தங்கம் விலையானது சர்வதேச சந்தை மற்றும் உள்நாட்டு சந்தையில் புராபிட் புக்கிங் காரணமாக அழுத்தத்தில் காணப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமையன்று 1% அல்லது 507 ரூபாய் சரிவினைக் கண்டு, 50,230 ரூபாய் என்ற லெவலில் காணப்பட்டது.
இதே சர்வதேச சந்தையில் 1.07% குறைந்து, 1644 டாலர் என்ற லெவலில் காணப்பட்டது.
இது குறித்து சந்தை நிபுணர்கள், அமெரிக்காவின் ஜிடிபி தரவானது எதிர்பார்த்ததை விட மூன்றாவது காலாண்டில் பரவாயில்லை எனலாம். இதற்கிடையில் தங்கம் விலையானது காணப்பட்டது.
ஏன் சரிவு
எனினும் வார இறுதியில் தங்கம் விலை மீண்டும் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தின் மத்தியில் சரிவினைக் கண்டது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியது. அதோடு டாலரின் மதிப்பும் தொடர்ந்து ஏற்றம் காணத் தொடங்கியுள்ள நிலையில், இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியது.
முக்கிய சப்போர்ட் லெவல்
தங்கத்தின் விலையானது தற்போதைய சப்போர்ட் விலை 1630 டாலர்களாகவும் அதனை உடைத்தால் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் 1600 டாலர்களாகவும் உள்ளது. இதற்கிடையில் இந்திய சந்தையில் 10 கிராமுக்கு முக்கிய சப்போர்ட் லெவல் ஆக 49,700 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
எனினும் வரும் வாரத்தில் தங்கம் விலையினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு முதல் டாலர் வரையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
அமெரிக்க ஃபெடரல் வங்கி
தங்கம் விலையானது வரும் வாரத்தில் 1630 - 1685 டாலர்கள் வரையில் இருக்கலாம் என ஐஐஎஃப் எல் செக்யூரிட்டிஸ் கணித்துள்ளது. வரும் வாரத்தில் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் மீண்டும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக டாலரின் மதிப்பானது மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாலர் இன்டெக்ஸ்
அமெரிக்க பொருளாதார வளர்ச்சி விகிதமானது எதிர்பார்த்ததை விட மூன்றாவது காலாண்டில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக டாலரின் மதிப்பானது ஏற்றம் கண்டுள்ளது. இதனால் தங்கம் விலையானது கடந்த வார இறுதியில் அழுத்தத்தில் காணப்பட்டது. தொடர்ந்து 2 காலாண்டுகளாகவே சரிவினைக் கண்டு வந்த பொருளாதாரம், மூன்றாவது காலாண்டில் மேம்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வேலை வாய்ப்பு சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகின்றது.
தரகு நிறுவனத்தின் கணிப்பு
இதற்கிடையில் பணவீக்க அழுத்தமும் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு வட்டி விகிதத்தினை தூண்டலாம். வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன செய்யலாம்
எனினும் டிசம்பர் மாத கூட்டத்தில் இருந்து ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையானது மெதுவாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 50,100 ரூபாய் என்ற லெவலை ஸ்டாப் லாஸ் ஆக வைத்து, தற்போதைய லெவலில் வாங்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தேவை என்னவாகுமோ?
எனினும் இனி வரும் வாரங்களில் பிசிகல் தங்கத்தின் தேவையானது குறையலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது. குறிப்பாக தங்கத்தின் முக்கிய நுகர்வோராக இருக்கும் சீனாவில் தேவையானது சரியலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. சீனாவில் லாக்டவுன் நடவடிக்கையானது பல முக்கிய நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் விழாக்கால பருவம் முடிவடைந்துள்ள நிலையில் இந்தியாவிலும் தேவை குறையலாம்.


Click it and Unblock the Notifications