தங்கம் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே இருக்கிறது. தங்கத்தை வாங்க விரும்புபவர்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
சென்னை ஆபரணத் தங்கம் விலை என்ன? எம் சி எக்ஸ் தங்கம் விலை என்ன? சர்வதேச தங்கம் விலை என்ன? வெள்ளி விலை நிலவரம் என்ன?
எதிர்காலத்தில் தங்கம் விலை என்ன ஆகும்? என்ன காரணங்களால் தற்போது தங்கம் விலை இறக்கம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது? வாருங்கள் எல்லாவற்றுக்கும் விடை காண்போம்.

சென்னை ஆபரணத் தங்கம் விலை
பன்முகத் தன்மை கொண்ட சென்னை மாநகரத்தில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்று 52,380 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,020 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

தங்கம் விலை 6,750 ரூபாய் சரிவு - 24 கேரட்
கடந்த ஆகஸ்ட் 2020-ல் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் 59,130 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அந்த விலையை, நேற்றைய விலை உடன் ஒப்பிட்டால் (59,130 - 52,380) 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 6,750 ரூபாய் சரிந்து இருக்கிறது. 24 கேரட் ஒரு பவுன் ஆகஸ்ட் உச்ச விலையை, நேற்றைய விலை உடன் கணக்கிட்டால் (47,304 - 41,904) 5,400 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது.

22 கேரட் தங்கம் விலை 6,180 சரிவு
அதே போல ஆகஸ்டில், 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 54,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதை, நேற்றைய 48,020 ரூபாய் உடன் ஒப்பிட்டால் (54,200 - 48,020) = 6,180 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தின், 22 கேரட் ஒரு பவுன் தங்கம் விலை உடன், நேற்றைய விலையை ஒப்பிட்டால் (43,360 - 38,416) 4,944 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது.

MCX Gold Price டிசம்பர் காண்டிராக்ட்
எம் சி எக்ஸ் சந்தையில், டிசம்பர் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, நேற்றைய குளோசிங் விலையான 50,626 ரூபாயில் இருந்து 6 ரூபாய் விலை இறக்கம் கண்டு 50,620 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

தங்கம் விலை 56,379-ல் இருந்து 50,620-க்கு சரிவு
டிசம்பர் 2020 மாதத்துக்கான எம் சி எக்ஸ் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, கடந்த 7 ஆகஸ்ட் 2020 அன்று அதிகபட்சமாக 56,379 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. இந்த உச்ச விலையை, இன்றைய விலையான 50,620 ரூபாய் உடன் ஒப்பிட்டால் 5,759 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது.

MCX Silver Price - டிசம்பர் காண்டிராக்ட்
இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான எம் சி எக்ஸ் சந்தையில், டிசம்பர் மாதத்துக்கான 1 கிலோ வெள்ளி ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, நேற்றைய குளோசிங் விலையான 61,941 ரூபாயில் இருந்து 40 ரூபாய் விலை இறக்கம் கண்டு 61,901 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

வெள்ளி விலை 79,723-ல் இருந்து 61,941-க்கு சரிவு
எம் சி எக்ஸ் வெள்ளி ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, கடந்த ஆகஸ்ட் 2020-ல் அதிகபட்சமாக 79,723 ரூபாயைத் தொட்டு வர்த்தகமனது. இந்த உச்ச விலை உடன், தற்போது வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் விலையான 61,901 ரூபாயை ஒப்பிட்டால் 17,822 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது.

சர்வதேச தங்கம் விலை XAU USD CUR
ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, நேற்று 1,913 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று 3 டாலர் விலை இறக்கம் கண்டு 1,910 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த சில வாரங்களாக, மெல்ல சர்வதேச தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

153 டாலர் சரிவில் சர்வதேச தங்கம் விலை
என்ன தான் சர்வதேச தங்கம் விலை ஏற்றம் கண்டு வந்தாலும், கடந்த ஆகஸ்ட் உச்ச விலையான 2,063 டாலர் உடன், தற்போது வர்த்தகமாகி வரும் 1,910 டாலர் தங்கம் விலையை ஒப்பிட்டால், 153 டாலர் விலை வீழ்ச்சி கண்டு இருப்பதை அப்பட்டமாகப் பார்க்க முடிகிறது.

ட்ரம்ப் டிஸ்சார்ஜ்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வால்டர் ரீட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மூன்று நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, நேற்று (05 அக்டோபர் 2020), மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார். இது தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு தடையாக அமைந்து இருக்கிறது.

ஸ்டிமுலஸ் பேக்கேஜ் பேச்சு வார்த்தை
அமெரிக்க அரசு, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் தன் பொருளாதாரத்தை மீட்க, ஒரு பெரிய ஸ்டிமுலஸ் பேக்கேஜை அறிவிக்க இருப்பதாக பல மாதங்களாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறது. இந்த ஸ்டிமுலஸ் பேக்கேஜ் தொடர்பாக, அமெரிக்க அவைப் பேச்சாளர் நான்சி பெலோசி (Nancy Pelosi) மற்றும் அமெரிக்க கருவூல செயலர் ஸ்டீவன் ம்னுசின் (Steven Mnuchin) இன்று கலந்தாலோசிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஸ்டிமுலஸ் வந்தால் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என அனலிஸ்ட்கள் சொன்னது இங்கு குறிப்பிடத்தக்கது.

தட்டுத் தடுமாறும் அமெரிக்க டாலர் கரன்சி
கடந்த 25 செப் 2020 அன்று, 94.64 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்த அமெரிக்க டாலர் இண்டெக்ஸ், இன்று மீண்டும் பழைய படி சரிந்து கொண்டு இருக்கிறது. தற்போது 93.41 புள்ளிகளில் தடுமாறிக் கொண்டு இருக்கிறது. அமெரிக்க டாலர் இண்டெக்ஸ் பெரிய அளவில் வலுவடைய வாய்ப்பு இல்லை எனச் கோட்டக் செக்யூரிட்டீஸ் சொன்னது இங்கு நினைவு கூறத்தக்கது. டாலர் பலவீனமடைந்தால், தங்கத்தில் முதலீடு அதிகரித்து, தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என தரகு நிறுவனங்கள் சொன்னது இங்கு குறிப்பிடத்தக்கது.

என்ன காரணங்களால் தங்கம் விலை அதிகரிக்கலாம்
1. தள்ளாடும் அமெரிக்க பொருளாதாரம் & உலக பொருளாதாரம்
2. அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை
3. பிரெக்சிட், அமெரிக்க சீன புகைச்சல்கள் போன்ற பூகோள அரசியம் பிரச்சனைகள் (Geopolitical Issues)... போன்ற பல காரணங்களால் தங்கம் விலை அதிகரிக்கலாம் என செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

எதிர்காலத்தில் தங்கம் விலை என்ன ஆகும்
தங்கம் விலை, 1,900 டாலரைக் கடக்க வேண்டும், அப்போது தான் தங்கத்தின் ஏற்ற டிரெண்ட் உறுதி செய்யப்படும் என்றது ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட். கடந்த சில வர்த்தக நாட்களில் சர்வதேச தங்கம் விலை 1,900 டாலரைக் கடந்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இனி தங்கம் தன் பழைய உச்சமான 2,063 டாலரை நோக்கி, சில பல ஏற்ற இறக்கங்களுடன், விலை ஏற்றம் காணும் என எதிர்பார்க்கலாம். க்ரெடிட் சூசி சொல்லி இருப்பது போல முதலில் 2,075 டாலரைக் கடந்த பின், 2,175 டாலரையும், அதன் பின் 2,300 டாலரையும் தொடும் என எதிர்பார்க்கலாம்.