கடந்த ஆண்டில் தங்கம் விலையானது இந்திய சந்தையில் 27% அதிகரித்துள்ளது. இதே வெள்ளியின் விலையானது 50% அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 10 கிராம் தங்கம் விலையானது 56,200 ரூபாயினை தொட்டது. கிலோ வெள்ளியின் விலை கிட்டதட்ட 80,000 ரூபாயினை தொட்டது.
இதே சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 25 சதவீதம் ஏற்றம் கண்டது. இது கடந்த ஒரு தசாப்தத்தில் ஒரு வருடத்தில் இவ்வளவு ஏற்றம் கண்டது 2020ல் தான்.
கடந்த 2020ல் இருந்தே தங்கம் விலையானது வலுவான ஏற்றம் கண்டு வரும் நிலையில், நடப்பு ஆண்டிலும் நிபுணர்கள் தங்கத்தினை ஏற்றம் காணலாம் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஆங்கில தளத்தில் வெளியான ஒரு கணிப்பு தங்கம் விலையானது 2021ல் 65,000 ரூபாயினை தொடலாம் என்று கணித்துள்ளது. சரி வாருங்கள் அதனை பற்றித் தான் பார்க்கவிருக்கிறோம்.

தங்கம் விலையேற்றம்
கடந்த ஆண்டில் தங்கம் விலையானது கொரோனாவிற்கு முன்பு வரையில் சாதாரண முதலீடுகளைப் போல் தான் பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்பட்டது. ஆனால் கொரோனாவின் வருகைக்கு பிறகு ஏற்றத்தினை மட்டுமே கண்டது. அவ்வப்போது சற்று சரிவினைக் கண்டாலும், ஒட்டுமொத்தத்தில் கடந்த ஆண்டில் 27% ஏற்றத்திலேயே காணப்படுகிறது. ஆக இது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை - மார்ச் மாத நிலவரம்
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 38,400 ரூபாயாகவும், இதே சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 1451.10 டாலர்களாகவும் காணப்பட்டது. ஆனால் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இது இந்தியாவில் மட்டும் அல்ல, சர்வதேச அளவிலும் பல நாடுகளிலும் இதே கதிதான்.

ஆகஸ்ட் மாதத்தில் உச்சம் தொட்ட தங்கம்
இதற்கிடையில் பொருளாதாரத்தினையும் இந்த கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத அரக்கன் வாரிச் சுருட்டிக் கொண்டு போனது. இந்த காரணத்தினால் தங்கம் விலையானது கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 10 கிராமுக்கு 56,200 ரூபாயினையும், இதே டாலரில் அவுன்ஸூக்கு 2075 டாலர்களையும் தொட்டது.

தங்கம் விலை சரிவு
அதிகரித்து வரும் கொரோனா தாக்கம், கொரோனாவிலிருந்து பொருளாதாரத்தினை மீட்டெடுக்க மத்திய வங்கிகள் வட்டி குறைப்பு மற்றும் ஊக்கத்தொகை என பல காரணங்களில் தங்கம் விலையினை உயர்த்தியது. பிறகு உலகெங்கிலும் லாக்டவுன் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், தங்கம் விலையானது மீண்டும் அழுத்தத்தினை சந்தித்தது.

தங்கத்திற்கு சாதகமான தடுப்பூசி
இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக கொரோனா தடுப்பூசிகளும் சாதகமாக வந்தது. இதனால் தங்கம் விலையானது மேலும் சரிவினைக் கண்டது. எனினும் ஆண்டின் தொடக்கத்துடன் ஒப்பிடும்போது, தங்கம் விலையானது ஏற்றத்திலேயே காணப்படுகிறது. இதற்கிடையில் தங்கம் விலையானது நடப்பு ஆண்டில் ஏற்றத்தினை காணலாம் என நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.

தங்கத்திற்கு எதிரான முக்கிய காரணி
இதற்கு தங்கத்திற்கு சாதகமான காரணிகள் இன்னும் பெரியளவில் மாற்றம் காணவில்லை. குறிப்பாக ஃபண்டமெண்டல் காரணிகள் எதுவும் மாற்றம் காணவில்லை. குறிப்பாக வட்டி விகிதங்கள் குறைந்துள்ள நிலையில், இதுவே தங்கத்தில் முதலீடுகளை செய்ய ஊக்குவிக்கும். தங்கம் பணவீக்கத்திற்கு எதிராக, சிறந்த ஹெட்ஜிங் ஆக இருப்பதால், இதுவும் தங்கம் விலை ஏற்றம் காண முக்கிய காரணமாக அமையலாம்.

தங்கம் விலை குறையுமா?
தங்கம் விலை மீண்டும் ஏற்றம் காண தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் சரிவினைக் கண்டால் அதன் முக்கிய சப்போர்ட் லெவல்கள் 47,700 - 47,200 ரூபாயாகும். இதே டாலரில் 1750 டாலர்களாகும். இதே மீடியம் டெர்மில் ஏற்றம் காணும் பட்சத்தில் தங்கம் விலையானது 53,500 ரூபாய் தொடலாம் என்றும், இதே நீண்டகால நோக்கில் 60,500 ரூபாய் வரை தொட வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ரூ.65,000 தொடுமா?
நிபுணர்கள் 10 கிராம் தங்கம் விலையை 65,000 ரூபாயினை தொடலாம் என்று கணித்துள்ளனரே, அது சாத்தியமா? இந்த அளவுக்கு ஏற்றம் காணுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது 2021ம் ஆண்டு இறுதிக்குள் இந்த லெவலை தொடவும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 90,000 ரூபாயினை தொடலாம் என்றும் கணித்துள்ளனர். போகிற போக்கினை பார்த்தால், தொட்டாலும் தொடலாம்..