அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கை முடிவுகளை வெளியிட்ட நாள் முதல் தங்கம் விலை உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையில் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதன் வாயிலாக இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை சுமார் 2000 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தங்கம் விலை பல மாத சரிவை எட்டியுள்ளது.
ஆனால் இந்தச் சரிவு நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்றும், அடுத்த ஒரு மாதத்தில் நிலைமை தலைகீழாக மாற உள்ளது எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ்
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் 2023ஆம் ஆண்டில் குறைந்தது 2 முறை வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளதாகவும், நடப்பு நிதியாண்டில் ஒவ்வொரு மாதமும் 120 பில்லியன் டாலர் அளவிலான சொத்துக்களை வாங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
சர்வதேச தங்கம் விலை
இதன் எதிரொலியாகத் தங்கம், கச்சா எண்ணெய் சந்தைகளில் இருக்கும் முதலீடுகள் அதிகளவில் பத்திர சந்தைக்கும், பங்குச்சந்தைக்கு மாறி வருகிறது. இதனால் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை ஜூன் 16ஆம் தேதி 1860 டாலராக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கம் விலை நேற்று 1,773 டாலராகக் குறைந்துள்ளது
200 டாலர் சரிவு
இதன் வாயிலாகத் தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் (28.35 கிராம்) 24 கேரட் சுமார் 200 டாலர் அளவில் குறைந்தது. ஆனால் இந்தச் சரிவு தற்காலிகமானது என்றும் அடுத்தச் சில நாட்களுக்கு மட்டுமே சரிவு இருக்கும் என்று சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு மாதத்தில் மீண்டும் உயர்வு
வெள்ளிக்கிழமை எம்சிஎக்ஸ் சந்தையின் வர்த்தக முடிவில் 10 கிராம் தங்கம் விலை 46,800 ரூபாய் வரையில் சரிந்துள்ளது, ஆனால் அடுத்த ஒரு மாத காலத்தில் 10 கிராம் தங்கம் விலை 48500 ரூபாய் வரையில் மீண்டும் உயரத் துவங்கும் என்று புல்லியன் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
இதற்கிடையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை காலையில் உயர்வுடன் இருந்தாலும், மாலை அமெரிக்க வர்த்தகச் சந்தை துவங்கி வேளையில் தங்கம் விலை மளமளவென 46,800 வரையில் சரிந்து முடிவடைந்தது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
இதேபோல் அதிகளவிலான தடுமாற்றத்தைச் சந்தித்த வெள்ளி விலை வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 67,580 ரூபாய்க்கு சரிந்துள்ளது. வெள்ளி விலை வியாழக்கிழமை வர்த்தகத்தை ஒப்பிடுகையில் வெள்ளிக்கிழமை விலை வெறும் 0.03 சதவீதம் மட்டுமே குறைவு.
தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு
இதனால் தங்கம் வாங்கத் திட்டமிடுவோர் இந்த விலை சரிவு காலத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தித் திட்டமிட்டு விரைவில் தங்கம் வாங்குவது நல்லது. தங்கம் விலை பெரிய அளவில் குறைந்துள்ள நிலையில் இதை மேம்படுத்த முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்யவும் வாய்ப்பு உள்ளதால் சீக்கிரமாகவே விலை உயரும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications