கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே தங்கம் விலையானது குறிப்பிட்ட ரேஞ்சுக்குள்ளேயே வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த வாரம் உச்சத்தினையும் தாண்டாமல், குறைந்தபட்ச விலையையும் உடைக்காமல் வர்த்தகமாகி வருகின்றது.
அதோடு நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது ஏற்றம் காணும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், அதனை நிரூபிக்கும் விதமாக தங்கம் விலையானது வர்த்தகமாகி வருகிறது.
ஏனெனில் கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ரேஞ்சுக்குள்ளேயே வர்த்தகமாகி வரும் தங்கம் விலையானது, அதிக மாற்றம் இல்லாவிட்டாலும் அதுவும் ஏற்றத்தில் தான் உள்ளது. அதிலும் இன்று காலையில் தொடக்கத்தில் இருந்தே, சர்வதேச பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது. எனினும் சற்று ஏற்றத்தில் உள்ளது. தங்கம் விலையின் இந்த தடுமாற்றம் மீண்டும் ஏற்றம் காண வழிவகுக்குமோ? என்ற உணர்வும் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.

தங்கத்தில் புராபிட் புக்கிங்
தங்கம் விலையானது கடந்த மூன்று வார காலமாகவே தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, அவ்வப்போது சற்று சரிவினைக் கண்டாலும், மொத்தத்தில் விலை ஏற்றம் கண்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில
தினங்களாக உள்ள தடுமாற்றம், தங்கத்தில் புராபிட் புக் செய்வதனால் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தில் இருந்து வரும் நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் உள்ளது. எனினும் பெரியளவில் மாற்றம் காணவில்லை. குறிப்பாக தற்போது அவுன்ஸூக்கு 6.45 டாலர்கள் அதிகரித்து, 1889.35 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் முந்தைய அமர்வில் 1882.90 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 1882.45 டாலர்களாக தொடங்கியுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று குழப்பத்தினையே ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் வெள்ளி
தங்கம் விலை சற்று ஏற்றத்தில் இருந்து வரும் அதே நேரத்தில், வெள்ளி விலையானது 1% மேலாக ஏற்றத்தில் உள்ளது. இது தற்போது 1.45% ஏற்றம் கண்டு, 26.602 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையும் கடந்த 6 - 7 வர்த்தக அமர்வுகளாகவே தடுமாற்றத்தில் உள்ள நிலையில், கடந்த வார உச்சத்தினையும் உடைக்காமல், குறைந்தபட்ச விலையும் உடைக்காமல் வர்த்தகமாகி வருகின்றது.
வெள்ளியின் விலையும் முந்தைய அமர்வில் 26.613 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 26.610 டாலர்களாக தொடங்கியுள்ளது கவனிக்கதக்கது.

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, கடந்த சில அமர்வுகளாகவே ஒரு ரேஞ்சுக்குள்ளேயே வர்த்தகமாகி வருகின்றது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 77 ரூபாய் அதிகரித்து, 50,116 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இந்திய சந்தையினை பொறுத்த வரையில் முந்தைய அமர்வில் 50,039 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 50,179 ரூபாயாக தொடங்கியுள்ளது.

உச்சத்தில் இருந்து குறைவு தான்
தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்தாலும், கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும் போது, 6000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான நேரமாகத் தான் பார்க்கப்படுகிறது. அதிலும் தற்போது பல காரணிகள் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், அது ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 553 ரூபாய் அதிகரித்து, 68,650 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. முந்தைய அமர்வில் வெள்ளி விலையானது முடிவில் 68,097 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 68,500 ரூபாயாக தொடங்கியுள்ளது. இதனால் வெள்ளி விலையானது சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

தங்கம் விலை எதிர்பார்ப்பு
தங்கமானது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக உள்ளது. கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில், புதிய வகை கொரோனாவுக்கு இந்த தடுப்பூசிகள் சாதகமாக இருக்குமா? இதனால் பொருளாதாரம் இன்னும் வீழ்ச்சியினை நோக்கி செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பொருளாதாரத்தினை மீட்க மீண்டும் ஊக்கத்தொகை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதெல்லாம் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிரது.

டாலர் Vs தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக தங்கம் உள்ளது. உலகின் முதல் பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்காவில், கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. மேற்கொண்டும் இரண்டாம் கட்ட கொரோனா பரவலானதும் அதிகரித்தும் வருகிறது. இதனால் மீண்டும் பொருளாதாரம் சரிவினைக் காணலாம். இதனால் டாலரின் மதிப்பு மீண்டும் சரிவினைக் காணலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம்
புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக, மீண்டும் ஒரு கடுமையான லாக்டவுன் அமலுக்கு வருமோ என்ற எண்ணமும் உள்ளது. ஆக அப்படி மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் பட்சத்தில் அது மீண்டும் ஏற்றத்திற்கே வழிவகுக்கும். எப்படி இருப்பினும் கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் அதிக விலையேற்றத்தினை தடுக்கலாம்.

தங்கத்திற்கு ஆதரவு
அமெரிக்க சீன பிரச்சனை, குறைவான வட்டி விகிதம், நிலவி வரும் அரசியல் பதற்றம் என பலவும் தங்கத்தினை விலைக்கு சாதகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பரவி வரும் புதிய வகை கொரோனா காரணமாக, மீண்டும் பொருளாதாரம் என்னவாகுமோ? தடுப்பூசியே செயல்பாட்டுக்கு வந்தாலும், இந்த புதிய வகை கொரோனாவுக்கு சரியாகுமா? என்ற நிலையும் இருந்து வருகிறது. அதோடு வரவிருக்கும் பண்டிகை காலங்களில், இந்தியா மற்றும் சீனாவில் தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதெல்லாம் அதிக விலை சரிவினை தடுக்கலாம்.

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?
நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர். எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் தங்கம் விலை உச்சத்தில் இருப்பதால் சற்று குறையும் போது வாங்கலாம். எனினும் நீண்ட கால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் தற்போது வாங்கலாம். ஏனெனில் கோடக் செக்யூரிட்டீஸ் தங்கத்தினை எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம். அது நிச்சயம் ஒரு நாள் லாபம் கொடுக்கும் என்றும் கூறியிருந்தது நினைவு கூறத்தக்கது. ஆக நீண்டகால நோக்கில் தங்கத்தினை வாங்கிக் கொள்ளலாம். எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.