கொரோன தொடக்கம் முதல் கொண்டே தங்கம் விலையானது கிடு கிடுவென்று ஏற்றம் கண்டு வந்த நிலையில், செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து சற்று சரிவினைக் கண்டு வருகிறது.
தங்கம் விலை ஏற்றம் காண பல காரணங்கள் இருந்தும், வாரத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலையானது சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக குறைந்து வருகின்றது.
இது முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல விஷயமே. ஏனெனில் எந்த அளவுக்கு விலை குறைகிறதோ? அங்கே வாங்கி வைக்கும்போது நல்ல லாபம் கிடைக்குமே. சரி இன்றைய விலை நிலவரம் எப்படி இருக்கிறது? அதற்கு என்ன காரணம் வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான இன்றும் சரிவினைக் கண்டு வருகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 9.60 டாலர்கள் குறைந்து, 1898 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கிட்டத்தட்ட 0.51% வீழ்ச்சியாகும். டாலரில் 1895 டாலர்களை உடைத்து சென்றால் தங்கம் விலையானது, சற்று சரிவினைக் காணலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் நீண்டகால நோக்கில் வாங்கி வைப்பவர்கள் வாங்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் வெள்ளி விலையானது 0.41% சரிவில் காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 0.094 டாலர்கள் குறைந்து, 23.930 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. சர்வதேச அளவில் வெள்ளியின் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், வெள்ளியின் விலை பெரியளவில் சரிவினைக் காண வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MCX தங்கம் விலை நிலவரம்
MCX தங்கத்தினை பொறுத்த வரையில் இன்று அக்டோபர் கான்டிராக்ட் எக்பெய்ரி ஆக உள்ள நிலையில், டிசம்பர் மாத கான்டிராக்டிற்கு முதலீட்டாளர்கள் ரோல் ஓவர் செய்வதும், புராபிட் புக்கிங் செய்வதனால் தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகிறது. தற்போது டிசம்பர் மாத கான்டிராக்டில் 10 கிராம் தங்கத்தின் விலையானது, 467 ரூபாய் குறைந்து, 50,106 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கிட்டதட்ட 1% வீழ்ச்சி கண்டுள்ளது.

MCX வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையை பொறுத்த வரையில் சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. இந்த நிலையில் தற்போது கிலோவுக்கு வெள்ளியின் விலையானது 652 ரூபாய் குறைந்து, 60,493 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது தற்போது 1.07% சரிவில் காணப்படுகின்றது.

டிரம்ப் விரைவில் மீண்டு வருவார்
அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் விரைவில் மீண்டு வருவார் என்ற உற்சாகத்திலேயே பங்கு சந்தைகள் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. இதன் காரணமாக தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது. டிரம்பின் உடல் நிலை குறித்து, மருத்துவர்கள், டிரம்பின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அவர் விரைவில் குணமடைவார் என்றும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம் Vs டாலர்
அமெரிக்க டாலரின் மதிப்பு பெரியளவில் மாற்றம் இல்லாமல் காணப்படும் நிலையில், டாலரின் மதிப்பானது சற்று மென்மையாகவே காணப்படுகின்றது. தற்போது டாலரின் மதிப்பானது 0.11% சரிவிலேயே காணப்படுகின்றது. இதன் காரணமாக மற்ற நாணயதாரர்களுக்கு தங்கம் விலையானது சற்று குறைவானதாகவே காணப்படுகின்றது. பொதுவாக டாலரின் மதிப்பு தங்கத்திற்கு ஆதரவாக இருந்தாலும், மத்திய வங்கிகளின் அறிவிப்புகளுக்காக முதலீட்டாளர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

ஆர்டர்களை குறைத்து வரும் முதலீட்டாளர்கள்
காமெக்ஸ் சந்தையில் தங்கத்தினை வாங்கி வைத்திருக்கும் முதலீட்டாளர்கள், செப்டம்பர் 29வுடன் முடிவடைந்த வாரத்தில் கையில் இருக்கும் தங்க ஆர்டர்களை குறைத்து வருகின்றனர். மாறாக வெள்ளியில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர் என்கிறது, அமெரிக்காவின் கமாடிட்டி ப்யூச்சர்ஸ் டிரேடிங் கமிஷன்.

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு
தங்க முதலீட்டாளர்கள் தொடர்ந்து சர்வதேச மத்திய வங்கிகளை கண்காணித்து வருகின்றனர். ஏனெனில் பொருளாதாரத்தினை மீட்டெடுக்கும் பொருட்டு ஊக்கத் தொகைகள் ஏதேனும் அறிவிக்கப்படுமா? என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதற்கிடையில் செவ்வாய் கிழமையன்று நாப் மாநாட்டில் அமெரிக்கா மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், மற்றும் இசிபியின் தலைமை பொருளாதார நிபுணர் பிலிப் லேன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

இந்தியாவின் நடப்பு கணக்கு
இந்தியாவின் நடப்பு கணக்கு ஜூன் காலாண்டில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 20 பில்லியன் டாலர் உபரியை கொண்டுள்ளது. இது இறக்குமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி, ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் வலுவான மென்பொருள் ஏற்றுமதியினால் வலிமையடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் உலகளாவிய எண்ணெய் விலை மற்றும் தங்கம் இறக்குமதி அதிகரிக்கும் பட்சத்தில் வர்த்தக பற்றாக்குறையானது அதிகரிக்கும் என்று ஆனந்த ரதி அறிக்கை தெரிவித்துள்ளது.

இன்று தங்கம் விலை எப்படி இருக்கும்?
தங்கம் விலையினை பொறுத்தவரையில் இன்று இந்திய சந்தையில் அக்டோபர் கான்டிராக்ட் எக்ஸ்பெய்ரி ஆவதால், நிச்சயம் அடுத்த கான்டிராக்டில் ரோலோவர் செய்ய வாங்கலாம். ஒரே நாளில் பலர் வாங்கும்போது தங்கம் விலையானது சற்று குறையவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் டிசம்பர் கான்டிராக்டில் இன்று விலையானது சரியவே வாய்ப்புகள் அதிகம். எனினும் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு நிச்சயம் இது ஒரு நல்ல இடம் தான் என நிபுணர்கள் கூறுகின்றனர்.