இந்தியாவில் ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட செயலிகள் வாயிலாக உணவு ஆர்டர் செய்யும் போக்கு அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது. இந்த நிலையில் ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் இதுபோன்ற தளங்களில் இணைந்து உணவு டெலிவரி செய்யக்கூடிய உணவகங்கள் பேக்கேஜிங் மீதான வரிகளை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்கின்றனவா என ஆய்வு நடத்த தொடங்கியுள்ளன.
இந்தியாவில் 2017 ஜூலை 1ஆம் தேதியிலிருந்து ஜிஎஸ்டி சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதன்படி சேவை வழங்கக்கூடிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து ஜிஎஸ்டியை பெற்று அதனை அரசிடம் வழங்க வேண்டும். அந்த வகையில் வாடிக்கையாளராகிய நாம் ஆன்லைன் செயலிகள் வாயிலாக உணவு ஆர்டர் செய்யும் போது உணவு , டெலிவரி மற்றும் பேக்கேஜிங் ஆகிய மூன்றுக்கும் கட்டணத்தை செலுத்துகிறோம்.

இதில் பேக்கேஜிங் மீதும் வரியானது விதிக்கப்படுகிறது. வாடிக்கையாளரிடமிருந்து தான் இது வசூல் செய்யப்படுகிறது. ஆனால் பெரும்பாலான உணவு நிறுவனங்கள் இந்த பேக்கேஜிங் கட்டணங்களுக்காக பெரும் வரியை அரசிடம் வழங்காமல் வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனை அடுத்து சோமேட்டோ போன்ற தளங்களில் இணைந்து உணவு விற்பனை செய்யும் நிறுவனங்கள் 2022 ஜனவரி 1 முதல் தற்போது வரையிலான பேக்கேஜிங் கட்டணங்களுக்கான ஜிஎஸ்டி பேமென்ட்களை செலுத்தியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஜிஎஸ்டி சட்டத்தின்படி நாம் ஒரு பொருளை வாங்கும் போது அதனை பேக் செய்து நமக்கு டெலிவரி செய்கிறார்கள் என்றால் அதில் இருக்கும் முக்கியமான பொருளுக்கு பொருந்தக் கூடிய வரி தான் வரியாக விதிக்கப்படும். ஆனால் இந்த பேக்கேஜ் கட்டணம் தனி கட்டணமாக காண்பிக்கப்பட்டு பின்னர் தான் மொத்த கட்டணத்தில் சேர்க்கப்படுகிறது . எனவே ஜிஎஸ்டி சட்டத்தின் படி இந்த பேக்கேஜிங் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி வரியை உணவகங்கள் அரசுக்கு செலுத்தி ஆக வேண்டும்.
ஆனால் பெரும்பாலான உணவகங்கள் அவ்வாறு செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்வதாக தான் தற்போது சந்தேகம் எழுந்திருக்கிறது. இந்த வரியை உணவகங்கள் செலுத்த வேண்டுமா அல்லது சோமேட்டோ , ஸ்விக்கி போன்ற செயலிகள் இந்த வரியை செலுத்த வேண்டுமா என்ற குழப்பம் நீண்ட காலமாக இருந்து வருகிறது என இந்த துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக ஆயிரம் ரூபாய்க்கு நீங்கள் உணவு ஆர்டர் செய்கிறீர்கள் என்றால் அதில் டெலிவரி மற்றும் பேக்கேஜிங் உள்ளிட்டவற்றோடு சேர்ந்து 1260 ரூபாய் நீங்கள் கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும். இதில் சோமேட்டோ, ஸ்விக்கி போன்ற செயலிகள் ஜிஎஸ்டி மற்றும் அவர்களுக்கான கமிஷன் தொகையை பெற்றுக்கொண்டு மீதமுள்ள தொகை தான் உணவகங்களுக்கு வழங்கும். இதில் தான் பேக்கேஜிங் மீதான ஜிஎஸ்டி தொகையை உணவகங்கள் செலுத்துவதா அல்லது இந்த செயலிகள் செலுத்துவதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications