360 ஒன் வெல்த் ஹூரன் இந்தியா சர்வதேச அளவில் பெரும் பணக்கார இந்திய நிர்வாகிகள் பட்டியல் 2023-ஐ வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நாம் நினைக்கிற மாதிரியே சுந்தர் பிச்சை, ஜெயஸ்ரீ உல்லால் போன்றவர்கள் இடம் பிடித்துள்ளனர். ஆனால் இதில் ஒரு சுவராஸ்யமான விஷயம் இருக்கு.
உலக பணக்கார இந்திய நிர்வாகிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் கூகுள் கிளவுட் பிரிவின் தலைமை செயல் அதிகாரி தாமஸ் குரியன். இவரது சொத்து மதிப்பு அவரது பாஸ் மற்றும் கூகுளின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையை காட்டிலும் சுமார் 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தாமஸ் குரியன் அவர்களின் சொத்து மதிப்பு ரூ.15,800 கோடி அதேசமயம் கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு ரூ.5,300 கோடி தான்.
1966ல் கேரளாவில் பிறந்த இரட்டையர்களில் ஒருவர் தான் தாமஸ் குரியன். பெங்களூருவில் உள்ள செயிண்ட் ஜோசப் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் தாமஸ் குரியனும், இரட்டையர்களில் மற்றொருவரான ஜார்ஜ் குரியனும் படித்தனர்.
படிப்பில் சிறந்தவர்களாக இருந்ததால் சகோதரர்கள் இருவருக்குமே மெட்ராஸ் ஐ.ஐ.டி.யில் இடம் கிடைத்தது. இருப்பினும் அமெரிக்காவில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்ததால் 16 வயதில் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தனர்.
தாமஸ் குரியன் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படித்தார். பின்னர் ஸ்டான்போர்ட் கிராஜூவேட் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் எம்.பி.ஏ. முடித்தார். படித்தது போதும் இனி வேலை பார்ப்போம் என்று வேலையை தேட தொடங்கினார்.
மெக்கின்சி அண்ட் கம்பெனியில் முதன் முதலாக வேலைக்கு சேர்ந்தார். அங்கு சுமார் 6 ஆண்டுகள் வேலை பார்த்தார், பின்னர் 1996ல் ஆரக்கிள் நிறுவனத்தில் தாமஸ் குரியன் சேர்ந்தார். அந்த நிறுவனத்தில் சுமார் 22 ஆண்டுகள் பல முக்கிய பதவிகளில் வர்த்தகத்திலும், வருவாயிலும், நிர்வாகத்திலும் பெரும் பங்கு வகித்தார்.

அவர் உருவாக்கிய தயாரிப்புகள் அந்நிறுவனத்துக்கு 3,500 கோடி டாலர் வருவாயை கொண்டு வந்தன. மேலும் கிளவுட் வருவாய் 550 கோடி டாலரை தாண்டியது. உலகின் பணக்கார இந்திய நிர்வாகியாக இருந்தார். இந்த சூழ்நிலையில், 2018ல் ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்த வேலையை துறந்தார்.
இதன் பின்னர் தான் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். 2018 முதல் கூகுள் கிளவுடின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 2022ல் கூகுள் கிளவுட் சுமார் 2.1 லட்சம் கோடி வருவாய் ஈட்டியது. இது கூகுள் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 9.3 சதவீதமாகும்.
தாமஸ் குரியனின் சொத்து மதிப்பு ரூ.15,800 கோடி. இது மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளாவின் சொத்து மதிப்பை காட்டிலும் 2 மடங்கு அதிகமாகும். சத்யா நாதெள்ளாவின் சொத்து மதிப்பு ரூ.7,500 கோடி.


Click it and Unblock the Notifications