தங்கம் விலை 2026-ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் வரலாற்று உச்சத்தில் விற்பனையாகிக் கொண்டிருந்தது. ஆனால் அதிலிருந்து தற்போது விலை குறைந்திருக்கிறது. இதனால் இந்த ஆண்டு தந்தேராஸ் மற்றும் தீபாவளி பண்டிகையில் இந்தியர்கள் அதிக அளவில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்கியுள்ளனர். கடந்த ஆண்டின் இதே நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் தங்கம் விற்பனை 30 சதவீதமும், வெள்ளி விற்பனை 10 சதவீதமும் அதிகரித்துள்ளதாக இந்திய புல்லியன் ஜுவல்லர்ஸ் அசோசியேசன்(IBJA) தெரிவித்திருக்கிறது.
இந்த ஆண்டு தந்தேராஸ் மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது பொதுமக்கள் சுமார் 52 டன் தங்கத்தை ரூ. 72,000 கோடிக்கும், 300 டன் வெள்ளியை ரூ. 5,400 கோடிக்கும் வாங்கியுள்ளதாக IBJA தெரிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.8 லட்சம் என்ற உச்ச விலையை தொட்டது. ஆனால் அதிலிருந்து தற்போது ரூ.1.42 லட்சமாக குறைந்திருக்கிறது. இதுவே வாடிக்கையாளர்கள் நகைக்கடைகளை நோக்கி திரும்பக் காரணமாக அமைந்துள்ளது. அதோடு நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை திருமண சீசன். இதற்காகவும் மக்கள் முன்கூட்டியே தங்கம் வாங்கி வருகின்றனர்.
இந்த ஆண்டு தந்தேராஸ் மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது நகை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களிடம் தங்கம் வாங்குவதை தள்ளி போடுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதனால் மக்களும் நகை வாங்குவதை தள்ளிப் போட்டிருந்தனர். தற்போது தங்கம் விலை குறைந்ததாலும், கச்சா எண்ணெயின் விலை சரிவாலும் இனிவரும் நாட்களில் மீண்டும் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளதால் மக்கள் ஆர்வத்துடன் தங்கத்தை வாங்கி வருகின்றனர் என்று ஐபிஜேஏ செயலாளர் சுரேந்திர மேத்தா கூறியுள்ளார்.
2026-ஆம் ஆண்டின் தீபாவளி மற்றும் தந்தேராஸ் நகைக்கடைக்காரர்களுக்கு சாதகமாய் அமைந்தது, நவம்பர் 6-ஆம் தேதி தந்தேராஸ் பண்டிகையும், நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி பண்டிகையும் வந்தது. மாதத்தின் தொடக்கத்திலேயே இரு பண்டிகையும் வந்ததால் மாத சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் ஆகிய இரண்டும் கைக்கு கிடைத்திருக்கும்.
பணப்புழக்கம் சிறப்பாக இருந்ததாலும், கடந்த 4 முதல் 6 மாதங்களாக தங்கத்தின் விலை குறைந்து வருவதாலும் வாடிக்கையாளர்கள் உற்சாகமாக நகை வாங்கியுள்ளனர் என்று ஆல் இந்தியா ஜுவல்லரி & டொமஸ்டிக் கவுன்சிலின் சேர்மன் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
