இன்றைய காலகட்டத்திலும் மக்களின் விருப்பமான முதலீடுகளில் தங்கத்திற்கும் முக்கிய இடம் உண்டு. அப்படிப்பட்ட தங்கம் விலையானது கடந்த ஆக்ஸ்ட் மாத உச்சத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, 8,800 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது.
இது இந்திய மக்களின் கலாச்சாரத்தோடும், பாரம்பரியத்தோடும் கலந்துள்ள நிலையில், தற்போது முதலீட்டு கலாச்சாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதுவும் உச்சத்தில் இருந்து பலத்த சரிவில் காணப்படும் நிலையில், இது வாங்க சரியான நேரமாகவும் பார்க்கப்படுகிறது.

தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு
கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, தங்கம் விலையானது, அவ்வப்போது ஏற்றம் கண்டாலும் மொத்தத்தில் சரிவில் உள்ளது. அதுவும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பார்க்கும் போது பலத்த சரிவிலேயே காணப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கம் வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

என்னென்ன பார்க்கபோகிறோம்?
அதெல்லாம் சரி, கடந்த வாரத்தில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? எவ்வளவு குறைந்திருக்கு அல்லது விலை கூடி இருக்கிறதா ? தங்கத்திற்கு சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? இனி நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? உள்ளிட்ட பலவற்றையும் இன்று பார்க்கவிருக்கிறோம்.

காமெக்ஸ் விலை சரிவு
சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் முதல் மூன்று நாட்கள் ஏற்றத்தினை கண்டிருந்தாலும், கடைசி இரண்டு நாட்கள் தங்கம் விலையானது வீழ்ச்சியினை கண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 1818.10 டாலர்களாக தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக வியாழக்கிழமையன்று 1856.60 டாலராக அதிகரித்தது. எனினும் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று 1810.10 டாலர்கள் வரையில் குறைந்து, பின் 1824.55 டாலர்களாக முடிவடைந்தது.

காமெக்ஸ் வெள்ளி விலை
வெள்ளியின் விலையானது கடந்த வாரத்தில் பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டது. எனினும் சற்று குறைந்து காணப்பட்டது. வாரத்தின் முதல் நாளில் சற்று ஏற்றத்தினை கண்ட நிலையில், அதற்கடுத்த மூன்று நாட்கள் தொடர்ச்சியாக சரிவினைக் கண்டது. எனினும் வார இறுதியில் மீண்டும் ஏற்றம் கண்டு முடிவடைந்தது. கடந்த திங்கட்கிழமையன்று 27.200 டாலர்களாக தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக செவ்வாய்கிழமையன்று 27.875 டாலராக அதிகரித்தது. எனினும் வியாழக்கிழமையன்று 26.750 டாலர்களாக குறைந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று 27.435 டாலர்களாக முடிவடைந்தது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை, கடந்த வாரத்தில் முதல் மூன்று நாட்கள் பலத்த ஏற்றம் கண்ட நிலையில், கடைசி இரண்டு நாட்கள் வீழ்ச்சி கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 47,152 ரூபாயாக தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக புதன்கிழமையன்று 48,374 ரூபாயாக அதிகரித்தது. இதே கடந்த வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 47,111 ரூபாய் வரை குறைந்து, 47,318 ரூபாயாக முடிவுற்றுள்ளது. தங்கம் விலையும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8,800 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டது. கடந்த வாரம் திங்கட்கிழமையன்று 68,700 ரூபாயாக தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக செவ்வாய்கிழமையன்று 70,757 ரூபாய் வரையில் அதிகரித்தது. எனினும் வியாழக்கிழமையன்று குறைந்தபட்சமாக 68,189 ரூபாய் வரையிலும் சென்று, பின்னர் வெள்ளிகிழமையன்று 69,117 ரூபாயாக முடிவடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 8,500 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 35,664 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று சவரன் 35,752 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த வாரத்தில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றமின்றி சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்தே காணப்படுகிறது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 7800 ரூபாய்க்கு மேல் குறைவாகத் தான் உள்ளது. ஆக இது முதலீட்டாளர்களுக்கு தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை
தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிவினைக் கண்டு வருகின்றது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 48,630 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 48,750 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 120 ரூபாய் அதிகரித்துள்ளது.

வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 73.90 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 739 ரூபாயாகவும், கிலோவுக்கு 73,900 ரூபாயாகவும் உள்ளது. வெள்ளியின் விலையும் தங்கத்தினை போலவே சற்று அதிகரித்து தான் காணப்படுகிறது. நடப்பு வார தொடக்கத்தில் 73,100 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 73,900 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் மட்டும் வெள்ளியின் விலை கிலோவுக்கு 800 ரூபாய் அதிகரித்துள்ளது.

ஊக்கத்தொகை எதிர்பார்ப்பு
அமெரிக்காவின் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு விரைவில் ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்தின் விலையில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை செய்யாமல் காத்துக் கொண்டுள்ளனர். எனினும் விரைவில் வரும் பட்சத்தில் தங்கம் விலையானது மேலும் பலத்த சரிவினைக் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் Vs டாலர்
தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பு, அமெரிக்காவில் விரைவில் அடுத்தகட்ட ஊக்கத்தொகை அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பினால் சற்று வலுவடைந்து காணப்படுகிறது. அதோடு அமெரிக்காவின் மத்திய வங்கியானது, வட்டி விகிதம் இன்னும் சில ஆண்டுகளுக்கு பூஜ்ஜியத்திற்கு அருகிலேயே இருக்கும் என்றும் சமீபத்தில் கூறியது. இது இன்னும் டாலருக்கு ஊக்கமளிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?
நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர். எனினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது திங்கட்கிழமையன்று தொடக்கத்தினை தொடக்கத்தினை பொறுத்தே இருக்கலாம். பல காரணிகளும் தங்கம் விலை குறைய ஏதுவான காரணிகளாகவே உள்ளன. என்றாலும் பணவீக்கம், அதிகரித்து வரும் கொரோனா தாக்கம், சில சர்வதேச காரணிகள் என பலவும் தங்கத்திற்கு ஆதரவாகவும் உள்ளன. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. எனினும் நீண்ட கால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம்.