சர்வதேச நாடுகளை பொறுத்தவரையில் தங்கம் ஒரு விலை உயர்ந்த ஆபரணம். ஆனால் இந்தியாவில் அது பாரம்பரிய சின்னமாகவும், மக்களின் அந்தஸ்தினை உயர்த்திக் காட்டும் ஒரு விலையுயர்ந்த ஆபரணமாகவும் உள்ளது.
இப்படி நம் உணர்வுகளில் கலந்துள்ள தங்கம் விலையானது, கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த நிலையில், நேற்று நல்ல ஏற்றத்தினை கண்டது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரும் ஏமாற்றத்தினை கொடுத்தது எனலாம்.
ஏனெனில் பலரும் குறைந்த விலையில் வாங்காமல் விட்டு விட்டோமே ? அப்போதே வாங்கியிருக்கலாமோ? வாங்கியிருந்தால் நல்ல லாபம் பார்த்திருக்கலாமே என்ற உணர்வுகள் எழுந்திருக்கும்.
அப்படியானவர்களுக்கு இன்று மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுக்கும் விதமாக, தங்கம் விலையானது சரியத் தொடங்கியுள்ளது. ஆக இது தங்கம் வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

இன்று இதெல்லாம் பார்க்கபோகிறோம்?
அதெல்லாம் சரி, இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் விலை எவ்வளவு? சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? கூடிருக்கா குறைந்திருக்கா? தங்கத்திற்கு சாதகமாக என்னென்ன காரணிகள்? இனி நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும்? இன்று வாங்கலாமா? உள்ளிட்ட பலவற்றையும் பார்க்கவிருக்கிறோம்.

2021ல் வளர்ச்சி பாதைக்கு வந்துவிடுவோம்
தங்கம் விலையானது நேற்று 2% மேலாக ஏற்றம் கண்ட நிலையில், இன்று மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது. கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகள் குறித்து சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில், இந்த விலை சரிவானது, சர்வதேச பொருளாதாரம் 2021ல் மீண்டு வந்து விடும் என்ற நேர்மறையான தாக்கங்களை முதலீட்டாளார்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் அமெரிக்காவின் ஊக்கத் தொகை பற்றிய அறிவிப்புகள் பொருளாதாரத்திற்கும், டாலருக்கும் இன்னும் சாதகமான விஷயமாக பார்க்கப்படும். ஆக தங்கம் விலையானது மீண்டும் சரிய தொடங்கியுள்ளது.

வெளியேறும் முதலீடுகள்
கடந்த சில வாரங்களாகவே தொடர்ச்சியாக சரிந்து வரும் தங்கம் விலையானது, கடந்த ஜூன் 2020 லெவலை தொட்டுள்ளது. கூடுதலாக கொரோனா தடுப்பூசி, அமெரிக்காவின் புதிய ஆட்சி மாற்றம், பாதுகாப்பு புகலிடத்திற்கு எதிராக உள்ளன. இதன் காரணமாக தங்கம் இடிஎஃப்பில் இருந்து முதலீடுகள் வெளியேற தொடங்கியுள்ளன. ஆக இதுவும் தங்கம் விலை சரிய காரணமாக அமைந்துள்ளன.

அதிகரித்து வரும் கொரோனா தாக்கம்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் இரண்டாம் கட்ட கொரோனா தாக்கம் மத்தியில், பொருளாதாரத்தினை மீட்டெடுக்க பெரிய அளவில் ஊக்கத்தொகை கொடுக்க வேண்டியிருக்கும். ஆக இதனால் பல நாடுகளின் கரன்சி மதிப்புகள் சற்று அழுத்தத்தினை காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது மீண்டும் தங்கம் விலையில் ஏற்படும் அதிக சரிவினைக் தடுக்கலாம்.

தடுப்பூசிகளுக்கு அவசர கால அனுமதி
அமெரிக்காவின் மாடெர்னா, பிப்சர் - பயோடெக் உள்ளிட்ட தடுப்பூசிகள், அவசர கால பயன்பாட்டுக்காக அனுமதி கோரியுள்ளன. இதனால் விரைவில் இவற்றிற்கு அனுமதி கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பொருளாதாரமும் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது. ஆக இதனால் தங்கம் விலையானது குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நேற்று 2% மேலாக ஏற்றம் கண்ட நிலையில், இன்று தங்கம் விலையானது சற்று குறைந்து வருகிறது. தற்போது அவுன்ஸூக்கு 7.15 டாலர்கள் குறைந்து, 1812.55 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இன்று தங்கம் விலையானது குறைந்திருந்தாலும், மீடியம் டெர்ம் வர்த்தகத்தில் சற்று அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலையினை போலவே வெள்ளியின் விலையும் நேற்று பலமான ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்று வீழ்ச்சி கண்டு வருகிறது. தற்போது 1.49% குறைந்து, 23.730 டாலர்களாக குறைந்துள்ளது. வெள்ளி விலை கடந்த அமர்வில் 24.090 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 23.298 டாலர்களாக தொடங்கியுள்ளது கவனிக்கதக்கது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 97 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 48,470 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. நேற்று 48,567 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 48,459 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது இன்னும் வீழ்ச்சி காணும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி நிலவரம்
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் சரிவில் தான் காணப்படுகிறது. எம்சிஎக்ஸ் வெள்ளியின் விலை கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக சரிந்து வந்த நிலையில், இன்றும் கிலோவுக்கு 698 ரூபாய் குறைந்து, 62,500 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, சற்று குறைந்தே தொடங்கியுள்ளது. மீடியம் டெர்மில் தங்கம் விலை குறைந்தாலும், நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் வாங்கலாமா?
நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறி வருகின்றனர். எனினும் இன்று சற்று சரிவினைக் கண்டுள்ள நிலையில், மீண்டும் ஏற்றம் காணும் விதமாகவே கேண்டில் பேட்டர்ன்களும் காணப்படுகிறது. ஆக நீண்ட கால நோக்கில் தங்கத்தினை வாங்கலாம். மீடியம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நல்லது.