வாரத்தின் முதல் நாளான இன்று முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் கொடுக்கும் விதமாக தங்கம் விலை கிடு கிடு ஏற்றத்தில் காணப்படுகிறது. எனினும் ஏற்கனவே வாங்கியவர்களுக்கு இது நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும். மீடியம் வர்த்தகர்கள் பலரும் வாங்கியிருக்க வாய்ப்பில்லை. ஆக அவர்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும்.
போகிற போக்கினை பார்த்தால் நிபுணர்கள் சொன்னது போல் மீண்டும் புதிய உச்சத்தினை தொட்டு விடும் போல் இருக்கிறது. அதிலும் இந்த மாதம் இறுதி வரையில் தங்கம் விலை அதிகரிக்கலாம். எனினும் அடுத்தாண்டின் தொடக்கத்தில் சற்று சரிவு இருக்கலாம் என்றும் சமீபத்திய செய்திகளில் பார்த்தோம்.
தற்போது அதனை உண்மையாக்கும் விதமாக, தங்கம் விலையானது, மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.
ஜியோ உடன் போட்டிபோட வோடபோன் ஐடியா ரெடி.. 3 நிறுவனங்கள் முதலீடு செய்ய ஒப்புதல்..!

முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பம்
ஆனால் இந்த நேரத்தில் தங்கத்தினை வாங்கலாமா? இங்கிருந்து இப்படியே ஏற்றம் காணுமா? அல்லது குறையுமா? அடுத்து என்ன செய்யலாம் என்ற குழப்பம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தங்கத்திற்கு சாதகமான காரணிகள் எல்லாம் மாறிவிட்ட நிலையில், தங்கம் விலை குறைய ஏதுவான பல காரணிகள் தற்போது உள்ளன. ஆனால் தங்கம் விலையானது அவ்வாறு இல்லாமல், மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது என்ன காரணம் என்ற குழப்பம் பலரின் மனதிலும் எழுந்துள்ளது.

இன்று என்னவெல்லாம் பார்க்கபோகிறோம்?
இன்றைய சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் விலை நிலவரம் என்ன? இனி விலை குறையுமா? இப்படியே கூடுமா? இப்போது வாங்கலாமா? தங்கத்திற்கு சாதகமான காரணிகள் என்னென்ன? பாதகமாக காரணிகள் என்னென்ன? தற்போது நீண்டகால நோக்கில் வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? இப்படி நல்ல ஏற்றம் கண்டு வரும் நிலையில் வாங்கலாமா? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர், அடுத்த சப்போர்ட் அன்ட் ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் இன்று வாரத் தொடக்கத்திலேயே நிபுணர்களின் கணிப்பினை எல்லாம், முறியடித்து மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இன்றே கடந்த உச்சத்தினை எல்லாம் தாண்டி வர்த்தகமாக தொடங்கியுள்ளது. தற்போது தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 16.05 டாலர்கள் அதிகரித்து 1904.95 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் விலையானது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. இது இன்னும் விலை ஏற்றம் காணலாம் என்பது போலவே காணப்படுகிறது.

சர்வதேச வெள்ளி விலை
வெள்ளியின் விலையானது பட்டையை கிளப்பிக் கொண்டு ராக்கெட் வேகத்தில் பறந்து கொண்டுள்ளது. இது தற்போது சர்வதேச சந்தையில் கிட்டதட்ட 4% ஏற்றம் கண்டுள்ளது. வெள்ளியின் விலையும் கடந்த வார உச்சத்தினை எல்லாம் தாண்டி பறந்து கொண்டுள்ள நிலையில், தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலை 3.71% அதிகரித்து, 26.988 டாலர்களாக காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்
கடந்த வாரத்தில் இருந்தே தொடர்ச்சியாக சில வர்த்தக தினங்கள் தவிர்த்து, ஏற்றத்தினை கண்டு வரும் தங்கம் விலையானது, இன்றும் வலுவான ஏற்றத்தினைக் கண்டுள்ளது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 503 ரூபாய் அதிகரித்து, 50,807 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் 7 அன்று தொட்ட உச்சத்தில் இருந்து பார்க்கும் போது, 5,300 ரூபாய்க்கு மேல் சரிவிலேயே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்
சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய காமடிட்டி வர்த்தகத்திலும் வெள்ளி விலையானது இன்று காலை தொடக்கத்திலேயே செம ஏற்றத்தில் தான் தொடங்கியது. அதுவும் முந்தைய நாள் முடிவு விலையினை விட, தொடக்கத்தில் அதிகமாக தொடங்கியுள்ள நிலையில், இன்று இன்னும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 2714 ரூபாய் அதிகரித்து, 70,621 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சமான 77,700 ரூபாயாக அதிகரித்திருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது கிட்டதட்ட 7000 ரூபாய்க்கும் மேல் குறைவாகத் தான் உள்ளது.

இது வாங்க சரியான நேரமா?
தற்போது பலரின் மனதிலும் எழுந்துள்ள ஒரே கேள்வி, இவ்வாறு வலுவான ஏற்றத்தினை கண்டுள்ள தங்கத்தினை தற்போது வாங்கலாமா? என்பது தான். ஏனெனில் பல காரணிகள் தங்கத்திற்கு எதிராக உள்ள நிலையில் தற்போது வாங்கலாமா? என்பது தான். இன்னும் சில நாட்களில் பண்டிகை நாட்கள் வரவிருக்கும் நிலையில், ஆபரண தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக விலை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் விலை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இன்னும் விலையேற்றத்தினை அது ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பாட் தங்கம் விலை
சர்வதேச ஸ்பாட் தங்கத்தில் முதலீட்டாளர்கள் தற்போது முதலீடு செய்து வரும் நிலையில், அது தங்கத்திற்கு ஆதரவாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. அதோடு அமெரிக்காவில் ஊக்கத் தொகை விரைவில் எட்டக்கூடிய தொலைவில் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெள்ளியின் விலையும் கிட்டதட்ட 4% ஏற்றத்தில் உள்ளது.

ஊக்கத் தொகை பற்றிய எதிர்பார்ப்பு
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதார சரிவினை மீட்டெடுக்க, ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது இது குறித்து இரு தரப்பினரும் ஒரு சூமூக நிலையை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதன் முன்னேற்றமான நிலையை முதலீட்டாளர்கள் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

நிபுணர்களின் கணிப்பு
10 கிராம் தங்கம் விலையின் முக்கிய ரெசின்ஸ்டன்ஸ் விகிதம் 50,800 ரூபாயாகும். இது தற்போது அதனையும் உடைத்துக் கொண்டு மேலே சென்று கொண்டுள்ளது. எனினும் தங்கம் விலையில் மீண்டும் ஒரு திருத்தம் இருக்கும். தங்கத்தின் முக்கிய சப்போர்ட் விலை 50,100 ரூபாயாகும். எனினும் ஜப்பான் அரசு கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வர பத்திர விற்பனை அதிகரித்துள்ளது. ஆக இது விலை உயர்ந்த ஆபரணங்களின் விலைக்கு சாதகமாக அமையலாம். இதுவும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையேற்றத்துக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அதிகரிக்கும் கொரோனா பரவல்
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒரு புறம் தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டு இருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சில பகுதிகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட கொரோனா பரவலானது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் லாக்டவுன் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசியே செயல்பாட்டுக்கு வந்தாலும், அது அனைவருக்கும் கிடைக்க, இன்னும் சில காலம் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கம் விலைகு ஆதரவாகவே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?
பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக தங்கம் இருப்பதால், நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறிவது, சற்று யோசிக்க வேண்டிய விஷயமே. ஏனெனில் தடுப்பூசியே செயல்பாட்டுக்கு வந்தாலும், பொருளாதாரம் மீண்டு வர சில காலம் ஆகும். இது தங்கம் விலைக்கு சாதகமாக இருக்கும். ஆக நீண்டகால நோக்கில் வாங்கலாம். எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நல்லது.