அதிரடியாக 1.53 சதவீதம் வரையில் உயர்ந்து 3,589.80 டாலராக உள்ளது.
அமெரிக்காவில் விடுமுறைக் காலம் என்பதால் முதலீட்டாளர்கள் தங்களுடைய ஷார்ட் பொசிஷன்களை கவர் செய்வதற்காக அதிகம் முதலீடு செய்யும் காரணத்தால் தங்கம் விலை உயர்கிறது என டேஸ்டிலைவ் நிறுவனத்தின் உலகளாவிய தலைவர் இலியா ஸ்பைவாக் தெரிவித்துள்ளார்.
இதேவேளையில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கத்தை விற்பனை செய்து பணமாக மாற்றுவதும் தொடரும், முதலீட்டாளர்கள் இந்த சென்சிடீவான சந்தையில் முதலீடு செய்ய விரும்பாத காரணத்தால் பணமாக வைத்திருப்பது மேல் என கருதுகின்றனர்.
மேலும் அமெரிக்காவில் ரீடைல் பணவீக்கம் 3.8% ஆக உயர்ந்துள்ள வேளையிலும், அந்நாட்டின் பொருளாதாரம் வருடாந்திர அடிப்படையில் 4.3 சதவீதம் அளவில் 3ஆம் காலாண்டில் வளர்ச்சி அடைந்துள்ளது, இது முந்தைய கணிப்பைக் காட்டிலும் அதிகம் என்பதால் பெடரல் ரிசர்வ் கடுமையான நாணய கொள்கையை எளிதாகச் செயல்படுத்த முடியும். இதனால் வட்டி விகிதம் உயர்வு நிச்சயம் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
பெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் உயர்த்தும் போது தங்கம் போன்ற வட்டி வருமானம் அளிக்காத தங்கம் முதலீட்டாளர்களுக்கு அவசியமற்ற முதலீடாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
