திருச்சி: உலகளவில் இந்தியாவிலும், சீனாவிலும் மட்டுமே தங்கம் பயன்பாடு இருக்கிறது. நம் நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை அணிவது அதிக மகிழ்ச்சியை கொடுக்கிறது. மேலும் முதலீடு செய்வதற்கு ஒரு நம்பகமான வாய்ப்பு மற்றும் நிதி நெருக்கடியான காலத்தில் அவசரத்துக்கு தங்கத்தை பயன்படுத்தி பணத்தை வாங்கி கொள்ளலாம் போன்ற நன்மைகள் இருப்பதால் இந்தியாவில் எப்போதும் தங்கத்துக்கான தேவை இருந்து கொண்டு இருக்கும். அதேசமயம் இந்தியாவில் தங்க உற்பத்தி மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் உள்நாட்டு தங்க தேவையை பூர்த்தி செய்ய தங்கம் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. அதேசமயம் தங்கம் இறக்குமதியை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு அதிக வரி விதிக்கிறது.

இதனால் வெளிநாட்டு சந்தையை காட்டிலும் உள்நாட்டில் தங்கத்தின் விலை அதிகமாக உள்ளது. உதாரணமாக, துபாயில் தங்கத்தின் விலை இந்தியாவை காட்டிலும் குறைவு. இதனால் கடத்தல்காரர்கள் துபாய் போன்ற வெளிநாட்டு சந்தைகளில் இருந்து தங்கத்தை வாங்கி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கொண்டு வந்து கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். அதேசமயம் தங்க கடத்தலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விமான நிலையங்களில் சுங்க வரித்துறை அதிகாரிகள் விமான பயணிகளை தீவிர சோதனை செய்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இருப்பினும் கடத்தல்காரர்கள் புது புது வழி முறைகளில் தங்க கடத்தலை ஜோராக மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் சுங்க வரித்துறை அதிகாரிகளிடம் சில முறை மாட்டி கொள்கின்றனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று திருச்சி விமான நிலையத்தில், பேஸ்ட் வடிவில் ரூ.37.58 லட்சம் மதிப்புள்ள 612 கிராம் 24 காரட் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்த சானிட்டரி நாப்கின்களை சுங்க வரித்துறை அதிகாரிகள் மீட்டனர். சானிட்டரி நாப்கின்களில் தங்கத்தை மறைத்து விமான நிலையத்துக்கு வந்தவர்கள் யார் என்ற தகவல் தெரியவில்லை. திருச்சி விமான நிலையத்தில் வழக்கத்துக்கு மாறான பொருட்களில் இருந்து தங்கம் மீட்கப்படுவது இது முதல் முறையல்ல.
கடந்த ஆகஸ்ட் மாதம் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமான பயணியிடம் ரூ.8.9 லட்சம் மதிப்பிலான 149 கிராம் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிப்பப்பட்ட பயணி, தங்கத்தை பவுடராக்கி இரண்டு நூட்டெல்லா ஜார்களில் போட்டு கொண்டு வந்து இருந்தார். இருப்பினும் சுங்க வரித்துறை அதிகாரிகளின் சோதனையில் அந்த கடத்தல் தங்கம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications