தங்கம் விலையானது நேற்று சற்று தடுமாற்றத்தில் இருந்த நிலையில், இன்று மீண்டும் பலத்த வீழ்ச்சியினை காணத் தொடங்கியுள்ளது.
தங்கத்திற்கு எதிராக பல காரணிகள் உள்ள நிலையிலும், நேற்று சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. ஆனால் இது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று குழப்பத்தினை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் தங்கத்திற்கு எதிராக பல காரணிகள் உள்ள நிலையில், தங்கத்தினை இன்று வாங்கலாமா அல்லது இன்னும் விலை குறையுமா என்று பல கேள்விகள் வந்தன.
அதிலும் சர்வதேச சந்தையில் ஏற்றம் கண்டும், இந்திய சந்தையில் சரிவினைக் கண்டதாலும் சந்தையானது, இனி எப்படி இருக்கும்? வாங்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் நீடித்து வந்தது.

இன்று என்னென்ன பார்க்கலாம்?
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் எப்படி உள்ளது? இந்திய கமாடிட்டி வர்த்தகர்த்தில் தங்கம் விலை எவ்வளவு? இந்த இரு சந்தையிலும் வெள்ளி விலை எவ்வளவு? இன்றைய சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? இனி அடுத்து என்ன செய்யலாம். தங்கத்தின் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று மீண்டும் சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 9.40 டாலர்கள் குறைந்து, 1789.60 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. தங்கம் விலையானது நேற்றைய முடிவு விலையை விட, இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் விலையானது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவலாக 1784 டாலர்களாக உள்ளது. இதனை உடைக்கும் பட்சத்தில் தங்கம் விலையானது இன்னும் பலத்த சரிவினைக் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை
தங்கத்தின் விலையானது பலத்த சரிவினைக் கண்டிருந்தாலும், வெள்ளியின் விலையானது தொடர்ச்சியாக ஏற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது 0.19% அதிகரித்து, 27.378 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் 27.325 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 27.142 டாலர்களாக தொடங்கியுள்ளது. இதனால் வெள்ளியின் விலையானது தற்போது சற்று அதிகரித்து காணப்பட்டாலும், மீண்டும் குறையும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பலத்த சரிவில் காணப்படும் நிலையில், இந்திய சந்தையிலும் தங்கம் விலை சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 214 ரூபாய் குறைந்து, 46,685 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் கீழாகத் தான் தொடங்கியுள்ளது. இதனால் இது இன்னும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக, வெள்ளியின் விலையும் இந்திய சந்தையிலும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 15 ரூபாய் அதிகரித்து, 69,387 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று அதிகரித்து தான் தொடங்கியுள்ளது.

நீண்டகால நோக்கில் என்ன செய்யலாம்?
தங்கம் விலையானது இந்திய சந்தையில் தொடர்ந்து கடந்த ஐந்து வர்த்தக அமர்வுகளாக சரிவினைக் கண்டு வரும் நிலையில், இது நீண்டகால நோக்கில் வாங்கலாமா என்ற சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மீடியம்டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. ஏனெனில் வார கேண்டில் பேட்டர்னில் தங்கம் விலையானது இன்னும் சரியும் விதமாகவே காணப்படுகிறது.

இறக்குமதி வரி குறைப்பு ஆதரவு
கடந்த பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கம் இறக்குமதி வரியானது குறைக்கப்பட்டது. இது சந்தைக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தொடர்ந்து சரிவிலேயே காணப்படுகிறது. அதிலும் கடந்த ஆக்ஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது, 9,500 ரூபாய்க்கு மேல் சரிவில் காணப்படுகிறது.

அதிகரிக்கும் பத்திர லாபம்
அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ச்சியாக ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், அதன் லாபம் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் இது வழிவகுத்துள்ளது. இதனால் தங்கம் விலையானது தொடர்ந்து சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது. குறிப்பாக ஸ்பாட் கோல்டின் விலையானது 0.2% குறைந்தும், 1791.36 டாலர்களாக உள்ளது.

டாலர் Vs தங்கம்
தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான, டாலர் மதிப்பானது மூன்று வார குறைந்த மதிப்பில் இருந்து ஏற்றம் கண்டுள்ளது. இது தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. அதோடு தங்கம் ETFகளில் இருந்தும் தொடர்ந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதன் காரணமாகவும், தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகின்றது.

தடுப்பூசிகள்
கொரோனாவின் தாக்கம் பல நாடுகளில் குறையத் தொடங்கியுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியின் கொரோனா தடுப்பூசிக்கு அவசர தேவைக்கு பயன்படுத்த சில தினங்களுக்கு முன்பு அனுமதி கொடுத்தது. இது அதிகரித்து வரும் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இது சர்வதேச பொருளாதாரம் மீண்டு வர இது வழிவகுக்கும். இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழி வகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..

இன்று தங்கம் வாங்கலாமா?
தங்கம் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறினாலும், தற்போதைக்கு மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. அதோடு தங்கத்திற்கு எதிராகவே அனைத்து காரணிகளும் வந்து கொண்டுள்ளது. ஆக முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து, கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்ல விஷயமே.